சுங்கத் துறையில் 40% பணியிடங்கள் காலி: வெளிநாட்டு வர்த்தகம் கடும் பாதிப்பு

Source: www.dinamani.com
 முகவை க. சிவகுமார் -

திருவொற்றியூர், ஏப். 8: சென்னை சுங்க இல்லத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் என 40 சதவீதம் அளவுக்கு பணியிடங்கள் காலியாக இருப்பதால் துறைமுக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அடியோடு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 துறைமுகத்துக்கு உள்ளே, வெளியே செல்லும் சரக்குகளை ஆய்வு செய்வதற்கு போதிய சுங்கத் துறை அதிகாரிகள் இல்லாததால் நீண்ட வரிசையில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு லாரிகள் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
 6 வாயில்களுக்கு 2 சுங்க அதிகாரிகள்: துறைமுகத்தில் கையாளப்படும் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை ஆய்வு செய்வது, சுங்கவரி விதிப்பது, வரி வசூலிக்கப்பட்ட பிறகு சரக்குகளை விடுவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதன்மை ஆணையர் தலைமையில் சென்னை சுங்க இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.
 இவையனைத்தும் காசிமேடு அருகே உள்ள முதல் நுழைவு வாயில் வழியேதான் செல்ல வேண்டும். இங்கு ஏற்கெனவே 2 வாயில்கள்தான் இருந்தன. ஒரு ஷிப்டில் 2 அதிகாரிகள் பணியில் இருந்தனர். இப்போது 6 வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதே 2 அதிகாரிகள்தான் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 மேலும் தொழில் பாதுகாப்புப் படை காவலர்கள், சுங்கத் துறை காவலர்களும் போதிய அளவில் இங்கு நியமிக்கப்படவில்லை. இதனால் 6 வாயில்களைத் திறந்தாலும் வரிசையில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை. 24 மணி நேரத்தில் சுமார் 4 ஆயிரம் கன்டெய்னர்களுக்கான ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். இதே நிலைதான் சரக்குப் பெட்டக முனையங்களிலும் உள்ளன. இறக்குமதி, ஏற்றுமதிக்கு தலா 3 வழிகள் உள்ளன. ஆனால், 2 அதிகாரிகள்தான் பணியில் உள்ளனர். இவர்களால் 24 மணி நேரத்தில் சுமார் 4 ஆயிரம் ஆவணங்களைச் சரிபார்ப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இதனால், நீண்ட வரிசையில் கன்டெய்னர்களை ஏற்றிய லாரிகள் உள்ளேயும், வெளியேயும் சுமார் 20 கி.மீ தூரத்துக்கு வரிசையில் காத்திருக்கின்றன.
 30 சரக்குப் பெட்டகங்களுக்கு 10 அதிகாரிகள்: சென்னையில் ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை 15 சரக்குப் பெட்டக நிலையங்கள்தான் இருந்தன. இப்போது இதன் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ள நிலையில் அதற்கேற்ற வகையில் அனைத்து நிலையிலும் கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருந்த அதிகாரிகளின் எண்ணிக்கையும் பணிஓய்வு, மாறுதல் போன்ற காரணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டது.
 இப்போது சுங்கத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30 சரக்குப் பெட்டக நிலையங்கள் வழியாகத்தான் பெரும்பாலான கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதற்கேற்ற வகையில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. 10 நிலையங்களில் பணியில் உள்ள அதிகாரிகளை கொண்டே 30 நிலையங்களிலும் மேலாண்மை செய்யப்படுகிறது.
 இதனால் ஏற்றுமதி, இறக்குமதி சோதனைக்காக நீண்ட நாள்கள் கிடங்குகளில் சரக்குகளை இருப்பு வைக்கும் அவல நிலை இருந்து வருகிறது. சுங்கத் துறையில் போதுமான அதிகாரிகள் பணியில் இல்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: இது குறித்து தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர் சோழநாச்சியார் கூறியது:
 சென்னை சுங்க இல்லத்தில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கண்காணிப்புப் பிரிவில் 175 அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் சுமார் 90 பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் மூலம் 8 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடிவரை சுங்க வருவாய் வசூலிக்கப்படுகிறது. இந் நிலையில் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறையால் வெளிநாட்டு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவினங்கள், வரிசையில் நாள்கணக்கில் காத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளன.
 இப்போது பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எதிர்பாராத தவறுகள் ஏற்படுகின்றன. எனவே உடனடியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் பணியிடங்களையும் ஏற்படுத்த வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது உண்மை. இது குறித்து மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்கத்துறை வாரியத்துக்கு பல முறை கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார் சோழநாச்சியார்.
 
 நாடு தழுவிய பிரச்னை: வாரியத் தலைவர்
 சென்னைத் துறைமுகத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பற்றாக்குறை குறித்து சென்னை வந்திருந்த மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவர் எஸ்.கே. கோயல் செய்தியாளர்களிடம் கூறியது:
 சுங்கத் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான். சென்னையில் மட்டுமல்ல. நாடு முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இது குறித்து நிதி அமைச்சகத்துக்கு 33 சதவீதம் பணியிடங்களை நிரப்பக் கோரி பரிந்துரை செய்துள்ளோம். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை. இதற்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்றாலும் வாரியத்துக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தம் என்றார்.

Comments

Popular posts from this blog

PM Modi to lay foundation of SEZ at JNPT

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire