மே 18 தமிழீழ மக்களது குருதி படிந்த நாள். நான்காவது தமிழீழப் போர் முடிவுக்கு வந்த நாள். வரலாற்றில் மறக்க முடியாத வலிகளைச் சுமந்த நாள். மே 18 தமிழீழ மக்களின் மனதில் ஏற்படுத்திய வலி காலத்தால் துடைக்க முடியாத ஒன்று.
எங்களது மக்கள் குண்டு போட்டும் செல் அடித்தும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே கொல்லப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த மக்களை சிங்கள இராணுவம் புல்டோசர் கொண்டு மண்ணால் மூடியது. இறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் எங்கும் சிதறுண்டு கிடந்தன. அதனை நாய், நரிகள் சாப்பிட்டன. முள்ளிவாய்க்கால் முழுவதுமே பிணவாடை வீசியது. சரண் அடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்படட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் பீரங்கி கொண்டு தாக்கப்பட்டன. மருத்துவமனைகள் தாக்குதலுக்கான இலக்குகளே என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே கொக்கரித்தார். மக்களுக்குப் போதிய உணவு, மருந்து வழங்கப்படவில்லை. ஐ.நா. அதிகாரிகளும் செஞ்சிலுவை ஊழியர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.
சாட்சியமில்லாத இந்த இனப்படுகொலையை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. மௌனம் காத்தது.
ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி – மூன் இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னர் முள்ளிவாய்க்காலை உலங்குவானூர்தியில் மேலே இருந்து சுற்றிப் பார்த்தாரேயொழிய அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த சிறிதளவும் முயற்சிக்கவில்லை.
லிபியா தொடர்பாக அவரும் பாதுகாப்பு அவையும் காட்டிய வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடக் காட்டப்படவில்லை.
மே 25, 2009 அன்று பான் கி – மூன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் இறுதித் தாக்குதல் நடத்திய இடத்தை உலங்கு வானூர்தியில் இருந்து பார்வையிட்ட பின்னர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிப்பதாகக் கூறினார்.
நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பயன்பாடிற்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன். உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு (சிறீலங்கா) கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை என்று பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற பாணியில் திருவாய் மலர்ந்தார்.
போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் சிறிலங்கா அரசு கூறியது. மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை (“Zero Tolerance Casualties”) என்றும் கூசாமல் பொய் சொன்னது.
ஆனால் ஐ.நா.வின் அப்போதைய அறிக்கை 7,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறியது. பிரித்தானிய, பிரெஞ்சு ஊடகங்கள் 20,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறின. போர்க் காலகட்டத்தில் அய்யன்னாவின் பிரதிநிதியாக இலங்கையில் இருந்த கோர்டன் வைசு 40,000 பொது மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறினார். அல்ஜசீரா தொலைக்காட்சி 70,000 பொதுமக்கள் இறந்ததாகக் கூறியது.
சனவரி 15, 2010 அன்று டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் “இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவை” என்று மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.
இதனைத் தொடர்ந்து 2010 மார்ச் மாதம் லூயிசு ஆர்ப்பர் தலைமையிலான பன்னாட்டு நெருக்கடி குழுமம (International Crisis Group) தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் போர்க்குற்றம் தொடர்பான ஒரு விசாரணை தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், பன்னாட்டு மன்னிப்புச் சபை (Amnesty International) எல்லாம் தங்களிடம் உள்ள போர்க்குற்றம் தொடர்பான சாட்சியங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டன.
இந்த அழுத்தங்கள் காரணமாக ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி – மூன் யூன் 3, 2010 அன்று சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை நியமித்தார்.
பான் கி-மூன் நியமித்த வல்லுநர் குழு சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கு நம்பத்தகுந்த சான்றுகள் உள்ளதாக கூறும் அறிக்கையொன்றினை மார்ச்சு 31 இல் சமர்ப்பித்தது. இந்தப் போர் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? அதற்கான ஆயத்தங்களை சிறிலங்கா அரசு எப்படிச் செய்தது? என்பதை அந்த அறிக்கை புட்டுக்காட்டியுள்ளது.
1) இந்தியாவின் தலையீடும், இந்திய கடல்பகுதியில் இந்தியா தனது போர்க்கப்பல்களை நிறுத்திப் புலிகளைக் கண்காணித்து வந்ததும் செய்மதி மூலம் கிடைக்கும் தகவல்களை சிறிலங்காவுக்குக் கொடுத்து உதவியது மிக முக்கியமான ஒன்றாகும்.
2) பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிறிலங்கா இந்தப் போரைச் செய்ததால் உலக நாடுகளின் தலையீடுகள் இல்லாமல் இருந்தது.
