ராஜீவின் கொள்கை, கொடூரக் கொலை : ஐ.பி,ரா ஒப்புதல்.

Source: Tamil News Agency of India

மதுரை, ஜூலை - 2

இலங்கைத் தமிழர் தொடர்பான ராஜிவ் காந்தியின் செயல் கொள்கை குழப்பமானது, ராஜிவ் கொடூரமாக கொல்லப்பட இதுவே காரணம் என்றும் இந்திய அரசின் மூத்த உளவுத்துறை அதிகாரி பி.ராமன் கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறை, உளவுத்துறை வட்டாரங்களில் மிகவும் மதிக்கப்படும் பி.ராமன் தேசியப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். 1961ல் இந்திய காவல் துறை சேவையில் சேர்ந்த பி.ராமன் 1962-லிருந்து 1967-வரை மத்திய பிரதேச பிரிவில் பணியாற்றினார். அதன் பின் இண்டலிஜென்ஸ் பீரோவின் வெளிநாட்டு உளவுப் பிரிவில் இணைந்தார். 1968 செப்டம்பரில் கேபினட் செயலகத்தில் Research & Analysis Wings (R&AW) துவங்கப்பட்டவுடன் அதில் இணைந்தார். ரா என்பது இந்தியாவின் அயலக உளவு அமைப்பாகும். 1988லிருந்து 1994 வரை ராவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். 1994ஆகஸ்ட் 31ந் தேதி இந்திய அரசின் கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலர் என்ற பதவியுடன் ஓய்வுபெற்றார்.

உளவு அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு 2000ல் உருவாக்கிய Special Task Force உறுப்பினர். ஜூலை 2000லிருந்து டிசம்பர் 2002 வரை இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக இருந்தார். புதுதில்லியிலிருந்து பதிப்பிக்கப்படும் Indian Defence Review ஆலோசனைக் குழுவின் கெளரவ உறுப்பினர். Intelligence: Past, Present & Future, a Terrorist as a Frontline Ally உள்பட பல நூல்களை எழுதியிருக்கிறார் ராமன். Mumbai 26/11, a day of infamy இவரது சமீபத்திய புத்தகம்.
இந்தியாப் பத்திரிக்கைகளிலும் சர்வதேச இதழ்களிலும் வியூகம், பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறார் ராமன். தற்போது சென்னையிலிருக்கும் Institute for Topical Studies-ன் இயக்குநராக இருந்து வருகிறார். தில்லியிலிருந்து இயங்கி வரும் South Asia Analysis Group, சென்னையிலிருந்து இயங்கிவரும் Chennai Centre for China Studies ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இப்பெருமைமிகு அனுபவசாலியான பி.ராமன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள The Kaoboys of R&AW என்ற ஆங்கில நூலின் அற்புதமான மதுரை பிரஸ் தமிழுக்கன ”நிழல் வீரர்கள்” என்ற நூலில் இப்பெரும் உண்மையை - உணர்வுபூர்வமாக விவரித்துள்ளார்.

இனி ராமன் எழுத்தில்...........

சீனா, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ராவில் தொடர்ந்து புதுமையான மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதை ராஜீவ்தான் செயல்படுத்தினார். இந்தக் கொள்கைகள் இந்திராவால் வகுக்கப்பட்டவை. அந்தக் கொள்கைகளைப் பின்பற்றிய ராஜிவ், ராவுக்கு வேகத்தையும், புதிய ஊக்கத்தையும் வழங்கினார். அவர் பிரதமராவதற்கு முன் ராவிடம் இல்லாத சக்தி இது. 1977 முதல் 80 வரை வலுவிழந்திருந்த ராவுக்குத் தாக்கும் சக்தி மீண்டும் கிடைத்தது. 1977க்கு முன்னர் இருந்ததைப் போல மீண்டும் உளவுத் தகவல்களைக் கேகரித்தது. ஆராய்வதோடு மட்டும் ரா நின்றுவிடவில்லை. பக்கத்து நாடுகளில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் வழக்கமான ராஜதந்திர முறைகள் பயனளிக்காதபோது, ரகசியமான வழிகளில் அவற்றைக் காப்பாற்றும் அமைப்பாக ரா உருவானது. ரகசிய நடவடிக்கைத் திறன் ராஜிவின் கீழ் வெகுவாக அதிகரித்தாலும், உளவுத் தகவல்களைச் சேகரித்து ஆராயும் திறன் தேசத்தின் தேவைக்கேற்பவும் காலத்தின் தேவைக்கு ஏற்பவும் அமையவில்லை.

இலங்கை குறித்த ராஜீவின் செயல்கொள்கை (Operational Policy) புதுமையானதாக இல்லை. மாறாக், குழப்பமானதாகவும் 1991-மே மாதம் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்குக் காரணமாகவுமே அமைந்தது. இதை ராவின் கொள்கை என்று சொல்லாமல் அவருடைய செயல்கொள்கை எனச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இலங்கை பற்றிய இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்ட திருப்பங்களுக்கும் மாற்றங்களுக்கும் இந்திய அரசின் எந்த ஒரு அமைப்யையும் முழுக்காரணமாகக் கூற முடியாது. அவருக்கு இருந்த குழப்பங்கள், ராவின் செயல்முறைக் கொள்கைகளையும் பாதித்தது. ராஜீவாலும் அவருக்குப் பின் வந்த வி.பி.சிங்காலும் இலங்கை தொடர்பான நமது கொள்கை தவறாகக் கையாளப்பட்டது பற்றி இதுவரை விரிவாக ஆராயாப்படவில்லை. ஒரு சிக்கலான விவகாரத்தை எப்படிக் கையாளக் கூடாது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்திரா வகுத்த கொள்கையில் ராஜீவ் முழுத் திருப்தியடைந்தவராகவே இருந்தார் என்பதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். எனினும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முன்னின்று செயல்படுவது என்னும் இந்திராவின் கொள்கையில் ராஜீவ் தெளிவில்லாமலேயே இருந்தார். முதலில் இந்த ஆதரவு நடவடிக்கை ரகசியமாகவே இருந்தது. இந்திரா பிரதமரான பிறகு புது தில்லியைச் சேர்ந்த ஒரு பிரபல வார இதழ் அவரது மறைமுக ஆதரவு நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டது. அதில் சில சரியானவை. பல தவறானவை. இந்த ஆதரவு நடவடிக்கைக்கு இரண்டு தெளிவான இலக்குகளை இந்திரா நிர்ணயித்திருந்தார். முதலில் இந்தியப் பாதுகாப்பு பற்றிய அக்கறைக்கு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை எட்ட இந்தியாவின் தலையீட்டுக்கு அவசியமில்லாத வகையில் இலங்கைத் தமிழர்களே பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுகாணத் தேவையான வல்லமையையும் திறனையும் வழங்குவது.

இந்திராவின் இந்தக் கொள்கைகளைத் தொடர முதலில் தயக்கம் காட்டிய ராஜீவ், திடிரென அவற்றில் ஆர்வம்காட்டினார். இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. இந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் போது, சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் குழப்பத்துக்கும் அழிவுக்குமே வழிவகுத்தன. தன் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இந்திரா ராவையும் ராவின் மும்மூர்த்திகளான கவ், சச்சேனா, மறந்த ஜி.பார்த்தசாரதி ஆகியோரையும் முழுவதுமாகச் சார்ந்திருந்தார். இந்திராவின் வழிமுறையைச் செயல்படுத்தும் போது அவர்கள் சில எச்சரிக்கைகளை வழங்குவார்கள். இந்திரா அவற்றை மதித்துக் கேட்டுக்கொள்வார்.

ராஜீவ் தனது ஆதீத ஆர்வம் காரணமாகத் தனது கொள்கையைச் செயல்படுத்த ரா, ஐபி, தமிழகக் காவல் துறை, ராணுவ உளவுப் பிரிவின் டைரக்டரேட் ஜெனரல் (டி.ஜி.எம்.ஐ), ராணுவம், வெளியுறவு அமைச்சகம் எனப் பல்வேறு அமைப்புகளையும் நபர்களையும் இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினார். அந்த அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு ஏதும் இல்லை. அவற்றின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும், ராஜீவின் சிந்தனைகளிலும் நடவடிக்கைகளிலும் இருந்த பிரச்சனைகள் பற்றி எச்சரிப்பதற்குப் பதிலாக அவரை விவேகமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவைக்க ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர்.

இந்திய அரசின் ஆசியுடன் இலங்கைத் தமிழ் அமைப்புகள் பெருகின. அவை இலங்கைத் தமிழர்களின் ஒருமித்த நலனில் அக்கறை கொள்ளாமல், குறுகிய பார்வையுடன் செயல்பட்டுவந்தன. இந்திய அரசிடம் இது குறித்து ஒருங்கிணைப்பு இல்லாததை அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன. சிங்களர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படவும் இந்தியாவுக்கு உள்ளே இருந்தும் இந்தியாவுக்கு வெளியே இருந்தும் தங்களை வலிமையாக்கிக்கொள்ள உதவிகளைப் பெற்றன.

ஐபிக்கும் டிஜிஎம்ஐக்கும் தெரியாமல் ராவிடமிருந்து ராவுக்கும் டிஜிஎம்ஐக்கும் தெரியாமல் ஐபியிடமிருந்தும் ஐபிக்கும் ராவுக்கும் தெரியாமல் டிஜிஎம்ஐயிடமும் அவை பணம் பெற்றன. உளவு அமைப்புகளுக்குத் தெரியாமல் வெளியுறவு அமைச்சகத்தின் ரகசிய நிதியிலிருந்து பணம் பெற்றன. இந்திய அரசுக்குத் தெரியாமல் தமிழக அரசிடமிருந்தும் பணம் வாங்கின. இந்திய உளவு அமைப்புகளின் உதவியைப் பெற்றுவந்தன. அதே சமயம் ஐஎஸ்ஐ ஆசியிடன் ஹர்கத் உல் முஜாகுதீன்கள், ஹிஸ்புல்லாக்கள், யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ), ஜார்ஜ் ஹபாஷின் பாப்புலர் பிரண்ட் ஃபார் தலிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன் (பிஎஃப்எல்பி) போன்ற பிற வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு உதவிகளைக் கேட்டுப் பெற்றனர். இதில் அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை.

1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மறுத்துவிட்டார். இதனால் இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குள் புகுந்தது. பிரபாகரனை ஒப்பந்தத்தை ஏற்கவைக்க உதவுவதாக யாசர் அராஃபத் ராஜீவுக்குச் செய்தி அனுப்பினார். இதை நாகரிகமாக மறுத்த ராஜிவ், பிரபாகரனிடம் அராஃபத்துக்கு எப்படிச் செல்வாக்கு ஏற்பட்டது என்பதை அறியும்படி உளவு அமைப்புகளிடம் கூறினார். தில்லியில் பிஎல்ஓவிற்குத் தூதரகம் என்னும் பெயரில் ஒரு அலுவலகம் இருந்தது. இந்திய அரசுக்குத் தெரியாமல் அதை வைத்துப் பிஎல்ஓவுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதும் மூத்த பிஎல்ஓ பிரதிநிதி ரசசியமாகச் சென்னைக்கு வந்து புலிகளின் தலைவர்களைச் சந்தித்து வந்ததும் தெரியவந்தன.

பல்வேறு அமைப்புகள் மட்டுமின்றிப் பல அரசுத் துறைகளும் இலங்கத் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புகொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனபது தெரியாமல், ராஜீவின் சார்பாகப் பலர் பிரபாகரனுடனும் பிற தமிழ்த் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்திய அமைதிப்படையை அனுப்புவது, திணிக்கப்பட்ட அமைதி எனப் புலிகள் எதைக் கருதுகிறார்களோ, அதையே அவர்களை ஏற்கச்செய்வது போன்ற முடிவுகள், இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் உண்மை நிலையை அறியாமல் எடுக்கப்பட்டவை. ஒரு அந்நிய நாட்டில் கிளர்ச்சியை அடக்குவதில் உள்ள சிரமங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தியாவுக்குள் பல இடங்களில் கிளர்ச்சிகளை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றுள்ளதால் இலங்கையின் தமிழர் பகுதிகளிலும் எந்தச் சிக்கலும் இருக்காது என நினைத்து. அதீதத் தன்னம்பிக்கை கொண்ட தரைப்படையின் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி, ஒரு மாதத்தில் இந்திய அமைதிப் படை வெற்றியடைந்து விடும் என ராஜீவிடம் கூறினாராம். அப்படி நடக்காமல் அமைதிப்படை புதைகுழியில் சிக்கியவுடன் சுந்தர்ஜீ உளவு அமைப்புகளைச் குற்றம் சாட்டினார். புலிகளின் பலம், திறன், நோக்கம் குறித்து தங்களை எச்சரிக்கவில்லை என ரா மீது பழிசுமத்தினார். 1984இல் அவர் லெப்டினட் ஜெனரலாக இருந்த போது அம்ரித்ஸ்ரில் பொற்கோவிலை ஆக்கிரமித்திருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார். அப்போதும் அவர் இவ்வாறே நடந்து கொண்டார். எதிர்பார்த்ததைவிட அந்த நடவடிக்கையும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. பயங்கரவாதிகள் மூர்க்கமாக எதிர்த்து நின்றனர், கோவிலுக்குள் இருந்த பயங்கரவாதிகளின் திறன் பற்றிப் போதுமான அளவில் தகவல்களை வழங்கவில்லை என அவர் உளவு அமைப்புகளைக் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் இருக்கும் எந்த அமைப்புக்கும் எந்தத் துறைக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பல்வேறு அமைப்புகளும் துறைகளும் என்ன செய்திருக்கின்றன எனபது முழுமையாகத் தெரியாது. ஆனால் இந்தியாவுக்கு வெளியில் இருந்த ஒரு அமைப்பு இதுகுறித்து முழுமையாக அறிந்துவைத்திருந்தது. சிஐஏதான் அந்த அமைப்பு. ராவும் ஐபியும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய அனைத்து அறிக்கைகளின் பிரதியையும் பிரெஞ்சு உளவு அமைப்புகளிடமிருந்து சிஐஏ பெற்றது. பிரதமரின் முதன்மைச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ‘சோர்ஸ்’ மூலமாகப் பிரெஞ்சு அமைப்புக்கு இந்த அறிக்கைகள் கிடைத்தன. சென்னையில் இருக்கும் ராவின் அலுவலகத்தில் இருந்து அதன் தலைவர் மூலமாகவும் பல முக்கியமான தகவல்களையும் ஆவணங்களையும் பிரெஞ்சு உளவு நிறுவனம் பெற்று வந்தது. சென்னையிலிருக்கும் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் இருந்து செயல்பட்ட ஒரு சிஐஏ அதிகாரிக்கு அவர் சோர்ஸாகச் செயல்பட்டார் எனக் கூறப்படுவதுண்டு. அந்த சிஐஏ அதிகாரியின் நடவடிக்கைகளையும் சந்திப்புகளையும் ஐபியின் கண்காணிப்புப் பிரிவு வீடியோவில் பதிவுசெய்வது வழக்கம். அதில் ஒரு பதிவில் சென்னை அலுவலகத்தின் தலைவரும் அந்த சிஐஏ அதிகாரியும் மெரீனாக் கடற்கரையில் ஜாகிங் செய்வது பதிவாகியிருந்தது. இதுபற்றி விசாரித்தபோது அந்த அதிகாரி சிஐஏவுக்காகப் பணியாற்றுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. என்பதை மறைத்து, தில்லிக்கு ரா தலைவரைச் சந்திக்கும்படி சொல்லப்பட்டது. அவர் தில்லிக்கு வந்தவுடன் கைதுசெய்யப்பட்டு ரா, ஐபி அதிகாரிகளின் கூட்டு உளவு எதிர்ப்புக்குழுவினரால் விசாரிக்கப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் தில்லி திகார் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டார், ராஜீவ் அவரைச் சிறையில் அடைப்பதை விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. எனினும் ராவின் அப்போதைய (1986-87) தலைவராக இருந்த ஜோஷி அதை ஏற்கவில்லை. அவரைச் சிறைக்கு அனுப்புவது வெளிநாட்டு உளவு அமைப்புகளின் சலுகைகளுக்கு இரையாகமால் இருக்க, பிற அதிகாரிகளுக்கு அழுத்தமான எச்சரிக்கையாக அமையும் என வலியுறுத்தினார்.

இந்திரா பிரதமராக இருந்தபோது இலங்கை தொடபான விஷயங்களைக் கவனித்து வந்த ராவின் ஜ.பி.எஸ். அதிகாரி ஒருவர், கவ்வைத் தொடர்புகொண்டு, இந்தியாவின் போலீஸ் பதக்கத்துக்குத் தன் பெயரை ரா பரிந்துரைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். கவ் வேண்டுகோள் விடுத்ததால் ராவும் அவ்வாறே செய்தது, இதில் நடைமுறை என்னவென்றால், ரா தனது பரிந்துறையை உள்துறைக்கு அனுப்பும். அவர்கள் உள்துறையில் இருக்கும் அந்த அதிகாரியைப் பற்றிய பெர்சனல் ஃபைலுடன் அதைப் பிரதமருக்கு அனுப்புவார்கள். அந்த அதிகாரி ஐ.பி.எஸ்சில் இணந்தது முதல் அவரது வேலை, நடத்தை பற்றிய குறிப்புகள் அந்தக் கோப்பில் இருக்கும். உள்துறை இந்த விவகாரத்தில் வழக்கம் போல் செய்தது.

சில நாட்கள் கழித்து அந்தக் கோப்பு, இந்திராவிடமிருந்து கீழ்க் காணும் குறிப்புடன் திரும்பி வந்தது.; ”ஃபைலில் எக்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையைப் பார்க்க. இதுபோன்ற பின்னணி கொண்ட நபரைப் போலீஸ் பதக்கத்துக்குப் பரிந்துரைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” அந்த ஃபைலில் 20 வருடங்களுக்கு முன்னர் மாநிலச் செயலரால், இந்திய உளவுத்துறைச் செயலருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை ஒன்று இருந்தது.

அந்த அறிக்கையில் தலைமைச் செயலர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் : “ அந்த அதிகாரி, பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோரிடமிருந்து வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார். திருமணத்துக்குச் சற்று முன்பு இந்த அதிகாரியின் பெற்றோர் மேலும் பணம் கேட்டனர். பெண்ணின் பெற்றோர் அதைக் கொடுக்க இயலாது என்று தெரிவித்ததால், இந்த அதிகாரி அந்தப் பெண்ணுடன் நடந்த திருமண நிச்சயத்தை ரத்து செய்தார். முன்பு வாங்கிய பணத்தையும் திரும்பத்தர மறுத்துவிட்டார். அவரும் அவருடைய பெற்றோரும் பணம் பெற்றதையே மறுத்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோர் தலைமைச் செயலரிடம் இது பற்றி புகார் செய்தனர். அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில் இந்த அதிகாரிக்கு எதிராக வலுவான ஆதாரம் ஏதும் சிக்கவில்லை. தலைமைச் செயலர் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணையும் அவரது பெற்றோரையும் சந்தித்துப் பேசினார். இது பற்றி அறிக்கையை உளவுத்துறைச் செயலருக்கு அனுப்பும் போது, இந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றாலும் அந்தப் பெண், அவளுடைய பெற்றோரின் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை எனக் குறிப்பிட்டார். இந்த அதிகாரிதான் பின்னர் சிஐஏவால் பணியமர்த்தப்பட்டார். அவரது குணத்தில் இருந்த அடிப்படைக் கோளாறை ரா கவனிக்கவில்லை. ஆனால் சிஐஏ அதைக் கவனித்து, அவரைக் குறிவைத்து பிடித்தது.

இந்த அதிகாரியால் சில சேதங்கள் ஏற்பட்ட பின்னரே இவர் மூலம் சிஐஏ ராவுக்குள் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டது. ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராவின் தலைமையகத்தில் இணைந்த மற்றொரு அதிகாரி மூத்த அதிகாரிகளுடன் இசைவாகப் பழகி, அந்த அமைப்பின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்டார் அயலகப் பொருளாதார உதவிகளைக் கையாளும் அமெரிக்க அரசுத் துறைப் பிரிவின் ஆவணங்களைத் தன்னால் பெற முடியும் என அந்த அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க அரசின் ஊழியராக இருந்த அவரது சகோதரி அந்தப் பிரிவில் பணியாற்றுவதாக அவர் கூறினார். அந்தச் சகோதரியின் மூலமாகத் தெற்கு ஆசியா குறித்த பல ரகசிய ஆவணங்களை அவர் பெற்றுத்தந்தார்.

அமெரிக்க அரசின் ஒரு துறையில் வெற்றிகரமாக ஊடுருவியது குறித்து ரா பெருமைப்பட்டுக்கொண்டது. சில வருடங்களுக்குப் பின்னர், 2004இல் உண்மையில் அவர் ராவில் இருந்த சிஐஏவின் கைக்கூலி என்பது தெரியவந்தது. ராவின் சென்னை அலுவலகத் தலைமையை விட அவர் சிஐஏவுக்கு அதிகம் வேண்டப்பட்டவர். அவர்மீது சந்தேகப் பார்வை விழுவது தெரிந்ததும் சிஐஏ அவரை இந்தியாவை விட்டு வெளியேறச் செய்து, அமெரிக்காவில் அடைக்கலம் வழங்கியது. அவர்கள் இந்தியாவில் சிக்காமல் தப்ப அவருக்கும் அவரது மனைவிக்கும் வேறு பெயர்களில் அமெரிக்கப் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டதாகத் தகவல். சிஐஏவின் இந்த அசாதாரணமான நடவடிக்கை அவர், சிஐஏவின் கைக்கூலி என்பதை ஒப்புக்கொள்வதுபோல அமைந்தது. சிஐஏவுக்கு அவர் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பதையும் சுட்டிக்காட்டியது. இந்திய உளவு எதிர்ப்பு வல்லுநர்களால் அவர் விசாரிக்கப்படுவதை எப்படியாவது தடுக்க அவர்கள் விரும்பினர். இந்திய அரசுடன் இதனால் பிரச்சனை ஏற்படலாம் எனபது தெரிந்தும் அவர் அமெரிக்காவுக்குத் தப்பி, அங்கே குடியேற சிஐஏ உதவியாது. அவரது பெயர் மேஜர் ரபீந்தர் சிங்.

ராஜீவ் பிரதமர் பதவியிலிருந்து போன பிறகு ரா தலைமையகத்தில் மற்றொரு கவலைக்குரிய சம்பவம் நடந்தது. ராவின் கான்ஃபரன்ஸ் ஹாலில் பாதுக்கப்புத் தொடர்பாகக் காவல் துறை, டைரக்டர் ஜெனரல்கள், மத்தியக் காவல் பிரிவின் தலைவர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கே.பி.எஸ்.கில்லும் கலந்துகொண்டார். அவர் அங்கே வருவதற்கு முன்னர் கட்டுப்பட்டு அறையின் ஒரு மூலையில் போலி வெடிகுண்டு (improvised explosive device - IED) கண்டுபிடிக்கப்பட்டது. அது முறையாகப் பொருத்தப்பட்டிருந்தாலும் அதில் வெடிமருந்து ஏதும் இல்லை. அதை வைத்தவன் குண்டுவெடிக்க வேண்டும் எனத் திட்டமிடவில்லை. எனினும் கட்டுப்பாட்டு அறையைத் தன்னால் அடைய முடியும் என்பதைக் காட்ட விரும்பினான். அவன் யார்? உள்ளே உள்ள நபரா அல்லது வெளியாளா? அவனது அடையாளம் என்ன? அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

1996இல் தங்கள் அமைப்பில் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் சிஐஏ ஊடுருவியிருப்பதாக ஐபி தெரிவித்தது. பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியான தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் (என்.எஸ்.சி.எஸ்) 2006இல் சிஐஏவால் ஊடுருவப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ரா, ஐபியின் உளவு எதிர்ப்பு, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ள சீரியஸான குறைபாடுகளை இது சுட்டிக்காட்டியது. அரசின் துறைகளில் உட்புறப் பாதுகாப்பு அமைப்பை ஐபியும் ராவும் கண்காணித்து வந்தன. ஐபி உள்ளேயும் ரா வெளிநாடுகளிலும் இந்தப் பணியச் செய்துவந்தன. ஆனால் ஐபி, ராவின் உட்புறப் பாதுகாப்பையும் உளவு எதிர்ப்பு அமைப்புகளையும் சுதந்திரமாகக் கண்காணிக்கப் போவது யார்? அப்போதுதான் தங்களது அலுவலகம் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் உடுருவப்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதுவரை இந்தப் பிரச்சனயைக் கவனிக்காவிட்டால், அதைக் கவனிக்க இதுதான் சரியான நேரம்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire