Friday, August 6, 2010

கேள்விக்குறியாகும் சென்னைத் துறைமுக எதிர்காலம்


முகவை க. சிவகுமார்
Source: www.dinamani.com

திருவொற்றியூர், ஆக.5: சென்னை-எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் ரூ. 600 கோடி மதிப்பீட்டிலான மணலி-எண்ணூர் சாலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ரிப்) தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் வடசென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்குமா, சென்னை துறைமுகத்தின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலைகள் எழுந்துள்ளன.
சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள், 1.30 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. தினமும் வந்து செல்லும் சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்களில் 95 சதவீதம் திருவொற்றியூர், ராயபுரம் வழியேதான் துறைமுகத்திற்கு வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இவ்வாறான பல பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் பொன்னேரி நெடுஞ்சாலை, உள்வட்டச்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் துறைமுக இணைப்பு சாலைகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைச் செயல்படுத்த சிறப்பு திட்ட அமைப்பு (எஸ்.பி.வி) ஏற்படுத்தப்பட்டது. ரூ. 329 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்துக்கு 2005 செப்டம்பர் 14-ல் அப்போதைய கப்பல், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்டினார். 2007-ல் இத்திட்டம் நிறைவுறும் என அவர் உறுதியளித்தார்.
மதிப்பீடு ரூ.600 கோடியாக உயர்வு:
இதற்கிடையே நிலம் கையகப்படுத்தல், ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து அகற்றப்படும் பொதுமக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள், நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போனது.
ஆனால் திட்ட மதிப்பீடு 2008,நவம்பரில் ரூ.600 கோடியாக உயர்த்தி மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு ஒராண்டாகியும் பணி ஆணை வழங்கப்படாமலே டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பங்குத் தொகையை அளிப்பதில் சென்னைத் துறைமுக நிர்வாகம் காட்டிய மெத்தனமே இதற்குக் காரணம் என நெடுஞ்சாலைத் துறையும், நெடுஞ்சாலைத் துறையே காரணம் என துறைமுக நிர்வாகமும் பரஸ்பரம் புகார் தெரிவித்தன.
இத்திட்டம் குறித்து பிப்ரவரி 2, 2010-ல் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான்; கால தாமதத்திற்கான காரணங்கள் குறித்து ஆராய விரும்பவில்லை. விரைவில் மீண்டும் பணிகள் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கண்டிப்பாக இத்திட்டம் நிறைவேறும் என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

மீண்டும் டெண்டர்... மீண்டும் தாமதம்...மீண்டும் ரத்து:
இதன் தொடர்ச்சியாக சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ. 269 கோடிக்கு ஜூன் 2, 2010 ல் டெண்டர் விடப்பட்டது. இதில் டபுள் கவர் சிஸ்டம் என்ற அடிப்படையில் தகுதியான 11 ஒப்பந்ததார்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது விலைப் புள்ளிகளில் யார் குறைவாக கொடுத்துள்ளார்களோ அவர்களுக்குப் பணி உத்தரவு வழங்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சென்னைத் துறைமுக நிர்வாகம் முறையான ஒப்புதலை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியும் கப்பல் துறையிலிருந்தோ, சென்னை துறைமுகத்திடமிருந்தோ எவ்வித பதிலும் இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சக ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்றும் இது குறித்த ஆணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. துறைமுக அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது தகவல்கள் உண்மைதான் என பதில் அளித்தனர்.

1 comment:

New Maersk Vessel Class To Enter Service

  A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...