இலங்கை அரசின் இறுதிகட்டப் போருக்கான தயாரிப்பு
1) பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டம் (Prevention of Terrorism Act)
2) அவசரகாலச் சட்ட விதிகள் (Emergency Regulations )
3) ஆட்சித்தலைவரின் அதிகாரத்தின் மூலமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 300 குடும்ப உறுப்பினர்கள் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள் (எடுத்துக்காட்டு – கோத்தபயா இராசபக்சே பாதுகாப்பு அமைச்சுச் செயலராகவும் பசில் இராசபக்சே அதிபரின் ஆலோசகராவும் நியமிக்கப்பட்டது).
4) போர் நிறுத்த கால கட்டத்தில் 66 மனித உரிமை ஆர்வலர்கள் அரச படையால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
5) செப்தெம்பர் 8, 2008 அன்று யாருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தினால் போர் நடைபெறும் பகுதியில் இருந்த அனைத்து மனித உரிமை அமைப்புகளும் வன்னிப்பகுதியை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசு கட்டாயப்படுத்தியது.
ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கை இலங்கை அரசு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
1) அப்பாவி பொதுமக்களைக் கொன்றது.
2) வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றது.
3) கைது செய்த போர்க்குற்றவாளிகளைக் கொன்றது.
மேலும் இலங்கை அரசு பன்னாட்டுப் போர் விதிகளை மீறியுள்ளதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு குற்றம் சாட்டியுள்ளது.
1) இலங்கை அரசு பன்னாட்டு மனித உரிமை விதிகளையும் மீறியுள்ளது. சனவரி 29 வரை ஐ.நா அதிகாரிகள் இருவர் போர்ப்பகுதியில் இருந்தார்கள். அவர்கள் இறுதியாக போர்ப்பகுதியை விட்டு வெளியேறும் பொழுது நிலமெங்கும் மக்களின் பிணங்கள் இருந்ததால் வான் நோக்கி பார்த்தவாறே நடந்து வந்ததாகவும், ஆனால் மரங்களில் எல்லாம் வெடித்துச் சிதறிய குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.
2) போரில்லாப் பகுதி என்று கூறிய இடத்தில் வந்து குவிந்த மக்களைக் கொன்றது.
3) பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவித்தது.
4) மருத்துவமனையின் கழிவறை வாயில் முதற்கொண்டு நோயாளிகளால் நிரம்பிய மருத்துவமனைகளின் மீது குண்டுவீசியது.
இறுதிக் காலங்களில் மயக்கமருந்து கொடுக்கப்படாமல் 40,000 அறுவை வைத்தியம் அங்கு நடைபெற்றதாகவும் கையுறைகள் இல்லாததால் மருத்துவர்கள் வெறும் கைகளினாலேயே அறுவை வைத்தியம் செய்ததாகவும் மேலும் “blade” இல்லாததால் ஒருமுறை பயன்படுத்திய “blade” யையே மறுமுறை அவர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர்கள் தங்களுக்கு மயக்க மருந்துகளும் சில முக்கியமான மருந்துகளும் தேவை என அரசிடம் கோரிக்கை வைக்க அரசோ இவர்களுக்கு தலைவலிக்கு கொடுக்கப்படும் சில மாத்திரைகளை மட்டுமே கொடுத்தது. மேலும் மனிதநேய அடிப்படையில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இவை எல்லாம் பன்னாட்டு மனித உரிமைகளை மீறிய செயல்களாகும் என அறிக்கை கூறுகின்றது.
மே 13, 2009 அன்று ஐ.நா. போர்ப் பகுதியில் 1,00,000 மக்கள் மட்டுமே இருப்பதாக கூறியது. இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி வெறும் 70,000 மக்கள் மட்டுமே போர்ப்பகுதியில் இருப்பதாகக் கூறினார். இன்னும் ஒரு படி மேலே போய் இலங்கை அரசோ வெறும் 10,000 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறியது.
ஆனால் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கமோ காயமடைந்து இருந்த 14,000 பொதுமக்களைத் தனது கப்பல் மூலம் இலங்கையின் மற்றொரு பகுதிக்கு வைத்தியத்திற்காக கூட்டிச்சென்றதாகக் கூறியது. இவர்களில் 5,000 பொதுமக்கள் காலையோ, கையையோ இழந்தவர்களாவர். மேலும் இவர்களை எல்லாம் “போரில்லாப் பகுதி” என்று அரசு அறிவித்த பகுதியில் இருந்தே கொண்டு சென்றோம் என செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
உலக உணவுத் திட்ட அலுவலகம் போர்ப்பகுதியில் 4,20,000 பொதுமக்கள் இருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்லவும் அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் அரசு 1,00,000 மக்களுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளித்தது. அதாவது ஒருவருக்குத் தேவையான உணவு நான்கு பேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பசியால் இறந்தார்கள்.
ஐ.நா நிபுணர் குழுவின் கோரிக்கைகள்
1) போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இவை பற்றி ஒரு சுயேட்சையான பன்னாட்டு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும்.
2) தற்பொழுதும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்.
3) விசாரணை பன்னாட்டு சட்ட விதிகளின்படி நடைபெற வேண்டும்.
4) ஐ.நா.வும் இந்தச் சிக்கலில் சில தவறுகளைச் செய்துள்ளது.
5) மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பான் கி – மூன் மூவர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தார். இப்போது அந்தக் குழு கொடுத்த அறிக்கை சிறிலங்கா அரசு போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாக் குற்றம்சாட்டுகிறது. அதற்கான சாட்சியம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அந்த அறிக்கையையிட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கத் தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கி – மூன் கையை விரித்துள்ளார். சிறிலங்கா அரசு, பாதுகாப்பு அவை, பொதுச் சபை, ஐ.நா.வின் மனித உரிமைக்கான சபை அல்லது பன்னாட்டு அமைப்பு ஆகியவற்றின் சம்மதம் இன்றி ஒரு பன்னாட்டு விசாரணை ஆணயத்தை அமைக்க முடியாது என்கிறார்.
சிறிலங்கா பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கப்பட்ட ஐ.நா.வின் உடன்பாட்டில் கையெழுத்து இடவில்லை. அதனால் அந்த நீதிமன்றம் பாதுகாப்பு அவை சொன்னால் ஒழிய நடவடிக்கை எடுக்காது. மேலும் பாதுகாப்பு அவையில் ரஷ்யா, சீனா இரண்டு நாடுகளின் வீட்டோ வாக்கு வேறு இருக்கிறது. (Without consent of Sri Lanka’s government or a decision by the U.N. Security Council, General Assembly, Human Rights Council or other international body, Ban will not move to set up a formal investigation of the civilian deaths. Sri Lanka is not a member of the International Criminal Court, which means the Hague-based court would require a referral by the U.N. Security Council to investigate any possible war crimes there. Veto powers Russia and China, as well as India, are among the council members opposed to formal Security Council involvement in the case of Sri Lanka, diplomats told Reuters.)
அதே சமயம் பல மனித உரிமை அமைப்புக்கள் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைக்க பான் கி – மூன் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாகச் சொல்கின்றன.
போரின்போது சிங்கள இராணுவம் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், ஆண்கள் என அகவை, பால் வேறுபாடின்றி 40,000 தமிழ்மக்களை மூன்று நாட்களில் கொன்றொழித்தது. சரண் அடைந்த தளபதிகளையும் போராளிகளையும் பொதுமக்களையும் சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றது. பெண்போராளிகளும், பெண்களும் கும்பல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
எனவே எதிர்வரும் மே 18 இல் ஐ.நா. தலைமையக முன்றலில் நடைபெற இருக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் இரண்டு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.
(1) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அவர்களது கனவுகளை நினைவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தல்.
(2) சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு அவை, பொதுச் சபை, அய்யன்னாவின் மனித உரிமைக்கான சபை, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், பன்னாட்டு சமூகம் ஆகியவற்றை வற்புறுத்தல்.
தமிழீழ விடுதலைக்கு நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொட்டிய குருதி வீண் போகக் கூடாது. அவர்களைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
நாசி ஹிட்லரது ஆட்சியில் 400,000 அப்பாவி யூதமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கழுவாய் தேடும் வகையில் பன்னாட்டு சமூகம் இஸ்ரேல் என்ற ஒரு தனிநாட்டை சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது.
பாசீச மகிந்த இராசபக்சே ஆட்சியில் 200,000 அப்பாவி தமிழ்மக்கள் கொல்லபட்டதற்குக் கழுவாய் தேடிட தமிழ்மக்களது நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திர தமிழீழத்தை மீள் உருவாக்கப் பன்னாட்டு சமூகம் முன் வரவேண்டும்.
இனியொரு விதி செய்வோம். நீதியின் கதவுகள் திறக்கு மட்டும் தொடர்ந்து போராடுவோம். விடுதலை நெருப்பை ஓயவிடாது வளர்ப்போம்.
மே 18 முடிவல்ல, மற்றொரு போராட்டத்தின் தொடக்கம்!
நக்கீரன்
No comments:
Post a Comment