Source: www.dinamani.com
திருவொற்றியூர், மார்ச் 20: சென்னை துறைமுகத்திலிருந்து லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் உரம், நிலக்கரி போன்றவை சாலைகளில் சிதறுவதால் சென்னை நகரம் மாசடைந்து வருகிறது.
தூசியைக் கட்டுப்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி,பொட்டாசியம்,கந்தகம், யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்கள் அதிக அளவில் கையாளப்படுகின்றன. கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படும் இவை லாரிகள், ரயில்வே வேகன்கள் மூலம் வெளி உபயோகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
துறைமுகத்தில் சேமித்து வைக்கப்படும் நிலக்கரியிலிருந்து வெளியேறும் தூசியால் உயர் நீதிமன்ற கட்டடங்கள், தலைமைச் செயலக கட்டடங்கள் தொடர்ந்து மாசடைந்து வருவதாக புகார்கள் எழுந்தன. எனவே இதனைக் கட்டுப்படுத்த துறைமுக நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் கப்பல் தளத்திலிருந்து நிலக்கரி சேமித்து வைக்கப்படும் இடம் வரை ரூ.43 கோடி செலவில் மூடப்பட்ட "கன்வேயர்கள்' அமைக்கப்பட்டன.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளால் காரணமாக அவை சரிவர இயங்கவில்லை. மேலும் காற்று பலூன் மூலம் நிலக்கரி சேமித்தல், தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் போன்ற பல்வேறு நடைமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளதாக துறைமுகம் நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் நடைமுறையில் இது பெயரளவிற்கே செயல்படுத்தப்படுவதாக துறைமுக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
10 வது நுழைவு வாயில்: நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும் போர் நினைவுச் சின்னம் அருகே உள்ள நுழைவு வாயில் எண் 10 வழியாகவே வெளியே செல்கின்றன. எனவே லாரி டயர்கள், தார்பாய்களில் சிதறியுள்ள நிலக்கரி தூசிகளை தண்ணீரால் சுத்தப்படுத்தி வெளியேற்றப்படுவதாக துறைமுக நிர்வாகம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இதுவும் பெயரளவிற்கே செயல்படுகிறது.
தினமும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் நுழைவு வாயில் பகுதியில் துடைப்பம் மூலம் சுத்தம் செய்து வருவதை காண முடிகிறது. நுழைவு வாயிலில் மட்டும் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் சாலைகள் நெடுகிலும் நிலக்கரி துகள்கள் சிதறிக்கிடக்கின்றன.
ராயபுரம் பகுதி முழுவதும் யூரியா: சனிக்கிழமை காலை லாரிகளில் ஏற்றி வரப்பட்ட யூரியா, ராயபுரம் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதில் வழுக்கி விழுந்து பல வாகன ஓட்டிகள் காயமடைந்துள்ளனர். துறைமுகத்திலிருந்து யூரியா ஏற்றி வந்த லாரிகளில் சரியாக மூடப்படாததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேரம் ஆனதம் யூரியா தானாகவே காற்றில் கரைந்து போனது. இது குறித்து துறைமுக அதிகாரிகளோ, போக்குவரத்து காவல் துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வாகனங்களை கண்காணிக்க கோரிக்கை: கந்தகம், பொட்டாஷ் போன்றவை உரங்கள், வேதிப்பொருள்கள் உள்ளிட்டவை சாலைகளில் சிதறுவதால் ஏற்படும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவைகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே துறைமுகங்களில் லாரிகளில் இத்தகைய பொருள்கள் ஏற்றப்படும்போதே சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை துறைமுக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தகுதியற்ற, பழுதடைந்த லாரிகளை தடை செய்ய வேண்டும். மேலும் மாசுவைக் கட்டுப்படுத்த போதுமான முன்னேற்பாடுகளை துறைமுக நிர்வாகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment