இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!


திருமலையின் சிங்கமே!

தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!

ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!


புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.

ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.

அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?

சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?

ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.

அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.

புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?

தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?

நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!

பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.

சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!
ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?

இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?

மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?

அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?

அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.

தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.

அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?

ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?

மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?

அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!

அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.

ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.

மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.

ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.

ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!

ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!

அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?

எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?

தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?

சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.

திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது

அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!

தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!

அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.

நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.

நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!

அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.

அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?

மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?

-சேரமான்
நன்றி:பதிவு
Source: http://www.tamilkathir.com/news/2334/58//d,full_view.aspx

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire