Source:
http://www.tamilkathir.com/news/3698/58//d,full_article.aspxPosted by: on ஜூலை 8, 2010
உலகத் தமிழர்களின் கனவு தேசமாக விளங்கிய தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திர வேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் எங்கெங்கோ, தொலை தூரங்களில் ஒதுங்கி நின்ற அந்த நம்பிக்கைத் துரோகிகள் இப்போது புலிகளின் தேசத்தில் குதித்து மகிழ்கிறார்கள். ரோமானியப் பேரரசை நிறுவிய யூலியஸ் சீசரைக் கொல்வதற்கு அவரது அரசவையிலிருந்தவர்கள் சிலரால் திட்டம் தீட்டப்பட்டது.
சீசர் தன்னை வாழ்நாள் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்ததை, அந்தப் பதவிக்குக் குறி வைத்துக் காத்திருந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிய, சீசரைக் கொல்வதற்காகப் பல திட்டங்களைத் தீட்டினார்கள். அவர்கள் அனைவருமே சீசரின் அரசவை உறுப்பினர்கள். பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருந்தவர்கள். சீசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். ஒவ்வொரு திட்டமாக ஆராய்ந்து, இறுதியாக அரசவை செல்லும் பாதையில் அவரை மடக்கி, கத்தியால் குத்திக் கொல்வது என்று முடிவு செய்தார்கள்.
முதலில் அவர்களது திட்டப்படி டில்லியஸ் சிம்பர் எனும் ஒரு உறுப்பினர் சீசரால் நாடு கடத்தப்பட்ட தன் சகோதரனுக்காக அவரிடம் பேசும் சாக்கில் சீசரது கரங்களை அவரது மேலங்கியுடன் சேர்த்து தன் கைகளால் பிடித்துக் கொண்டார். சிம்பர் சீசரின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால் சீசரால் அவற்றை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
சரியான தருணத்தை உணர்ந்த எதிரிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை வெளியே எடுத்து சீசரை நோக்கிப் பாய்ந்தார்கள். முதலில் சர்விலஸ் காஸ்கா என்பவன் கத்தியை சீசரின் இடது தோளை நோக்கி செலுத்த முயன்றான். ஆனாலும் அந்த பரபரப்பில் அவனது குறி தவறியது. சீசர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காஸ்கா தனது சகோதரனை நோக்கிக் கத்த, அவன் சீசரின் விலாவில் கத்தியைச் செலுத்தினான்.
இன்னொரு உறுப்பினரான காசியஸ் லான்ஜினஸ் குத்த முயன்றபோது குறி தவறி மார்கஸ் ப்ரூடஸின் விரலில் குத்திவிட்டான். பின்னர் காசியஸ் சீசரின் முதுகிலும், புரூடஸ் அவரது இடுப்பிலும் குத்தினர். இன்னொருவன் சீசரது தொடையில் குத்த, தாக்குதல் எல்லா முனையிலிருந்தும் சரமாரியாய் நடந்தது. ஒவ்வொருவரும் சீசரது கொலையில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதுபோல் தொடர்ந்து குத்தினர்.
உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக்களுடன் நிலத்தில் வீழ்ந்த சீசர், தனது வளர்ப்பு மகனாகவே கருதி, அன்பு செலுத்திய ப்ரூடஸைப் பார்த்து ''நீயுமா ப்ரூடஸ்?'' என்ற கேள்விக் கணையுடன் தன் உயிரை நீத்தார்.
அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சீசர், அதே மண்ணிற் பிறந்த ப்ரூடஸ்களால் கொலை செய்யப்பட்டார். தமிழீழ ஆன்மாவும் முள்ளிவாய்க்காலில் ப்ரூட்டஸ்களின் துரோகத்தனத்தால் புதையுண்டு போனது.
அங்கே மன்னன் அழிக்கப்பட்டான். இங்கே ஒரு தேசமே அழிக்கப்பட்டது. அந்தத் தேசத்தின் மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள். ஆதிக்க வெறியால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் ப்ரூடஸ்கள் தனியாகவும், கூட்டாகவும் தங்கள் சதிகள் ஊடாகத் தமிழீழ ஆன்மாவை அக்கினிக் குண்டுகளால் அழித்து முடித்தார்கள். தமிழீழ விடுதலைக்காகத் தம் உயிரையும் ஈந்த மாவீரர்களின் அத்தனை கனவுகளையும் பேராசைப் பேய் பிடித்த ப்ரூடஸ்கள் எதிரிகளிடம் விலை பேசி விற்றார்கள்.
இரண்டு இலட்சம் அப்பாவித் தமிழர்கள் தமது இன்னுயிர்களை ஈந்து வளர்த்தெடுத்த விடுதலை வேள்வியை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தார்கள். தமிழீழத்தின் அந்தச் சின்னஞ்சிறு கடற்கரைக் கிராமம் உலக மக்களின் உச்சரிப்பிற்கு இலக்கானது. ஐ.நா.விலும் கூட அந்தக் கிராமம் அரச பயங்கரவாதத்திற்கான அடையாளக் குறியீடானது. அப்போதும் தமிழீழ ஆன்மா ''நீயுமா....?'' என்று கேட்டபடியே மூச்சை நிறுத்தியது. யார், யாரை எல்லாம் தமது காவலர்கள் என்று தமிழீழ மக்கள் கொண்டாடினார்களோ... யார், யாரெல்லாம் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று தமிழீழ மக்கள் நம்பியிருந்தார்களோ... அவர்களுக்குள்ளேயே ப்ரூடஸ்கள் உருவாகினார்கள்.
அவர்களே முன்நின்று தமிழீழ ஆன்மாவைக் கொன்று குவித்தார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழீழம் சிந்திய குருதியின் அளவுக்கு, அந்த இறுதிச் சமர்க்களத்தில் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை மறவர்களின் எண்ணிக்கையின் அளவுக்கு ப்ரூடஸ்கள் மடியில் பணக் கட்டுக்கள் பரிசாக வீழ்ந்தன. தமிழீழம்
தன்னை இழந்தது... தன்மானத்தை இழந்து மௌனத்தில் புதைந்து போனது.
இப்போது, இது ப்ரூடஸ்களின் காலம். தமிழீழ மண்ணில் அச்சமற்று வலம் வருகின்றார்கள். அவர்களை எதிர்த்து நிற்கவோ, ஏன் என்று கேட்கவோ இப்போது அங்கே யாருக்கும் துணிவு பிறப்பதில்லை.
இந்த ப்ரூடஸ்களின் துணையோடு, சிங்களம் நடத்தி முடித்த, நடத்திக்கொண்டிருக்கும் அத்தனை கொடூரங்களும் அவர்களை மீண்டும், மீண்டும் அச்சுறுத்திக்கொண்டே இருப்பதால், அவர்களது மௌனம் இப்போது கலையப் போவதில்லை.
அதனால், தமிழீழம் இப்போது ப்ரூடஸ்கள் தேசமாகவே மாறிவிட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவில் அஞ்ஞானவாசம் மேற்கொண்டிருந்த வரதராஜப்பெருமாளும் இப்போது யாழ்ப்பாணத்தில் வீதி வலம் வர ஆரம்பித்துள்ளார். 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, வடக்கு கிழங்கு இணைந்த தமிழர் தாயகம்' என்ற கோசங்களை முன் வைத்த டக்ளஸ் இப்போது வடக்கை முழுமையாகக் கைப்பற்றி, வடக்கின் முதல்வராகும் கனவோடு பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த வாரத்தில் இந்த ப்ரூடஸ்களின் ஒன்றுகூடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த ஒன்று கூடலை சிறீலங்காவின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்காவின் பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த ஒன்றுகூடலில் இந்த ப்ரூடஸ்களைப் பாராட்டிய கோத்தபாய ராஜபக்ச, ''உங்களுக்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது.
புலிப் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமது படையினர் மட்டும் தியாகங்களை செய்யவில்லை. ஈ.பி.டி.பி, புளொட், ரி.எம்.வி.பி உட்பட பல தமிழ்க் கட்சிகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை நாம் அழித்தோம். அதற்காக உங்களின் உறுப்பினர்கள் பலரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள். உங்களின் தியாகத்தை நாம் மறக்கவில்லை.
மீண்டும் நாட்டில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் கே.பி உறுதியாக இருக்கின்றார். கடந்த கால நிகழ்வுகளை நாங்கள் மறந்துவிட்டோம். இப்பொழுது எங்களுடன் ஒத்துழைக்கும் கே.பி.யிற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.'' என்று தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாத நடுப் பகுதியில் திரு. கே.பி. அவர்களின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா சென்று திரும்பிய 9 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வரும் தகவல்கள் புலம்பெயர் தமிழர்களை அதிர்ச்சியில் தொடர்ந்தும் உறைய வைத்து வருகின்றது. புலம்பெயர் தமிழர்களைத் தங்களது சதி வலைக்குள் வீழ்த்துவதற்குச் சிங்களம் கே.பி. என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
சிங்கள தேசத்தினால் சிறை பிடிக்கப்பட்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளனர். திரு. கே.பி. ஊடாக சிங்களம் பல நிபந்தனைகளுடனான தமிழின சரணாகதியை நடைமுறைப்படுத்த முனைகின்றது. சிங்கள தேசத்திடம் சிறைபட்டு, எதிகாலமற்று ஏங்குகின்ற விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய அக்கறைமீது தப்பிதம் கற்பிக்க முடியாது.
ஆனால், தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிர்களையும் அர்ப்பணித்துவிட்டு, அந்த நாளைத் தரிசிப்பதற்காகத் தமிழீழ மண்ணிலும், காற்றிலும், கடலிலுமாக ஏங்கித் தவிக்கும் மாவீரர்களதும், மக்களதும் ஆன்மாக்களுக்கு நாம் என்ன பதில் செய்யப் போகின்றோம்? தமிழீழம் நிபந்தனையற்ற விதமாக சிங்களத்திடம் சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காக சிங்களம் விதிக்கும் சதி வலைக்குள் நாம் தெரிந்து கொண்டே விழப் போகின்றோமா? அல்லது, அந்த நிபந்தனைகள் ஊடான சரணாகதியை 'இராஜதந்திரம்' என்ற ஒற்றை வார்த்தையால் மூடி மறைக்கப் போகின்றோமா? என்பதில்தான் தமிழீழ மண்ணின், தமிழீழ மக்களின் எதிர் காலமே தங்கியுள்ளது.
-அகத்தியன்