இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!

Source: www.dinamani.com



சென்னை, மே 19: சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.

அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.
வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.
ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)
இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.
இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.
ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்
இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'
இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.
புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.
இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.
முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.
எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.
"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.
"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.
ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.
ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire