வீழ்ச்சியின் விளிம்பில் டாமின்நிறுவனம்
Source: www.dinamani.com
சென்னை, ஆக. 15: "டாமின்' எனப்படும் தமிழ்நாடு கனிம நிறுவனம் இப்போது மோசமான நிலையில் இருப்பதற்கு குவாரிகளில் கல் எடுக்க தனியாரை அனுமதிப்பதே காரணம் என்று டாமின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முறைகேடாக கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. 16,000 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இப்போது மதுரையில் செயல்பட்டு வந்த சில தனியார் கிரானைட் நிறுவனங்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளிலும் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் வெளிவருவதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரிகளுக்கும் அந்தப் பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் நடந்திருக்குமா என்பதே பல்வேறு மக்களின் கேள்வியாக உள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் மீது மட்டுமல்லாமல், இதற்கு துணைபோன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் விசாரிக்க வேண்டும் என்று டாமின் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு கனிம நிறுவனம்: தமிழகத்தில் இயற்கையாக கிடைக்கும் கனிம வளங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்ய தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) 1979-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் கிடைக்கும் கனிமங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்வதே இந்த நிறுவனத்தின் பணி. டாமின் நிறுவனத்தின் முக்கிய வருவாயாக கிரானைட் கற்கள் உள்ளன. அதன்பிறகு கிராஃபைட், மைகா உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன.
ஒருகாலத்தில் கனிமங்களை வெட்டியெடுத்து டாமின் நிறுவனமே விற்பனை செய்து வந்தது. இதன்காரணமாக அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கிரானைட் குவாரிகளில் வெட்டியெடுக்க தனியாருக்கு ஒப்பந்த முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது.
முறைகேடு நடந்த விதம்: டாமின் கிரானைட் குவாரிகள் இரண்டு வகைகளில் தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் அளிக்கப்படும், கற்களை எடுத்து டாமின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொன்று, கற்களை எடுத்து தாங்களே விற்பனை செய்வது. வெட்டியெடுக்கப்படும் கற்களுக்கு முறைகேடான கணக்கு எழுதுவது போன்ற வகையில் இந்த முறைகேடு நடந்து வருகிறது.
இப்படி வெட்டியெடுக்க நவீன கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த கருவிகளை அரசு வாங்கித்தர தவறியதால், ஒப்பந்தம் எடுத்தவரிடமே கருவிகளை வாடகைக்கு வாங்கித்தான் டாமின் நிறுவனம் செயல்படுகிறது. இதனால் பெரும் செலவு ஏற்படுகிறது.
மேலும், டாமின் குவாரிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலேயே தனியார் கிரானைட் நிறுவனங்கள் தங்கள் குவாரிகளை அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் டாமின் குவாரிகளில் இருந்து முறைகேடாக கற்களை வெட்டியெடுத்து தங்கள் குவாரிகளில் எடுக்கப்பட்டது போன்று கணக்கு எழுதி வருகின்றனர்.
இந்த முறைகேடுகள் அனைத்தும் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடப்பதாகவும், இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும், மதுரை மட்டுமல்லாமல் விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளிலும் இதே நிலைமைதான் என்றும் டாமின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் கே. விஜயன் கூறியது: "டாமின் நிறுவனத்தில் கட்டாய ஆள்குறைப்பு செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சில புதிய ஊழியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் வாரிசு வேலை மூலம் பணியில் சேர்ந்தவர்கள். இப்போது டாமின் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
மேலும் டாமின் நிறுவனம் நவீன இயந்திரங்கள் இல்லாமல் தவிக்கிறது. இதனைப் பயன்படுத்தி, வாடகைக்கு இயந்திரங்கள் வழங்குபவர்கள், இயந்திரங்களை இயக்காமலேயே இயக்கியதாக கணக்கு எழுதுகின்றனர்.
எல்லாம் தனியாருக்கு... அதிகரித்துள்ள ஊழலால் டாமின் தள்ளாடும் நிலையில் உள்ளது. கிரானைட் முழுவதும் வெட்டியெடுக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே டாமின் நிறுவனத்திடம் உள்ளன. மற்ற குவாரிகள் அனைத்தும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கிரானைட் நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன. கிரானைட் குவாரிகள் மூலம் தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும்போது, டாமின் நிறுவனத்தாலும் லாபகரமாக செயல்படமுடியும். டாமின் நிறுவனத்தை மீட்டால், அரசுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும். இதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டாமின் நிறுவனம் மீண்டும் லாபகரமாகச் செயல்படவேண்டும் என்றால், தனியார் ஒப்பந்த முறையில் குவாரிகள் நடத்த அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். டாமினுக்கு தேவையான ஆள்களை நியமித்து, நவீன இயந்திரங்கள் வாங்க வேண்டும். இந்த இயந்திரங்களை அரசே வாங்கித்தர வேண்டும். புவியியல் துறையுடன் இணைந்து டாமின் செயல்படவேண்டும்.
முறைகேட்டுக்கு துணைபோன அனைத்து அதிகாரிகளையும், இதுவரை ஒப்பந்த முறையில் குவாரிகளை நடத்தியவர்களையும் விசாரணைக்குள் கொண்டுவர வேண்டும்', என்றார் விஜயன்.
இது தொடர்பாக டாமின் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
சென்னை, ஆக. 15: "டாமின்' எனப்படும் தமிழ்நாடு கனிம நிறுவனம் இப்போது மோசமான நிலையில் இருப்பதற்கு குவாரிகளில் கல் எடுக்க தனியாரை அனுமதிப்பதே காரணம் என்று டாமின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment