Friday, August 9, 2013

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?


Source:http://www.bbc.co.uk/tamil/india/2013/08/130805_colomboportexpansion.shtml

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 மிலியன் டாலர் செலவிலான இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கொழும்பு துறைமுகமும் விஸ்தரிக்கப்பட்டிருப்பது தென்னிந்திய மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு தென்னிந்திய துறைமுகங்களைப் பாதிக்கும் என்கிறார் சென்னையில் தனியார் சரக்கு நிறுவனம் ஒன்றின் ஆலோசகராகப் பணியாற்றும் கப்பல் தொழில் நிபுணர் கேப்டன் அவினாஷ்.
கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் இருப்பதால், பிரதான கடல் வாணிகப் பாதைகளின் சந்தியில் அது பூகோளரீதியாகவே அமைந்திருக்கிறது. ஆனால், சென்னைத் துறைமுகத்துக்கு இந்த இயற்கையான அனுகூலம் இல்லை. மலாக்கா ஜலசந்தியிலிருந்து வரும் கப்பல்கள் அல்லது மேற்குக் கடற்பரப்பிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் கப்பல்கள் சென்னை வரவேண்டுமானால் , அதற்காக ஒரு மாற்றுப் பாதையில் சுற்றிவரவேண்டியிருக்கிறது.
இந்த சுற்றுக்காகும் செலவை ஈடுகட்டவேண்டுமானால் சென்னை போன்ற இந்தியத் துறைமுகங்கள் தங்களது துறைமுகத்தில் கப்பல் நிற்பதற்காகும் செலவை குறைத்தால்தான் , இத்துறைமுகங்கள் கொழும்புடன் போட்டி போட முடியும் என்றார் கேப்டன் அவினாஷ்.
மேலும், கொழும்பு துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டதைப் போல இந்தியத் துறைமுகங்களின் வளர்ச்சிக்கான தெளிவான திட்டங்கள் இல்லை. கேரளத்தின் கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வல்லர்பாடம் கண்டெயினர் முனையம் சரியான வகையில் அமல்படுத்தப்படவில்லை என்றார் அவினாஷ்.

பாதிப்பில்லை

தூத்துக்குடி துறைமுகமோ அல்லது பிற தென்னிந்திய துறைமுகங்களோ கொழும்பு துறைமுக விஸ்தரிப்பால் பாதிக்கப்படும் என்ற கருத்தை தூத்துக்குடி துறைமுகப் பயன்பாட்டளரும், அகில இந்திய வணிக சபையின் தலைவருமான ராஜா சங்கரலிங்கம் மறுக்கிறார்.

இந்தியத் துறைமுகங்கள் வேகமாக சரக்குகளை ஏற்றி, இறக்கும் செயல்பாடுகளைக் கொண்டவை என்று கூறும் இவர், மேலும், இந்தியப் பொருளாதாரம், ஒரு உற்பத்தி மையமாக இருந்து வரும் நிலையில், கொழும்பு துறைமுகம் விஸ்தரிக்கப்படுவதால், இந்தியத்துறைமுகங்கள் பெரிதும் பாதிக்கப்படாது என்றார்.


மேலும், தூத்துக்குடி துறைமுகத்தின் புறநகர் வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருந்தொகையை சமீபத்தில் ஒதுக்கியிருக்கிறது என்றும், தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தினை ஆழப்படுத்தி, மேலும் அதிக கொள்ளளவுள்ள கப்பல்கள் வந்து போகும் வண்ணம் செய்யுமாறு மத்திய அரசுக்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் ராஜா சங்கரலிங்கம் கூறினார்.

No comments:

Post a Comment

Kids Enjoying in Village Pond