இந்தியாவை எதிர்க்கவில்லை, ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்:தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படை வீரர் விஜிதமுனியின் பேட்டி

Source: http://www.virakesari.lk/article/feature.php?vid=121

இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல.
இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது.

நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவகுப்பின்போது தாக்குதலை நடத்தினேன் என முன்னாள் கடற்படை வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்தார்.

இன்று நாட்டில் ‘காளான்கள்’ முளைத்தது போல் தேசப்பற்றாளர்கள் முளைத்துள்ளனர். இது உண்மையான தேசப்பற்றல்ல அரசியல் வயிற்றுப் பிழைப்புக்காகவும் அதிகாரத்தை பாதுகாப்பதற்காகவுமே தேசப்பற்றை போர்வையாக போர்த்திக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே தனது மனம் விட்டு இத்தகவல்களை வெளியிட்டார்.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி அன்றைய இந்திப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அடுத்த தினம் 30ஆம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ராஜீவ் காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதன் போதே அன்று கடற்படை வீரராக அணிவகுப்பில் கலந்துகொண்ட விஜித ரோஹன விஜிதமுனி ராஜீவ் மீது தனது கையிலிருந்த துப்பாக்கியின் பின் முனையினால் தாக்குதல் நடத்தி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்று நாட்டில் 13ஆவது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும். மாகாண சபை தேவையில்லையென்ற ‘விவாதம்’ தலைதூக்கியுள்ளது.

இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே 1987இல் ராஜீவ் மீது தாக்குதலை நடத்திய விஜித ரோஹண விஜிதமுனியை நேர்காணல் காண்பதற்காக அவரது வர்த்தக நிலையத்திற்குச் சென்றோம்.

இதன்போது அவர் வெளியிட்ட கருத்துக்களை எமது வாசகர்களுக்காக இங்கு விபரமாக வழங்குகிறோம்.

கேள்வி: இத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தை எவ்வாறு வகுத்தீர்கள்?

பதில்: ராஜீவ் காந்தியின் பலாத்காரமான உடன்படிக்கை கைச்சாத்திடலுக்கு எதிராக அன்று நாட்டுக்குள் பாரிய எதிர்ப்பலைகள், ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின.

இந்தியாவின் 26ஆவது மாநிலமாக இலங்கையின் வட, கிழக்கை மாற்ற இடமளிக்கமாட்டோம் என்ற போராட்டங்கள் வெகுண்டெழுந்தன.

இந்த நிலையில் இதற்கு எதிராக எதனையாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் என் மனதுக்குள் ஏற்பட்டது.

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட தினத்தில் அன்றைய ஆட்சியாளர்கள் அடக்கு முறையை பிரயோகித்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அத்தோடு பயங்கரவாதிகளுக்கு எதிரான வடமராட்சி இராணுவ நடவடிக்கை வெற்றி பெறும் நிலையிலிருந்தது. இதில் நானும் கலந்துகொண்டேன்.

ஆனால், இந்த இராணுவ நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதனால் எனது மனதில் கவலை குடிகொண்டது மட்டுமல்லாமல், ராஜீவுக்கு எதிரான கோபமும் பழிவாங்கும் உணர்ச்சியும் அதிகரித்தது.

இதனை தீர்த்துக்கொள்வதற்கு அணி வகுப்பு சிறந்த சந்தர்ப்பம் என்பதை என் மனம் அசை போட்டது. ராஜீவை கொலை ? செய்ய இந்த உடன்படிக்கையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனது மூளையில் பதிவானது.

கேள்வி: இத் தாக்குதலை நடத்துவதற்கு உங்கள் பின்னணியில் ஏதாவது ஒரு சக்தி செயற்பட்டதா?

பதில்: அவ்வாறு எந்தவொரு பின்னணியும் கிடையாது. எவரோடு பேசுவதற்கும் எனக்கு அவசியம் இருக்கவில்லை.

கேள்வி: தாக்குதலை நடத்துவதற்கு முதல்நாள் மனநிலை எப்படி இருந்தது?

பதில்: ராஜீவை தாக்குவதால் நான் ‘அரச துரோகியாகலாம்’. ஆனால் ‘தேசத்துரோகி’யாக மாட்டேன். எனவே, இத் தாக்குதலை நடத்தும் வரை எனக்கு அன்றைய தினம் தூக்கமே வரவில்லை.

கேள்வி: இந்த அணி வகுப்பில் உங்களுக்கு முன்வரிசையில் ‘இடம்’ எப்படிக் கிடைத்தது?

பதில்: இது தானாக நடந்தது. உயரத்தின் அடிப்படையில் முன் வரிசை கிடைத்தது.

கேள்வி: அணி வகுப்பின் போது ராஜீவின் செயற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்: அணிவகுப்பு மரியாதையின் போது அரச தலைவர்கள் படையினரை உன்னிப்பாக கவனிப்பதில்லை. ஆனால், ராஜீவ் ஒவ்வொரு படை வீரரையும் உச்சந் தலைமுதல் உள்ளங்கால் வரை உன்னிப்பாக அவதானித்தார்.

கேள்வி: உங்கள் தாக்குதல் இலக்கு தவறியதா?

பதில்: எனது கையில் ‘சில்க்’ துணியிலான கிளவுஸே இருந்தது. எனவே நான் தாக்கிய போது அது ராஜீவின் தோற்பட்டையிலேயே விழுந்தது. உடனே ராஜீவ் குனிந்து விட்டார். எனவே தலையில் தாக்கும் எனது இலக்கு தவறியது.


கேள்வி: இதன் பின்னர் என்ன நடந்தது? ராஜீவ் கீழே விழுந்தாரா?

பதில்: கீழே விழுவதை போல் தென்பட்டாலும் அவர் எப்படியாவது தன்னை சுதாகரித்துக் கொண்டார். அத்தோடு ராஜீவ் அணிவகுப்பை பரீட்சிப்பதற்கு தனது மெய்ப்பாதுகாவலர்கள் 7 பேருடனே வந்திருந்தார்.

கேள்வி: ராஜீவ் தாக்குதலை எவ்வாறு சுதாகரித்துக் கொண்டார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: எனது நிழல் அசைவில் ஏதோ நடக்கப் போகின்றதை ராஜீவ் உணர்ந்து கொண்டார் என இச் சம்பவத்தின் பின்னர் தெரிந்து கொண்டேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் விமானியாக தொழில் புரிந்ததால் அசைவுகளை அறிந்து கொள்ள முடிந்திருக்கும்.

கேள்வி: தாக்குதலின் பின்னர் என்ன நடந்தது?

பதில்: அடிவாங்கிய ராஜீவ் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். அதன் போது பாதுகாப்பிற்கு வந்த ‘பிளக்கெட்’ ஒருவர் எனது வயிற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். நான் கீழே விழுந்தேன். அதன் பின்னர் அணிவகுப்பு மரியாதை நிறுத்தப்பட்டது. ராஜீவ் ஒரு வாகனத்தில் ஏறி அங்கிருந்து வெளியேறினார்.

கேள்வி: நீங்கள் கீழே விழுந்த பின்னர் என்ன நடந்தது?

பதில்: அணி வகுப்பிற்கு பொறுப்பான அதிகாரி என்னை பரிசோதித்தார். பின்னர் விசேட அதிரடிப்படை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கடற்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.

பகல் உணவு கிடைத்தது. பின்னர் அன்றைய கடற்படை தளபதி திஸர சமரசிங்க என்னை இரகசிய பொலிஸாரிடம் கையளித்தார்.

கேள்வி: கடற்படையினர், கைது செய்யப்பட்ட பின்னர் தாக்கினார்களா?

பதில்: இல்லை, எதற்காக என்னைத் தாக்க வேண்டும்.

கேள்வி: இரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில் சிறைக்கூடத்திலா இருந்தீர்கள்?

பதில்: இல்லை, ஆபீஸ் ஒன்றிலேயே இருந்தேன்.

ஒருநாள் அதிகாரியொருவரின் பொய்யான முறைப்பாடு காரணமாக அன்று இரகசிய பொலிஸ் பணிப்பாளரான சந்திரா ஜயவர்தன எனது கன்னத்தில் அறைந்தார். அதைவிடுத்து ஏனைய அனைவரும் என்னோடு அன்பாகப் பழகினார்கள்.

கேள்வி: இந்திய அதிகாரிகள் எவராவது வந்து விசாரணை நடத்தினார்களா?

பதில்: ஒருமுறை இந்திய உள்நாட்டு அமைச்சின் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு இருவர் வந்தனர். ஆனால் நான் அவர்களுடன் பேச மறுத்து விட்டேன்.

கேள்வி: உங்களை பார்வையிட அரசியல்வாதிகள் எவராவது வந்தார்களா?

பதில்: இல்லை, எவருமே வரவில்லை. என்னை விடுதலை செய்த தினத்தில் ஸ்டான்லி திலகரத்ன வந்தார். இவர் தான் எனது வழக்கில் ஆஜராகி வாதாடினார். ஆனால், அவரோடு வெளியேறுவதை நான் நிராகரித்தேன். சிறைச்சாலை பஸ்ஸில் என்னை புறக்கோட்டையில் இறக்கி விட்டனர். நான் தனியாக காலியிலுள்ள எனது வீட்டிற்கு பஸ்ஸில் சென்றேன்.

கேள்வி: உங்களுக்கு எதிரான வழக்கு?

பதில்:கொலை எத்தனிப்பு குற்றச்சாட்டில் கடுமையான வேலையுடன் 6 வருட சிறைவாச தீர்ப்பை இராணுவ நீதிமன்றம் வழங்கியது.

கேள்வி: இராணுவ நீதிமன்றத்தில் உங்களது வழக்கை யார் விசாரித்தார்கள்?

பதில்: கேர்ணல் விஜய விமலரத்ன, கொமாண்டர் கே.ஏ.பெரேரா மற்றும் குரூப் கப்டன் புத்தி சிறிவர்தன ஆகியோராவர். இறுதியில் இந்தியாவை திருப்திப்படுத்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கேள்வி: அன்று நீங்கள் செய்தது பயங்கரமான விடயமென்று நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜீவ் எமது நாட்டை ஆக்கிரமித்த சர்வாதிகாரி.

கேள்வி: ராஜீவை கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடனா நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள்?

பதில்: கொலை செய்யவே தாக்குதல் நடத்தினேன். இதில் கேள்விக்கு இடமில்லை. எப்படியாவது உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது.

கேள்வி: உங்களது எண்ணம் ஈடேறியிருந்தால் நாட்டுக்கு என்ன நடக்குமென்பதை எண்ணிப் பார்த்தீர்களா?

பதில்: இதுவொரு நல்ல கேள்வி. பிரபாகரன் இலங்கைப் பிரஜை. இவரே ராஜீவ் காந்தியை திட்டமிட்டு கொலை செய்தார்.

இதனால் இந்தியா இலங்கைக்கு எதிராக எதனையும் மேற்கொண்டதா? இல்லையே. குறைந்தது அச்சுறுத்தலையேனும் விடவில்லை.

அத்தோடு அன்று இந்தியாவின் ஜனாதிபதியாக சீக்கியரொருவரே பதவி வகித்தார். இதனையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தே இதனைச் செய்தேன்.

கேள்வி: உங்களுக்கு எதிரான வழக்கில் வாதாடிய சட்டத்தரணி யார்?

பதில்: சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்டான்லி திலகரட்ன தலைமையில் பதின்மூன்று சட்டத்தரணிகள் ஆஜரானார்கள். ஆனால், ஒரு சதமேனும் கட்டணம் பெறவில்லை. இலவசமாகவே வாதாடினார்கள்.

கேள்வி: சிறையில் உங்களுக்கான உபசரிப்பு எப்படி இருந்தது?

பதில்: சிறை சென்றபோது கைதிகள் கைதட்டி ஆரவாரத்துடன் ஒரு வீரனைப் போல் என்னை வரவேற்றார்கள்.

அங்கு புரோட்டின் சத்துடைய சிறந்த உணவு எனக்கு வழங்கப்பட்டது. லக்ஸ்பிறே மா, சீனியும் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது.

கேள்வி: விசேட உணவு உபசரிப்பு கிடைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: அன்று சிறைக்குள் இந்திய இராணுவம் வெளியேற வேண்டுமென்ற போராட்டத்தை கைதிகள் மேற்கொண்டனர். இதன்போது என் மீது துப்பாக்கி சூடுபட்டது.

கேள்வி: இவ் ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?

பதில்: இல்லை, இவ் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டது. நானும் அதில் சிக்கிக்கொண்டேன். பின்னர் கண்களை கழுவுவதற்காக நீர்தொட்டிக்கு அருகே சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானேன்.

அதன் பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை புரோட்டின் சக்தியுடைய உணவே எனக்கு வழங்கப்பட்டது.

கேள்வி: சிறையிலிருந்து எப்போது விடுதலையானீர்கள்?

பதில்: 1990 ஏப்ரல் 2ஆம் திகதி விடுதலையானேன்.


கேள்வி: விடுதலையின் பின்னரான உங்கள் வாழ்க்கை?

பதில்: அரசியலில் ஈடுபட்டேன். வர்த்தகத்தை மேற்கொண்டேன். காலி - கொழும்பு இன்ரர்சிட்டி பஸ் சேவையையும் நடத்தினேன்.

கேள்வி: வர்த்தகம் செய்வதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?

பதில்: சிறையில் இருக்கும் போது நான் பாடல்கள் எழுதினேன். 100 பாடல்கள் எழுதினேன். விடுதலையின் பின்னர் அவற்றை ஒளிப்பதிவு செய்தேன். எனது இரண்டாவது ஒலிப்பதிவின் கசட்டுகள் 15000 விற்பனையாகின. இதன் மூலம் பஸ்ஸொன்றை கொள்வனவு செய்தேன். ஆனால், அதில் நஷ்டமடைந்தேன்.


கேள்வி: நீங்கள் ஒரு ஜோதிட நிபுணரா? இந்த ஞானம் எப்படி வந்தது?

பதில்: நான் எந்தவொரு குருவிடமும் ஜோதிடம் கற்கவில்லை. சிறையில் இருக்கும் போது ஜோதிட புத்தகங்களை வரவழைத்து வாசித்து எனது அறிவை வளர்த்தேன். தற்போது சில இலத்திரனியல் ஊடகங்களில் ஜோதிட விளக்கங்களை தெளிவுபடுத்தி வருகிறேன். நான் சொன்ன சில ஜோதிட கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

கேள்வி: இந்தியாவை எதிர்க்கின்றீர்களா?

பதில்: இல்லை. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. இந்திப் பாடல்களை நான் ரசித்துக் கேட்பேன்.

ஆனால், ராஜீவ்காந்தி என்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன். அத்தோடு பலாத்காரமாக எம் மீது திணிக்கப்பட்ட உடன்படிக்கையை எதிர்த்தேன். 13 பிரிவினைக்கு வழிவகுக்கும் என்பதால் எதிர்த்தேன்.

கேள்வி: இச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்கு சென்றீர்களா?

பதில்: ஆம். புனித யாத்திரை குழுவொன்றுடன் இந்தியா சென்று வந்தேன். இது யாருக்கும் தெரியாது. எந்தவிதமான பிரச்சினையும் இன்றி போய் வந்தேன்.

கேள்வி: சரி, இனி உங்கள் குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லுங்களேன்?

பதில்: எனது ஊர் காலி - பூஸாவாகும். 1965, டிசம்பர் 13ஆம் திகதி பிறந்தேன்.

தந்தை ஒரு வியாபாரி. தாய் வீட்டை கவனித்து வந்தார்.

எனது உடன் பிறப்புக்கள் 8 பேர். 5 சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர்.

‘கிங்தோட்டை’ மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். உயர்தரம் படிக்கவில்லை. பின்னர் கடற்படையில் இணைந்தேன்.

கேள்வி: நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவரா?

பதில்: இல்லை. நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், நாட்டை பிரிக்கும் 13ஆவது திருத்தத்தை மாகாண சபை முறைமையை எதிர்ப்பவன்.


இன்று வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன் பின்னராவது யாழ்ப்பாணத்து மக்களுக்கு தங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டை தேசிய அடையாள அட்டையை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா?

முடியாது, கொழும்புக்கே வர வேண்டும். எனவே, மாகாண சபைகளால் இம் மக்களுக்கு பலனில்லை.

எனவே, நிர்வாகத்தை பரவலாக்க வேண்டும். உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

இதன் மூலம் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களிலேயே தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளும் முறைமையை உருவாக்க வேண்டும். மாகாண சபைகள் ‘வெள்ளை யானை’ இது தீர்வை வழங்காது.

கேள்வி: நாட்டின் இன்றைய நிலை?

பதில்: நான் அன்று இலங்கைக்கு எதிரான ராஜீவ் காந்தியின் ஆக்கிரமிப்பை துணிச்சலாக எதிர்த்தேன்.

ஆனால், இன்று எமது நாடு இந்தியாவிற்கு அடிமையாகி அதன் காலனித்துவ நாடாக மாறி வருகிறது. இது மிகவும் கவலையளிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் தனக்கிருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13ஐ ஒழித்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாததன் பலன் இன்று விசுவரூபமெடுத்துள்ளது.
கேள்வி: இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?

பதில்: பிரபாகரனுக்கு அரசியல் ஞானம் கிடையாது. ஆயுதம் மீதே அக்கறை இருந்தது.

ஆனால், அரசியல் ஞானம் இருந்த அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் போன்றோரை கொலை செய்து தமிழ் மக்களை அநாதையாக்கினர். இவர்கள் இனவாதிகள் அல்ல. மிதவாதிகள்.

தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப்பிழைப்பாக மாறிவிட்டது. காளான்களை போல் நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.

அரசியல், தமது அதிகாரத்தை பாதுகாக்க தேசப்பற்றை போர்த்துக் கொண்டுள்ளனர் என குற்றம் சாட்டிய விஜித் ரோஹண விஜிதமுனி, தனது ஜோதிட ரீதியான கணிப்பொன்றையும் இவ்வாறு முன்வைத்தார்.

2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்படும்.

ஜூன் 19ஆம் திகதியாகும் போது நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகுமென்றும் அவர் தெரிவித்தார்.


இறுதியாக நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையை நேசிப்பவர்களாக நாம் இலங்கையர்கள் என்ற நிலை உருவாக வேண்டும். இதுவே நாட்டின் உயர்வுக்கு வழிவகுக்கும்.

- நேர்காணல் - ப.பன்னீர்செல்வம்.


Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire