மாவீரர் தினத்தை நடந்த யாருக்கு அருகதை உள்ளது: மக்கள் குழப்பம் தீருமா ?

Source:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=874


குறிப்பு: இது சற்று நீண்ட செய்திதான் ஆனால் முடிவுவரை வாசித்தால் ஒரு தெளிவு பிறக்க வாய்ப்பு இருக்கிறது:

பின் குறிப்பு: இதனை வெளியிட்ட அதிர்வுக்கு அச்சுறுத்தல் விடப்படலாம். இல்லை மின்னஞ்சலில் துரோகிப் பட்டமும் கட்டப்படலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியுமா ? காய்க்கிற மரத்துக்கு தான் கல்லடி விழுமாம் !


மாவீரர் தினம் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், வேறு எந்த நாடுகளிலும் இல்லாத குழப்பமான நிலை லண்டனில் நிலவுகிறது. பல ஊடகங்கள் பல கருத்துக்களை முன்வைப்பதும் தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தம்மை தாமே விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி ஒருபக்கச் சார்பாக நடப்பதும் என பல கதைகளையும் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டு மக்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு குழம்பியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலை. மாவீரர் தினம் 2 இடங்களில் நடக்கிறதா ? இல்லை ஒரே இடம்தான என்ற தெளிவு மக்களுக்கு இல்லை. அதனைச் சொல்ல எந்த ஊடகமும் தயாரும் இல்லை. போதாக்குறைக்கு GTV ஒருபக்கச்சார்பான நிலையிலும் உள்ளதால் நாம் இதனை எழுதவேண்டிய நிலையில் உள்ளோம்.

ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இம் முறை 2 இடங்களில் மாவீரர் தினம் நடக்கவிருப்பதுதான்.
 

"2 இடங்களில் மாவீரர் தினம் நடந்தால் நான் போகமாட்டேன்" "ஒற்றுமையாக எல்லாம் நடக்கவேண்டும்" "ஏன் இவர்கள் இவ்வாறு பிரிந்து நின்று அடிபடுகிறார்கள்" "சிங்களவன் நினைத்ததை நாம் இப்ப செய்யிறோம்" என்று எல்லாம் மக்கள் தமக்குத் தாமே பேசிக்கொள்கிறார்களே தவிர ஏன் இப்படி நடக்கிறது ? என்ன தான் நடக்கிறது என்ற அறிவு மக்களுக்கு போதுமானதாகக் கிடைக்கவில்லை. ஒருபக்கச் செய்தியைக் கேட்டு சிலரும் மறுபக்கச் செய்தியைக் கேட்டுச் சிலருமாக மக்கள், அமைப்புகள், சில அரசியல்வாதிகளும் கூட தற்போது பிளவு பட்டு நிற்பது எமது இனத்திற்கான சாபக்கேடு. நடப்பதை ஒரு நடு நிலையாக பக்கச்சார்பில்லாமல் நாங்கள் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இது குறித்து மக்கள் முடிவெடுப்பது நல்லது. மக்களுக்கான தகவலை நாம் வழங்கவேண்டும். அதன் பின்னர் மக்கள் முடிவெடுக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

முடிந்தவரை இதனை ஒரு நடு நிலையாக ஆராய்ந்து எழுதி உள்ளோம். அதிருப்த்தி அல்லது விமர்சனங்கள் இருந்தால் எம்மைத் தொடர்புகொள்ளலாம் !

லண்டனில் 2 குழுக்கள்:
 

விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளில் பல பிரிவுகள் இயங்கிவருவது யாவரும் அறிந்ததே. அதில் "அனைத்துலகத் தொடர்பகம்" மற்றும் "தலைமைச் செயலகம்" என 2 கட்டமைப்புகள் இருக்கிறது. வெளிநாடுகளில் நடைபெறும் வேலைத் திட்டங்களை நெறிப்படுத்த தேசிய தலைவரால் அமைக்கப்பட்ட கட்டமைப்பு அனைத்துலகத் தொடர்பகம் ஆகும். அதேபோல விடுதலைப் புலிகளின் அதி உயர்மட்ட பீடமாக விளங்கும் மற்றுமொரு கட்டமைப்பு தலைமைச் செயலகமாகும். தலைமைச் செயலகம் என்றால் அதன் அர்த்தம் மக்களுக்கு புரிந்திருக்கும். தலைமைச் செயலகம் ஆனது ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் இருந்து செயல்பட்டபோதிலும் பின்னர் அது ஈழத்திற்கு 1998ம் ஆண்டு நகர்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் வரை அது ஈழத்தில் இருந்து தான் செயல்பட்டது. அதனை முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் வெளிநாட்டிற்கு நகர்த்த யார் யாருக்கு உரிமைகொடுத்தது என்பது இதுவரை தெரியவில்லை. தலைமைச் செயலகத்தை புலம்பெயர் தேசத்திற்கு நகர்த்தியதை ஈழத்தில் இன்னமும் மெளனமாக இருக்கும் போராளிகள் உறுதிசெய்ய வில்லை என்ற கருத்துகளும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. 

பச்சையாகச் சொல்லப்போனால் இவர்களுக்கிடையே தற்போது நடக்கும் முறுகல் நிலையே மாவீரர் தினப் பிரச்சனையாகும். இவை ஒரு கசப்பான உண்மையாகும். இதனை எவராலும் மறுக்க முடியாது.

அனைத்துலகத் தொடர்பகம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு:


கடந்த 21 வருடமாக் அதாவது 1990ம் ஆண்டு முதல் லண்டனில் மாவீரர் தினம் நடைபெற்று வருகிறது. அதனை "தனம்" மற்றும் "சாந்தன்" ஆகியோரும் மற்றும் சிலரும் நெறிப்படுத்தி வந்தனர். அவர்கள் அதனை தேசிய தலைமையின் கீள் நடத்தி வந்தனர். அவர்களின் ஒரு பிரிவு "கிளை" மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகும் (TCC )பிற்காலத்தில் சாந்தன் என்பவர் இளைப்பாறவே தனம் மற்றும் "கமல்" ஆகியோர் அதனை நெறிப்படுத்தி நடத்திவந்தனர். மாவீரர் தினம் பல ஆண்டுகளா நடைபெற்றுவரும் நிலையில் பல தடவைகள் லண்டனில் சிறப்பாக மாவீரர் தினத்தை நடத்தியதற்காக தேசிய தலைவர் தம் கைப்பட கடிதம் எழுதி அதனை கடந்த கால நடத்துணர்களுக்கு(தனம்) அனுப்பி வைத்துள்ளார் என்பதனையும் நாம் மறைக்க முடியாது. 2009ம் ஆண்டு மே மாதம் வரை சுமூகமாக நடைபெற்ற மாவீரர் தினம் தற்போதுதான் பெருங் குழப்பங்களை சந்தித்துள்ளது.

தலைமைச் செயலகம்: அல்லது சங்கீதன் குழு யார் ?:


2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலிகளை இலங்கை இராணுவம் ஆயுதப்போராட்ட ரீதியாகத் தோற்கடித்த பின்னர் புலிகள் தமது தலைமைச் செயலகத்தை வெளிநாடுகளில் பலப்படுத்த ஆரம்பித்தனர். தலைமைச் செயலகத்தால் பல அறிவித்தல்கள் விடப்பட்டது. குறிப்பாக தேசிய தலைவரின் தாயார் இறந்த சயமத்தில் "தேசத்தின் அன்னை" என மதிப்பளித்து அவரை கெளவரப்படுத்தியதும் தலைமைச் செயலகமே. புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் வரிசையில் இருக்கும் திரு.பொட்டு அம்மான் அவர்களின் கீழ் பணியாற்றியதாக சங்கீதன் அவர்கள் சொல்கிறார். அவர் தற்போது லண்டனில் உள்ளார். அவர் தலைமைச் செயலகத்தோடு இணைந்து தாமே மாவீரர் நாளை நடத்துவோம் எனச் செயல்பட்டு வருகிறார். இதன் வெளிப்பாடே இப் பிரச்சனையாகும். இவர்களால் தான் லண்டனில் உள்ள எக்ஸ்-எல் மண்டபம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தான் தற்போதைய நிலை. இந்த 2 குழுப் பிரச்சனையை பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால் லண்டனில் இயங்கிவரும் சில அமைப்புகளின் முக்கிய புள்ளிகள்(இலங்கை அரசின் ஏஜன்டுகள் ?) இந்த இரண்டு குழுக்களுக்குள் ஊடுருவி இப் பிரச்சனையை பூதாகரமாக்கி இலங்கை இந்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கின்றனர் என்பது ஒரு உண்மை. சில அமைப்புகளில் இருக்கும் சில முக்கிய நபர்கள் தம்மை தனம் மற்றும் கமல் போன்றோர் மதிக்கவில்லை என்று சங்கீதன் பக்கம் செல்வதும், அதேபோல சிலர் சங்கீதன் பக்கம் இருந்து தனம் பக்கம் சேர்ந்து இப் பிரச்சனையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளனர் என்ற கருத்தும் உள்ளது. போதாக்குறைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல GTV தனது பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. இதில் IBC வானொலியின் பங்கும் அடங்கும். நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த கையிருப்பில் எதுவும் இல்லாத நிலையில் IBC வானொலியானது தற்போது பரபரப்புத் தேடி அலைகிறது. கடந்த காலங்களில் நாடு கடந்த அரசு பிளவுபட்ட நேரத்தில் அதனை ஒற்றுமைப்படுத்த ஊடகவியலாளர்கள் முனைந்தவேளை அதனை ஊதிப் பெரிசாக்கி பல சர்ச்சைகளைத் தோற்றுவித்ததும் இதே IBC தான். தற்போது ஏற்பட்டுள்ள மாவீரர் தினப் பிரச்சனையையும் ஊதிப் பெரிசாக்கி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவருவதும் இதே வானொலிதான்.

GTF- BTF - TGTE போன்ற அமைப்புகளின் நிலைப்பாடு தான் என்ன ?


2009ம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது லண்டனில் மாபெரும் மக்கள் எழுச்சி வெடித்தது. சரியான நாள் தெரியவில்லை... ஆனால் ஒரு நாள் நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் சுமார் 2லட்சம் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர் என லண்டன் பொலிசார் முன்னர் ஒருமுறை தெரிவித்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கள் கட்டமைப்பாக அரசியல் பணிகளை திறம்படச் செய்தது BTF ஆகும். மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தின் திறனை சரியாகப் பயன்படுத்தி பல எம்.பிக்களை தமிழர்களுக்கு ஆதரவாகத் திரட்டியதும் BTF ஆகும். ஆனால் அதில் முன்நிலை வகிக்கும் சிலர் தற்போது தனியான ஓட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதில் பெரும் குழப்பவாதிகளாக மக்களால் பார்க்கப்படுபவர்களில் ஸ்கந்தாவும் சுகந்தகுமாரும் அடங்குகிறார்கள். இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே தலைமைச் செயலகத்துக்கும் சங்கீதனுக்கும் தமது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். இவர்களே அடிக்கடி GTV யில் தோன்றி எக்ஸ்-எல் மண்டபத்தில் மாவீரர் தினம் நடப்பதாகக் கூறிவருகின்றனர்.

இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால் தனம் மற்றும் கமல் போன்றவர்களால் ஸ்கந்தா எனப்படும் நபர் கடந்தகாலத்தில் முன் நிலைப்படுத்தப்பட்டார். ஸ்கந்தா அந்த வேலையைப் பாருங்கள் இந்தவேலையைப் பாருங்கள் என அவருக்கு வேலைகள் வழங்கப்பட அவர் ஒரு முக்கியஸ்தர் ஆனார். ஆனால் அவர் தற்போது பிரிந்துசென்று சங்கீதன் குழு பக்கமாகச் செயல்படுகிறார். 

TGTE அல்லது நாடு கடந்த அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் சங்கீதன் குழுவிற்குப் பின்னால் திரைமறைவில் இருந்து செயல்படுவது தெரிகிறது. நாடு கடந்த அரசின் அமைச்சர் திரு தணிக்காச்சலம் தயாபரன் அவர்கள் GTVயில் தோன்றி உரையாற்றும்போது நேரடியாகவே சங்கீதன் நடத்தும் மாவீரர் தின மண்டபமான எக்ஸ்-எலுக்கு அனைவரையும் வருமாறு கூறிச் சென்றார். அதாவது மக்களுக்கு ஒரு விடையம் நன்றாகப் புரியவேண்டும். இம் முறை மாவீரர் தினத்தை அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவில் தனியாக நடத்துகின்றது என்பது உண்மையாகும். இதனை மறுக்கவோ இல்லை மறைக்கவோ முடியாது.

இது இவ்வாறு இருக்க GTF இன் நிலைப்பாடு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அவர்கள் அதனை விளக்க தயாரும் இல்லை. அவர்கள் சர்வதேச அரசியல் களத்தில் நிற்பதால் பிரித்தானியா உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூறவில்லை. உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள் என்று அதிர்வு இணையம் கேட்டபோது அவர்கள் அக்கேள்வியில் இருந்து நழுவிக்கொண்டார்கள் என்பதனையும் இங்கே தெரிவிக்கவேண்டும்.

மாவீரர் தினத்தில் காசு கொள்ளையடிக்கப்பட்டதா ?


பச்சையாகச் சொல்லப்போனால் தலைமைச் செயலகம் அல்லது சங்கீதன் குழுவினர் மக்கள் முன் வைக்கும் விவாதம் என்ன வென்றால் கடந்தகாலங்களில் நடந்த மாவீரர் தினத்தில் பெருமளவு நிதி கொள்ளையடிக்கப்பட்டது என்பது தான். இல்லை அதனை சற்று நாகரீகமாகச் சொன்னால் காசுக் கணக்கு காட்டப்படவில்லை என்பதுதான். இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றி நாம் கமல் மற்றும் தனத்திடம் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள் கூறிய பதில் பின்வருமாறு அமைந்தது: 

"இந் நாட்டில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மாவீரர் தினம் என்று நடத்த முடியாது. அதனால் அதனை தேசிய நினைவெளுச்சி நாள் என நாம் நடத்திவருகிறோம். அதற்கான எல்லாக் கணக்குகளும் எம்மிடம் உள்ளது. அதனை நாம் வெளிப்படையாக வெளியிட முடியாது. காரணம் சட்டச்சிக்கல்கள் இருக்கிறது. எவராவது பங்களிப்புச் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர் கேட்டால் நாம் அந்தக் கணக்கை காட்டுவோம். இதனை விடுத்து எம் மீது வீண் பழிபோடவேண்டாம்" என்றார்கள் அவர்கள்.

ஒவ்வொரு மாவீரர் தினத்துக்கும் சுமார் 50,000பேர் வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 45,000பேர் வந்தாலும் தமிழ் இணையங்கள் 50,000பேர் வந்தார்கள் இல்லை 55,000பேர் வந்தார்கள் என்று தான் எழுதுவது வழக்கம். சிங்கள தேசத்திற்கு எமது ஒற்றுமையையும் எமது பலத்தையும் காட்ட அவர்கள் அவ்வாறு எழுதுவார்கள் அது ஒரு பெரியவிடையம் அல்ல. ஆனால் அதனை வைத்துக்கொண்டு 50,000 பேர் �5 பவுனுக்கு பூ வாங்கினால் எவ்வளவு காசு வரும் என்று கணக்கு பார்க்க முடியுமா ? அது ஒரு பெருங் கேள்வியாக உள்ளது. சரி ஒரு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் : 2009ம் ஆண்டு மே மாதம் ஒரு போராட்டத்துக்கு சுமார் 2 லட்சம் தமிழர்கள் பிரித்தானிய பாரளுமன்றம் முன்பாகக் கூடினார்கள். அன்றைய தினம் 90 சதவீதமான மக்கள் தொடரூந்து(ரெயின்) மூலம் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 5 பவுன்கள் அல்லது 8 பவுன்களைச் செலவளித்தார்கள். அப்படி என்றால் 2 லட்ச்சத்தை 5 பவுன்களால் பெருக்கினால் எவ்வளவு பணம் தேறும் ? அதனை நாம் ஏன் பிரித்தானிய அரசுக்கு கொடுக்கவேண்டும் என்று யாராவது நினைத்தது உண்டா ?

2009ம் ஆண்டும் மே மாதத்தில் பிரித்தானிய அரசின் தொடரூந்து சேவைக்கு சிலவேளைகளில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வருமானம் இருந்திருக்கும். இதனைப் பற்றி எவரும் கவலைப்படுவது இல்லை. ஆனால் மாவீரர் தினத்தில் சேரும் காசைப்பற்றி தான் பலரும் பேசுகிறார்கள். இதுவரை அதற்கான சரியான காசுக்கணக்கை காட்டாதது கமல் மற்றும் தனத்தின் பிழையாக இருக்கலாம். ஆனால் 2009ம் ஆண்டு வரை தாம் கணக்கை ஊரில் உள்ள புலிகளின் தலைமைக்கு காட்டி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை தாம் கணக்கை வெளிப்படையாகவே காட்ட தயார் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

அதாவது கடந்த 21 வருடமாக மாவீரர் தினத்தை நடத்திவரும் குழுவுக்கும் மற்றும் சங்கீதன் என்னும் தலைமைச் செயலகக் குழுவுக்கும் இடையே நடைபெறும் இழுபறி நிலையின் வெளிப்பாடே இந்த 2 மாவீரர் தின நிகழ்வுகளாகும் என்பதனை நீங்கள் இப்போது அறிவீர்கள். மக்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். "2 இடத்தில் நடந்தால் நாம் போகமாட்டோம்", "இல்லை ஒற்றுமையாக நடக்கவேண்டும் இல்லையேல் போகமாட்டோம்" என்று மக்கள் பேசுவது பொருத்தமாகாது. லண்டனில் மாவீரர் தினத்தை சிதைப்பது என்பது சிறிலங்கா அரசின் நீண்ட நாள் கனவு. இதனை நாமே நிறைவேற்றிக்காட்டக்கூடாது. எனவே முன் எப்போதும் இல்லாதவாறு இம் முறை மக்கள் அதிக அளவில் அணிதிரளவேண்டும். குழப்பத்துக்கு மத்தியிலும் எமது மக்கள் மாவீரர்களை நினைவுகொள்ள ஆயிரக்கணக்கில் திரண்டார்கள் என சர்வதேசத்திற்கும் வெளிநாடுகளுக்கும் செய்திகள் செல்லவேண்டும். இலங்கை அரசு ஆடிப்போகவேண்டும். இதனையே ஒரு உண்மையான தமிழன் எண்ணுவான்.

எமக்கு பொது எதிரி சிறிலங்கா அரசே தவிர வேறு ஒருவரும் இல்லை. இன்று நாம் அடித்துக்கொள்வோம் நாளை ஒற்றுமையாகுவோம். ஆனால் சிங்களவனை நாம் விடமாட்டோம் என்ற மனப்பாங்கு தமிழர்கள் மத்தியில் வளரவேண்டும். யார் யார் எந்த வேலைகளைச் செய்யவேண்டும் என புலிகளின் தலைமை முன்னர் பிரித்துக்கொடுத்திருந்தது. ஆனால் அவை மே18ம் திகதியோடு கலைந்துவிட்டது. தற்போது யாரும் எதனையும் செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.

GTV இன் பக்கச்சார்பு நிலை:


GTV இன் உரிமையாளர் செல்வின் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் ஒரு செல்வந்தர் ஆவர். அவர் தற்போது அவுஸ்திரேலியாவுக்கான நாடு கடந்த அரசின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடு கடந்த அரசானது தற்போது தலைமைச் செயலகம் அல்லது சங்கீதன் குழுவுக்கு ஆதரவாக இருப்பதால் GTV தற்போது ஒரு பக்கச்சார்பான நிலையை எடுத்துவருகிறது. அதாவது இவ்வளவு காலமும் மாவீரர் தினத்தை நடத்திய குழுவின் நீதி நியாயங்களுக்கு செவிகொடுக்காமல் சங்கீதன் மற்றும் நாடு கடந்த அரசின் குழுக்கள் இணைந்து நடத்தும் மாவீரர் தினத்தின் விளம்பரங்களையும் அதுதொடர்பாக அக் குழுவில் இருக்கும் அங்கத்தவர்களையும் பேட்டி கண்டும் போட்டு வருகிறது. GTV இன் இந்த நிலைப்பாடு ஊடக தர்மத்தை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாக அமைந்துள்ளது. நாம் வெளிப்படையாகவே ஒரு சவாலை விடுக்க விரும்புகிறோம். மாவீரர் தினத்தை இவ்வளவு காலமாக நடத்திய நபர்களை ஏன் இவர்கள் அழைத்துப் பேசவில்லை ? அப்படி அழைத்து ஒரு நேர்காணலைக் காண இவர்களுக்கு முதுகெலும்பு உள்ளதா ? துணிவுகெட்ட இவர்கள் ஒருபக்கச்சார்பாக நடப்பதை முதலில் நிறுத்தவேண்டும். 

இதுபோன்ற ஊடகங்களே பொதுமக்களிடையே மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவருன்றது. தமது சொந்த நலனுக்காவும் தேவைகளுக்காகவும் ஒரு ஊடகத்தையே இவர்கள் தவறான பாதையில் இட்டுச்செல்கிறார்கள். குறிப்பாக IBCதமிழ் வானொலியும் ஒரு பக்கச் சார்பான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. ஊடக தர்மங்களை மீறி இவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு தமது ஆரவை நல்கிவருகின்றனர். இதனை விடுத்து உண்மை நிலையைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். கண்ணால் காண்பதும் பொய்(TV) காதால் கேட்பதும் பொய்(RADIO) ! தீர விசாரித்து அறிவதே மெய் என்பார்கள் ! எனவே தமிழ் மக்கள் இந்த மாயைக்குள் இருந்து விடுபடவேண்டும். 

பல ஆண்டுகளாக லண்டனில் மாவீரர் தினத்தை நடத்திவரும் கமல் மற்றும் தனம் போன்றவர்களுக்கு அனுபவமும் வெளிநாடுகளில் எப்படி செயல்படுவது என்பது போன்ற விடையங்கள் நன்கு தெரிந்திருக்கும். அவர்களிடம் மாவீரர் துயிலும் இல்ல "கட்டவுட்" செய்யும் நபர்கள் தொடக்கம் சமையல் கூடம் வரை செயல்பட அதற்கான ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கு என ஒரு கட்டமைப்பு பலகாலமாக இருக்கிறது. காசு தான் பிரச்சனை என்றால் அதனை பிறிதொருவர் கையாளலாம் என்று அறிவுரை கூறுகின்றனர் சிலர். தேசிய தலைமையால் அடையாளம் காட்டப்படாத போராளிகள் திடீரென வெளிநாடுகளுக்கு வந்து அதனை தாம் தான் நடத்தப்போகிறோம் என்றால் எவ்வாறு அதனை அவர்கள் கைகளில் கொடுக்கமுடியும் ? அதனை நடத்திப் பழக்கமில்லாத அவர்கள் அதனைச் சிதைத்தால் என்னவாகும் என அச்சம் வெளியிடுகின்றனர் மேலும் சிலர். 

இதேவேளை 1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தமிழீழ தேசிய தலைமை� செயல்பாட்டாளர்களான தனத்தையோ இல்லை கமலையோ நிதி சம்பந்தமான எந்த ஒரு விசராணக்கும் அவர்களை உட்படுத்தவில்லை என்பதனை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தேசிய தலைமை மெளனிக்கும் வரை அவர்கள் தனம் மற்றும் கமல் போன்றவர்களை நம்பினார்கள். அவர்கள் மெளனிக்க அதனை ஒரு சாட்டாக வைத்து தற்போது அவர்கள் பேசமாட்டார்கள் என்ற துணிவில் பலர் பல கட்டுக்கதைகளை வெளிவிடுகின்றனர். 

எனவே மக்களாகிய நீங்கள் முடிவெடுங்கள் எங்கு செல்வது என்று ? ஆனால் மாவீரர் தினத்தை புறக்கணிக்க மட்டும் நினைக்கவேண்டாம். அது ஒட்டுமொத்த தமிழினத்தை பாதிக்கும். தாயகக் கனவோடு தம் உயிர்களை நீத்த போராளிகளை அவமதிக்கும் செயலாக அமைந்துவிடும். ஒரு கணம் அவர்களை நினைத்துப் பாருங்கள். வரிப்புலி சீருடை அணிந்து மிடுக்காக நடமாடிய எம்மின இளைஞர்களைப் பிடித்து ஆடைகளை உருவி அம்மணமாக்கி, கைகளைக் கட்டி கண்களையும் கட்டி ஒரு நாயை உதைவதுபோல உதைத்து பின்னர் பிரடியில் சுட்டு கொலைசெய்தான் இலங்கை இராணுவச் சிப்பாய். இதனை மறக்கச் சொல்கிறீர்களா ? இல்லை இசைப்பிரியா போன்ற பெண்களின் மார்பகங்களை அறுத்து கொலைசெய்தார்களே அதனை மறக்கச்சொல்கிறீர்களா ? எல்லாம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்க லணடன் மக்கள் நவம்பர் 27 அணிதிரள்வோம் !

அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire