தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை


தி.மு.., ஆட்சியில் துவக்கப்பட்டது என்ற காரணத்தால், தமிழகத்தில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கும், மாநில அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், மற்ற திட்டங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டத்தை, 1,815 கோடி ரூபாயில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2010, செப்டம்பரில் துவக்கியது. 20 சதவீத பணி மட்டுமே நடந்த நிலையில், கூவத்தில் நீரோட்டத்தைப் பாதிக்கும் வகையில், பணி நடப்பதாக தமிழக அரசு தடை விதித்தது. பிரதமரின் ஆலோசகர் உள்ளிட்டோர், மாநில அரசுடன் பலகட்ட பேச்சு நடத்தியும் பயனில்லை. 485 நாட்களைக் கடந்தும் பணிகள் முடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, 630 கோடி ரூபாய் மதிப்பிலான, கோவை - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், மாநில அரசு சிக்கல் செய்தது. சட்ட ரீதியாக வாய்ப்பில்லாத இடத்தில் சுங்கச்சாவடியை அமைக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில், திட்டத்திற்கான முன் அனுமதியை மாநில அரசு ரத்து செய்ததால், அதிருப்தியடைந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சில தினங்களுக்கு முன், திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
இதுகுறித்து, திட்ட இயக்குனர் கணேஷ்குமார் கூறுகையில், ""மாநில அரசு, திட்டத்தை செயல்படுத்த விடாத வகையில் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தது. திட்ட வரைவுப்படி, சுங்கச்சாவடி அமைய வேண்டும். இதை, வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியது,'' என்றார். மேலும், ""நகராட்சி எல்லையில் இருந்து, 10 கி.மீ., தூரத்திற்குள் சட்ட ரீதியாக சுங்கச்சாவடி அமைக்க முடியாது என, தெரிவித்ததும், மாநில அரசு அளித்த 
முன் அனுமதியை ரத்து செய்தது. எனவே, வேறு வழியின்றி திட்டம் கைவிடும் நிலை ஏற்பட்டது,'' என்றார்.

மாநில அரசு பணி என்ன?
* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளும் பணிகளுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.

* திட்டத்திற்கு தேவையான நிலங்களை ஆர்ஜிதம் செய்து, ஒப்படைக்க வேண்டும்.

* திட்டப்பணிக்கு தேவையான சவுடு மண், ஜல்லி போன்றவற்றை பெற, மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளிக்க வேண்டும்
ஆனால், மாநில அரசு, தமிழகத்தில் நடக்கும் எந்த திட்டத்திற்கும், ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாமலும், நில ஆர்ஜிதம், மண், ஜல்லி எடுக்க அனுமதி தராமலும் இருந்து வருவதால், துவக்கப்பட்ட பணிகளும் செயல்படுத்த முடியாமல் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆணையத்தின் பொது மேலாளர் ரெட்டி கூறுகையில், ""மாநில அரசு வேண்டுமென்றே, இரண்டு ஆண்டுகளாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஒத்துழைக்கவில்லை; மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படவில்லை,'' என்றார்.
காரணம் என்ன? 
தமிழகத்தில் நடந்து வரும், 13 திட்டங்களும் (பட்டியல் தனியாக), கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தின் போது துவக்கப்பட்டவை தான். மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு ஆர்வம் காட்டினார். ஆட்சி மாற்றத்திற்கு முன் அவசரம் அவசரமாக ஒப்பந்தம் கோரி, பூஜை போடும் பணிகளும் முடிந்தன. தி.மு.., காலத்தில் துவக்கியது என்ற காரணத்திற்காக, மாநில அரசு 
தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது. "இதைத் தவிர வேறு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை' என்று, பெயர் வெளியிட விரும்பாத, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி வெளிப்படையாக பேசினார்.
திட்டங்களின் கதி என்ன? 
தமிழகத்தில், 9,278 கோடி ரூபாயில், 1,136 கி.மீ., தூரத்திற்கு, 13 திட்டங்களை தேசிய ஆணையம் செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் மந்த கதியில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 13 திட்டங்கள் (பட்டியல் தனியாக) திட்ட வரைவு தயாரித்தல், ஒப்பந்தம் கோரும் நிலையிலும் உள்ளன. "மாநில அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதால், தமிழகத்தில் பணிகளை ஏன் எடுத்தோம் என, ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர். திட்டங்களைச் செயல்படுத்த நாங்கள் நினைத்தாலும், ஒப்பந்ததாரர்கள் முன் வருவரா என்ற சந்தேகம் உள்ளது' என, ஆணைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் கூறுகையில், ""மாநில அரசு, மாநில வளர்ச்சியைப் பார்க்க வேண்டுமே தவிர, எந்த ஆட்சியில், யாரால் துவங்கப்பட்டது என, பார்ப்பது சரியல்ல. தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களால் மாநிலம் வளர்ச்சி பெறும்; நெரிசல் தீரும். திட்டங்களுக்கு ஒத்துழைப்பதோடு, எங்கள் காலத்தில் கொண்டு வந்தோம் என, மேலும் பல திட்டங்களை, மாநில அரசு கொண்டு வரலாம்,'' என்றார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம். இது போன்ற திட்டங்கள் வருவதால் தான், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் சென்னையில் தொழில் துவங்க முன் வந்துள்ளன. சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் முடங்குவது, மாநில வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்.
-
நமது நிருபர் -


Comments

  1. I just could not depart your site prior to suggesting
    that I extremely enjoyed the usual information an individual provide in your guests?
    Is going to be back incessantly in order to check out new posts

    Also visit my homepage ... diy improvements

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire