தமிழக அரசியலில் புதிய வாய்ப்பினை ஏற்படுத்த தவறி விட்டார் வைகோ



தமிழக அரசியலில் புதிய வாய்ப்பினை ஏற்படுத்த தவறி விட்டார் வைகோ

முகவை.க.சிவகுமார்,
திருவொற்றியூர்.

 அ.தி.மு. கூட்டணியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் புதிய வாய்ப்பினை ஏற்படுத்த வைகோ தவறிவிட்டார் என்ற கருத்து பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. 
1994 மே 6-ல் 9 மாவட்டச் செயலாளர்கள், 400 பொதுக்குழு உறுப்பினர்களுடன் தி.மு.க-விலிருந்து பிரி்ந்து மிகுந்த பலத்துடன் புதிய திசையில் தனது பயணத்தைத் துவக்கிய ம.தி.மு.க என்ற கப்பல் தற்போது திக்குத் தெரியாத இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைக்கு என்ன காரணம்?
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றி, தோல்வி, பல்வேறு பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்தெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் சமீபத்தில் ம.தி.மு.க தலைவர் வைகோ எடுத்த நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் தொண்டர்கள், அரசியல் ஆர்வலர்கள், எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவும் கருத்துகள் எப்படி உள்ளன என்பது குறித்த ஓர் சிறிய ஆய்வு.
    தமிழகத்தின் நீண்டகாலமாக அரசியல்வாதி, சிறந்த பாராளுமன்றவாதி, நிர்வாகக் கட்டமைப்பு நிறைந்த அரசியல் கட்சியான தி.மு.க-வில் பயிற்சி பெற்றவர் என்பது போன்ற பன்முகத் தன்மை கொண்ட வைகோ, தான் கற்ற பாடங்களை, அனுபவ முதிர்ச்சியை ம.தி.மு.க-வில் செயல்படுத்தத் தவறிவிட்டாரோ என்ற ஐயப்பாடு பலர் மத்தியில் தற்போது நிலவுகிறது என்பதே எதார்த்த நிலை.  தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் வைகோ எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை கூறும் விதமாகவே பின்வரும் கருத்துக்கள் அமைந்துள்ளன.
     மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் முனைப்பு காட்டின.  ம.தி.மு.க., இடதுசாரிகள் அ.தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே உள்ளனர். ஆனால் இக்கட்சிகளுக்கு முதலில் இடங்களை ஒதுக்காமல் புதிய தமிழகம், மூ.மு.க-விற்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்போது ம.தி.மு.க.விடம் இடங்கள் குறித்து ஏதும் உறுதி அளிக்கப்படவில்லை.  இதுவரை வைகோ பொறுமையாக இருந்ததது தவறில்லைதான்.
     ஆனால் என்றைக்கு புதிய வரவான தே.மு.தி.க-விற்கு 41 இடங்களை அ.தி.மு.க வழங்குவதாக அறிவித்ததோ அன்றைக்கே அரசியல் அனுபவம் பெற்ற வைகோ அ.தி.மு.கவிற்கு கடிவாளம் இடும் வேலைகளைத் துவங்கி இருக்க வேண்டும். உடனடியாக ஜெயலலிதாவைச் சந்தித்து ம.தி.மு.கவிற்கு உரிய இடங்கள் குறித்து உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது முதல் தவறு என்ற கருத்தை ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 
       6, 8, 7 என ஒற்றை இலக்கத்தில் அ.தி.மு.க பேரம் பேசிய உடனேயே இது நியாயமா? என இடதுசாரித் தலைவர்களிடமும், விஜயகாந்திடமும் வைகோ ஆலோசனை செய்திருக்கலாம். பேசினால் தானே நியாயம் கிடைக்கும்
அவர்கள் மூலம் கூட்டணியில் தனது பிடியை வைகோ இறுக்கி இருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. அவ்வாறு செய்தால் ஜெயலலிதா கோபம் கொள்வார் என வைகோ நினைத்ததே இதற்கு காரணம். மற்றொரு தரப்பின் கருத்து.
      இனி வரும் கட்டம்தான் முக்கியமானது.  கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக ஜெயலலிதா அறிவிக்கிறார்.  தீடீரென எழுந்த இந்த சுனாமியால் தேர்தல் களத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமாக இருக்கும் தா.பா., மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன், சேதுராமன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தே.மு.தி.க அலுவலகம் விரைகின்றனர்.  அங்கு விஜயகாந்துடன் ஆலோசனை நடத்துகின்றனர்.  ஆலோசனையில் பங்கேற்க உடனே வரும்படி வைகோவிற்கு அழைப்பு விடுக்கின்றனர்.
      ஆனால் இந்த முக்கிய கட்டத்தில் வைகோ வேலூர் சென்றுவிட்டார். வேலூரிலிருந்து திரும்புவதை காலதாமதம் செய்கிறார்.  காத்திருந்த தலைவர்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.  இருப்பினும் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டும் எனில் ம.தி.மு.க-வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதை ஜெயலலிதாவிற்கு முதல் நிபந்தனையாக வைக்கிறார் விஜயகாந்த். ஒரு நாள் அவகாசமும் அளிக்கப்படுகிறது. ஆனாலும் இடதுசாரிகளையோ, விஜயகாந்தையோ சந்தித்து ஆலோசனை நடத்துவதில் வைகோ ஆர்வம் காட்டவில்லை. 
நீங்கள் அ.தி.மு.க-வில் கூட்டணியில் இருக்கிறீர்களா, இல்லையா என்பதை முதலில் முடிவு செய்த பிறகு என் முடிவை நான் தெரிவிக்கிறேன் என வைகோ கூறியதாகக் கூறப்படுகிறது.  அன்றைய நிலையில் தனது பிடிவாதத்தை வைகோ சற்று தளர்த்தி இருந்தால் தமிழகத்தின் தேர்தல் களம் எங்கோ சென்றிருக்கும். இந்த அரிய சந்தர்ப்பத்தையும் வைகோ தவறவிட்டார். இது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
       முந்தைய ஜெயலலிதாவாக இருந்திருந்தால் இடதுசாரிகள், விஜயகாந்துடன் மீண்டும் கூட்டணியைத் தொடர விரும்பியிருக்க மாட்டார். அறிவித்த வேட்பாளர் பட்டியலையும் நிறுத்தி வைத்திருக்க மாட்டார். தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்திருக்க மாட்டார். ஈகோவை விட்டு விட்டு புதிய ஜெயலலிதாவாக அவதாரம் எடுத்தார். உருவப் பொம்மை எரிப்பு போன்ற தகாத சம்பவங்களால் மனதுக்குள் ஆயிரம் கோபங்கள் ஜெயலலிதாவிற்கு இருந்திருக்கும். ஆனால் ஜெயலலிதா வெளிக்காட்டிக் கொள்ளாததுதான் அரசியல். ம.தி.மு.கவிற்கு 12 தொகுதிகள் தரப்படும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ம.தி.மு.க வெளியேறியது.
         இந்த நிலையில்தான் வைகோ கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டுகிறார். இந்த சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடுவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.  கருணாநிதியை எதிர்த்துப் பேச தி.மு.கவில் ஆள் இல்லை.  அதே போல் வைகோவின் மனநிலையை எதிர்த்து வெளிப்படையாகப் பேச ம.தி.மு.கவிலும் ஒருவரும் இல்லை.  எனவே தீர்மானம் ஏகமனதாகிறது. ஆனால் அது பெரும்பான்மையான ம.தி.மு.கவினரின் முடிவா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
      எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் சமத்துவ மக்கள் படை, ஜான் பாண்டியன் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க தனித்தே களம் காணுகிறது. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றே தீருவோம் என அக்கட்சியினர் கங்கணம் கட்டுகின்றனர்.  இவர்கள் அழைப்பு விடுத்தும் அதனையும் வைகோ ஏற்கவில்லை. இந்த கட்சிகள் இன்னும் பல உதிரிக் கட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி, அத்வானி உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசனை செய்து புதியதொரு கூட்டணிக்கு வைகோ தலைமையேற்றிருக்க வேண்டும். 
       தமிழகத்தைச் சீரழிக்கும் இலவசங்களையெல்லாம் ஒழித்துவிட்டு, குஜராத் மோடி, பீகார் நித்திஷ்குமார் போன்று நேர்மையானதோரு ஆட்சியை தமிழகத்திற்கு வழங்குவேன். மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வைகோ அறிவித்து தமிழகத்தின் தெருக்களில் நின்று போராடியிருந்தால் முதிர்ச்சி பெற்ற தலைவராக அவர் பரிணமித்திருப்பார்.
      தனது சோகத்தை கட்சியினரிடம் காட்டியிருக்க கூடாது.  தேர்தல் வெற்றியில் தலைவருக்கே நம்பிக்கை இல்லையெனில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யார் உறுதியளிக்க முன்வருவார்கள். அரசியல் கட்சி என்றால் தேர்தல்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
     சென்னையைச் சேர்ந்த மதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், இத்தகைய கருத்துக்கள் நியாயமானவையே.  இவ்வாறு கூட்டணி அமைத்து வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், சிவகாமி, பச்சமுத்து உள்ளிட்டோர் ஓரிலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற்றிந்தால் கூட தமிழகத்தின் எதிர்காலம் மாறியிருக்கும்.  அரசியல் என்பதே சூழ்ச்சியில் வெல்வதில்தான் உள்ளது என்றான பிறகு சூழ்ச்சி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்த சூழ்ச்சிக்கு இரையாகமல் இருப்பதே ஒரு அரசியல் கட்சியின் தேவையாகும்.
     அதைவிடுத்து நாம் நின்றால்... வாக்குகள் பிரிந்தால்.....இவர் வெற்றி பெற்றால்..... இவர் தோல்வியடைந்தால்.....பழி விழுந்தால்.... என்பதெல்லாம் சுயவாழ்க்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும்.  பொதுவாழ்க்கைக்குச் சரிப்பட்டு வராது. நாமே புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது பின்னால் நடக்கப் போவதையெல்லாம் நாம் ஏன் முடிவு செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு காலம்தான் விடை அளிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire