சென்னை துறைமுகத்தில் தொடரும் நெரிசல்: இடம்பெயரும் ஏற்றுமதியாளர்கள்

முகவை.க.சிவகுமார்
Published in Dinamani on October 3, 2011:


திருவொற்றியூர், அக்.2: சென்னைத் துறைமுகத்தில் தற்போது சுமார் 15 ஆயிரம் கன்டெய்னர்கள் தேங்கியுள்ளன. நீண்ட நாள்களாக இருந்துவரும் நெரிசல், அசாதாரண நிலைமையைச் சரி செய்வதில் துறைமுக நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை வழியாக ஏற்றுமதி செய்து வந்த ஏற்றுமதியாளர்கள் தற்போது தூத்துக்குடி, விசாகப்பட்டனம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்கிறார் இப்பிரச்னையைக் கூர்ந்து நோக்கும் துறைமுக உபயோகிப்பாளர் ஒருவர்.
நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர் போராடியும் இப்பிரச்னை முற்றிலுமாக தீர்க்க முடியாததற்கு காரணங்கள் இதோ....
போதிய நுழைவு வாயில்கள் இல்லை: 131 ஆண்டு வரலாற்றுச் சிறப்புடைய இத்துறைமுகத்துக்கு காசிமேடு முதல் போர் நினைவுச் சின்னம்வரை 14 நுழைவு வாயில்கள் இருந்தன. ஆனால் தற்போது 4 அல்லது 5 வாயில்களில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.
சோதனை செய்வதில் தாமதம்: சுங்கவரி, பாதுகாப்பு, சர்வே, சரக்குப் பெட்டக முனைய அனுமதி உள்ளிட்டவற்றை முடிக்க ஒரு லாரிக்கு 5 நிமிடங்கள் ஆகும். மேலும் சுங்க அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஷிப்ட் மாற 2 மணி நேரம் வரை பணிகள் நிறுத்தப்படும். இதில்தான் இறக்குமதியாகும் கன்டெய்னர்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை செல்ல வேண்டும். சுமார் 5 ஆயிரம் கன்டெய்னர்கள் தினமும் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நுழைவு வாயில்களைக் கடந்து செல்ல வேண்டும். தற்போதுள்ள மூன்று கேட்-கள் வழியாக ஒரு நாளின் 1,440 நிமிடங்களில் எத்தனை லாரிகளை அனுப்ப முடியும் என்பது துறைமுக அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
துறைமுகத்தில் கட்டமைப்பு குறைபாடு: தட்டுத் தடுமாறி நுழைவு வாயில்களைக் கடந்தாலும் குண்டும் குழியுமான சாலைகளைக் கடந்து நுழைவு வாயிலை அடையவே குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் பிடிக்
கிறது.
கொள்ளை லாபம் ஈட்டும் கன்டெய்னர் நிலையங்கள்: துறைமுக வளாகத்திலிருந்து கன்டெய்னர்கள் துறைமுகத்திற்கு வெளியே பி.என்.ஆர் முறை மூலம் எடுத்துச் செல்ல 40 அடி கன்டெய்னர்களுக்கு ரூ.10 ஆயிரம் வாடகையாக இறக்குமதியாளர்களிடம் கன்டெய்னர் நிலையங்கள் வசூலிக்கின்றன. ஆனால் லாரி உரிமையாளர்களுக்கு கொடுப்பதோ வெறும் ரூ. 3,300-தான். இதில் நடைபெறும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தாலே நெரிசலுக்கு யார் யார் காரணமாக உள்ளனர் என்பது தெரிய வரும் என்கிறார் கன்டெய்னர் லாரி உரிமையாளர் பூபாலன்.
இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக துறைமுக பெட்டக முனையம் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்றுமதிக்கான கன்டெய்னர்களை துறைமுகத்தில் அனுமதிக்கும் படிவம்-13-ஐ அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு லாரி சென்னை நகரின் எல்லையைத் தொட்டு துறைமுக பெட்டக முனையத்தை அடைய மூன்று முதல் ஐந்து நாள்வரை ஆகிறது. இதனால் லாரி வாடகை பன்மடங்காகி உள்ளது.
திசையை மாற்றும் ஏற்றுமதியாளர்கள்: இந்நிலையில் கப்பல் நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்தின் வழியே செல்லும் அனைத்து கன்டெய்னர்கள் மீதும் ரூ. 13 ஆயிரம் கூடுதல் கட்டணம் விதித்துள்ளன. இக்கூடுதல் செலவினங்களை ஏற்றுக் கொண்டாலும் துரிதமாக கன்டெய்னர்களை அனுப்ப முடியவில்லை. இதனால் நிலைமைக்கு ஏற்ப தூத்துக்குடி, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களை ஏற்றுமதியாளர்கள் நாடிச் செல்லத் துவங்கி விட்டனர். இதனால் சர்வதேச அளவில் சென்னைத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து வருகிறது. பல பெரிய கப்பல் நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்தை புறக்கணிக்கும் நிலை விரைவில் ஏற்படக் கூடும்.
நிலைமையை சரி செய்ய துறைமுக நிர்வாகம் தயாராக இல்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. கடந்த திங்கள்கிழமை துறைமுக நிர்வாகம் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட செய்தியில், துறைமுகத்தில் எவ்வித நெரிசலும் இல்லை. ஏற்றுமதியாளர்கள் தாராளமாக கன்டெய்னர்களை எடுத்து வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது துறைமுக நிர்வாகத்தின் மனநிலையைத் தெளிவாக்குகிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்தே ஆகும். அதிகாரிகள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், ஒவ்வொரு நாளும் எண்ணூர்வரை சுமார் 18 கி.மீ. தூரத்துக்கு ஏன் கன்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன என்பதை ஆராய்ந்தால் பிரச்னை தீரும் என லாரி ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire