கோபாலபுரக் கொள்ளையர் : பரிதி இளம்வழுதி
Source: Tamil News Agency:
Pic source:http://whispersintamilnadu.blogspot.in/2011_10_29_archive.html
தமிழினம், தமிழ்க்குணம் : தமிழக அரசியல்
கோபாலபுரக் கொள்ளையர் : பரிதி இளம்வழுதி
சென்னை – ஜுலை 04
போரறிஞர் அண்ணா முன்னுரை எழுதிய, கருணாநிதி பின்னுரை எழுத, ஸ்டாலின் முடிவுரை எழுதிவரும் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகம் தேய்ந்து போன லாடம், ஓய்ந்து போன ஒட்டகம் என்று அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.
தி.மு.க.வுக்கு அண்ணா முன்னுரை எழுதினார், கருணாநிதி பின்னுரை எழுதினார், ஸ்டாலின் முடிவுரை எழுதுகிறார்” என ஆ.தி.மு.க.வில் இணைந்த பரிதி இளம் வழுதி நமக்களித்த பேட்டி :-
அபிமன்யு என கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். கட்சியினரின் உள்குத்துதான் என் தோல்விக்குக் காரணம் என்று கருணாநிதியிடம் முறையிட்டார்.
காரணமானவர்களை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். ஆனால், மறுவாரமே மீண்டும் அவர்களை ஸ்டாலின் கட்சியில் சேர்த்தார். கோபமுற்ற பரிதி, துணைப் பொதுச்செயலாளர் பதவியை தூக்கி எறிந்தார். ஆனாலும், தலைமை கண்டு கொள்ளவில்லை. ஒன்றரை ஆண்டு காலம் அதிருப்தியில் இருந்த அவர். கடந்த 28-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.கவில் இணைவதற்கு முன்பு அவரது செல்போனில் ரிங்டோன் “உதயசூரியனின் பார்வையிலே” பாடல் ஒலித்தது. இப்போது “தாயிற்சிறந்த கோவிலுமில்லை” பாடல் ஒலிக்கிறது. அ.தி.மு.க.வில் இணைத்தும் மறுநாளே அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிதி அளித்துள்ள பேட்டி : -
திடிரென அ.தி.மு.கவில் இணையக் காரணம் ?
"கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே சொற்பவாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவன் நான். என் தோல்விக்கு ஸ்டாலின்தான் காரணம். என் அப்பா வளர்த்த கட்சி தி.மு.க! கட்சியை வளர்க்க என் அப்பா கால்தடம் பதிக்காத இடம் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்ப நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதான் வெளியேறிவிட்டேன்.
உங்களுக்கு சாதகமாக கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக தி.மு.க.வில் இருந்து வெளியேறியது துரோகம் இல்லையா?
என்னை அபிமன்யு, இந்திரஜித் என்று புகழ்ந்த கருணாநிதி 1996-ல் அமைச்சரவையில் என்னைச் சேர்க்கவில்லை. கடைசியில் வெறுவழியில்லாமல் எனக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டது. தனக்குத் துணையாக இருப்பவர்களைத் தான் கருணாநிதி பக்கத்தில் வைத்துக் கொள்வார். அம்மா இன்றைக்கு ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனபாலுக்கு சபாநாயகர் பதவி தந்து அழகு பார்க்கிறார். அப்படியென்றால் அன்றைக்கு கருணாநிதி எனக்குச் செய்தது துரோகம் இல்லையா?
அதி.மு.க. ஏற்க மறுத்தால், நீங்கள் விஜயகாந்த் கட்சியில் இணையும் முடிவில் இருந்ததாகக் கூறப்படுகிறதே?
நான் விஜயகாந்த் கட்சியில் இணைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனது தாயார் மறைவிற்கு கருணாநிதி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. அவர் நஞ்சில் மனோகரன் வீட்டிற்கு வந்திருந்தபோது நான் மொட்டைத் தலையுடன் சென்றிருந்தேன். அவரிடம் குனிந்து “நான் பரிதி” என்று கூறியபோது, உன்னை அடையாளம் தெரியாமலா இருக்கும்? என்றார். அப்படியெனில், நம் விஷயத்தில் தெரிந்துகொண்டுதான் இருவரும் அமைதியாக இருக்கிறார் என்று அன்றைக்கு உணர்ந்தேன். அந்த நிமிடமே, இனி இந்தக் கட்சியில் இருக்கக் கூடாது. அதி.மு.க.வில் இணைந்து விட வேண்டும் என்று முடிவுஎடுத்தேன்.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட உத்தரவாதம் பெற்றதாக் கூறப்படுகிறதே?
கற்பனையான, யூகமான கேள்வி இது நாடளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை மட்டுமல்ல, 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்பிக்க நான் தீவிரமாகப் பணியாற்றுவேன். அப்போது, நான் கோபாலபுரத்துக் கொள்ளையர்களின் முகத்திரையையும் கிழிப்பேன்.
உங்களைத் தொடர்ந்து பலர் அ.தி.மு.க.விற்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே? அந்த முக்கிய பிரமுகர்கள் யார்?
தி.மு.க.வில் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தினால் என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பலரும் என்னுடைய கெமிஸ்ட்ரியோடு ஒத்துப்போகின்ற நண்பர்களும்... அவர்களது பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
அப்படியென்ன சர்வாதிகாரத்தனமாக ஸ்டாலின் செயல்படுகிறார்?
தி.மு.க. தலைவராக உள்ள கருணாநிதி, அறிவாலயத்திற்குப் போகலாம், உட்காரலாம், மணியடித்து ஆபீஸ் பையனை வரவழைத்து டீ வாங்கிச் சாப்பிடலாம். இந்த அளவிற்குத்தான் அவருக்கு அதிகாரம். கட்சியை ஸ்டாலின், தனது முழுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார். கருணாநிதி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தார். தற்போது அது அவருக்கே தலைவலியாக மாறிவிட்டது.
.
எதிர்காலத்தில் தி.மு.க.வின் நிலை எப்படியிருக்கும் ?
தி.மு.க. தேய்ந்து போன லாடம், ஓய்ந்து போன ஒட்டகம், தி.மு.கவிற்கு அண்ணாதான் முன்னுரை எழுதினார், “தம்பி கருணாநிதி பின்னுரை எழுதுவார்” என்று அண்ணா சொன்னதாக கருணாநிதி அடிக்கடி குறிப்பிடுவார். உண்மையிலேயே, அண்ணா அப்படிச் சொன்னாரா? என்று அவருடைய காலத்தில் தி.மு.க.வில் இருந்தவர்களைத்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், தி.மு.க.விற்கு அண்ணா முன்னுரை எழுதினார், கருணாநிதி பின்னுரை எழுதினார், ஸ்டாலின் முடிவுரை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு பரிதி இளம் வழுதி கூறியுள்ளார்.
Comments
Post a Comment