Saturday, December 19, 2009

சிறிலங்க அதிபர் தேர்தல்: ஒரு ஜனநாயக ஏமாற்று!





தங்களை ஆளக் கூடிய அரசை அல்லது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குரிமை அளிக்கும் ஒரே காரணத்தை மட்டும் வைத்து ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்றோ, அதை ஒரு செயல்படும் ஜனநாயகம் (Functioning Democracy) என்றோ கூறுவது ஜனநாயகம் என்கின்ற உன்னதமான பொது அரசியல் நெறிக்கு எதிரானதாகவே இருக்கும்.

‘மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மானுட உரிமை, மாண்புகளின் பாற்பட்டு நின்று, மக்களின் நலனையும் நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நெறிசார் அரசியலை ஜனநாயகம்’ என்று உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை வைத்து மதிப்பீடு செய்தால், இன்றைய உலகில் தங்களை ஜனநாயக நாடு என்றழைத்துக் கொள்ளும் பல நாடுகள் அத்தகுதியை பெறாதிருப்பதை அல்லது இழந்திருப்பதை அறியலாம்.இந்த அடிப்படையில் ஒரு ‘ஜனநாயக நாடு’ என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ஒரு நாடு என்று சிறிலங்காவை சந்தேகமின்றி சுட்டிக்காட்டலாம்.

1) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் யாவரும் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக தமிழர்களின் பிரதிநிதிகள். ஆனால் இன்றுவரை அந்த அரசியல் படுகொலைகள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை, எவரும் தண்டிக்கப்படவுமில்லை.

2) இந்த நாடு சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் ஆகியும், அதற்கு ஒரு நாடாளுமன்றம் இருந்தும், அது விடுதலை பெறுவதற்கு முன்பிருந்து இன்றுவரை நிலவும் தனது நாட்டின் ஒரு அங்கமாக வாழ்ந்துவரும் பூர்வீகக் குடிகளான தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீ்ர்வு காண அதனால் இயலவில்லை.

3) தனது அரசமைப்புச் சட்டத்தில் தன்னை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசாக பிரகடணம் செய்துகொண்டு, அதே நேரத்தில் தன்னை ஒரு புத்த மத நாடு என்றும், புத்த மத சாசனத்தை காப்பாற்றி, வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறது.

4) சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், விரும்பிய மதத்தை கடைபிடிக்கும் சுதந்திரம் என்று எல்லாம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2004ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளை வேன்களால் 34 ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணடிக்கப்பட்டுள்ளனர். அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சி, 20க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தனது நாட்டு மக்களின் மீதே போர் தொடுத்து, அதன் காரணமாக சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்காமல், அதையே போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று ஆதாரத்துடன் எழுதிய ஒரு பத்திரிக்கையாளர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என்று கூறி, வழக்குத் தொடர்ந்து தண்டித்து, 20 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீ நடத்தும் போரும், உனது ஊழல் ஆட்சியும், கட்டவிழ்த்துள்ள அடக்குமுறையும் கொடுமையானது என்று நேரடியாக குற்றம் சாற்றி எழுதிய ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பட்டப்பகலில் நாட்டின் தலைநகரிலேயே படுகொலை செய்யப்படுகிறார்.

5) அரை நூற்றாண்டுக் காலம் எந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லையோ அதற்கு தீர்வு காண, நாட்டில் அமைதி காண எந்த இயக்கத்தோடு பேசியதோ அந்த அரசியல் – போராட்ட இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சித்தரித்து அவர்களை அழிக்கிறோம் என்று கூறி, தனது நாட்டு மக்களின் மீதே முப்படைகளையும் ஏவி, பாஸ்பரஸ் குண்டுகள், வெப்பக் குண்டுகள் என்று பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைக் வீசித் தாக்கியழித்து, அவர்களை அவர்கள் வாழ்ந்த மண்ணிலேயே அனாதைகளாக்கிய, அதற்குப் பின்னும் பிரச்சனைக்குத் தீர்வு காண வழியின்றித் தத்தளிக்கும் ஒரு நாடு.

6) “இராணுவ நடவடிக்கையின் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வழி பிறந்துள்ளது” என்று கூறி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் மக்களை அழித்து, மற்றவர்களை அனாதையாக்கிய பின்னர், எந்த இராணுவ ஆயுதத்தைக் கொண்டு இன அழிப்பைச் செய்ததோ, அந்தப் படையின் தளபதியை இன்று அரசியல் எதிரியாக சம்பாதித்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கும் ஒரு இனவாத அரசியல் புதைகுழியில் சிக்கியப் பின்னர், இன்று அந்த புதைச் சேற்றிலிருந்து ‘வெற்றிகரமாக’ வெளியேறி மீண்டும் பதவியைப் பிடிக்க, இனப் படுகொலைக்கு ஆளான மக்களின் ஆதரவைப் பெற போராடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல்வாதியை அரச தலைவராகப் பெற்றிருக்கும் இந்த நாட்டை உலக நாடுகளும், மக்கள் குடியரசு என்றும், மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் தெற்காசிய வல்லான்மைகளும் சிறிலங்காவை ஜனநாயக நாடு என்று கூறுகின்றன, அதற்கு உதவுகின்றன, அதன் தேர்தலில் மறைமுகப் பங்காற்றுகின்றன.

இந்த நாட்டைத்தான் ஒரு ‘செயல்படும் ஜனநாயகம்’ – அது பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தும் – உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன!

ஆள்வதும் இனவெறி, அரசியலும் இனவெறி!

இப்படிப்பட்ட நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்களின் அரசியல் அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் தலைவர்கள் பேசுகின்றனர்.

தேர்தல் அளிக்கும் ‘ஜனநாயக வாய்ப்பை’ இழந்துவிடும் தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்று இனப் படுகொலைக்கு ஆளாகி, தங்கள் உடன் சொந்தங்களை இழந்து திக்கற்று நிற்கும் மக்களின் சில தலைவர்களும் போதிக்கின்றனர்! யார் இவர்களின் ஜனநாயக மூளையை இயக்குகிறார்கள் என்பதும் இரகசியமல்ல.

ஜனநாயகம் என்பது தங்களின் வாழ்வுரிமை அனைத்தும் கண்ணியமான வழிகளில் உறுதிசெய்யப்பட்ட ஒரு அரசியல் அமைப்பில் வாழும் மக்களுக்கு உரியதே தவிர, அது அரச பயங்கரவாதத்தால் அழுத்தப்பட்டு, செத்துப் பிழைக்கும் வாழ்வை கால் நூற்றாண்டுக் காலத்திற்கும் அதிகமாக அனுபவித்துவரும் ஒரு இனத்திற்கு உரியதல்ல.

தங்களின் தாயகம் அங்கீகரிக்கப்படவில்லை, மொழிக்கு சம உரிமையில்லை, சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன, வாழ்ந்த இடம் அரசு துணையுடன் கபளீகரம் செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து வாழ்ந்த இடத்தில் இருந்த சொந்தங்கள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாட்டை விட்டு படகுகளில் தப்பி, உலகமெங்கிலும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த மக்களுக்கா தேர்தல்?

இதுநாள்வரை அதிபர் தேர்தல்களிலும், அந்நாட்டு நாடாளுமன்ற அவைகளுக்கும் நடந்த தேர்தலில் வாக்களித்தும், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தும் தமிழர்கள் கண்டதென்ன? தேர்தல் ஜனநாயகத்தில் வாழ்வுரிமையும், அரசியல் உரிமைகளும் சாத்தியப்படும் என்று உணர்ந்திருந்தால் தந்தை செல்வா வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியிருப்பாரா?

தமிழர்களை அவர்களின் அனுபவமும், வரலாறும் வழி நடத்த அரசியல் தலைவர்கள் வழிவகுக்க வேண்டும். இல்லாத ஜனநாயகத்தின் பேரால் அவர்கள் மீதான அடிமைத்தளையை இறுக்க உதவக் கூடாது.

தமிழர்கள் வாக்கு ஏன் தேவை?

இரண்டு காரணங்களுக்காக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு தமிழர்களின் வாக்கும் ஆதரவும் தேவைப்படுகிறது.

1) இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பதன் மூலம் இப்போதுள்ள சிறிலங்க அரசமைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது உறுதியாகும். தமிழர்கள் தேர்தலில் பங்கேற்றுள்ளார்கள், எனவே ‘பிரிவினை’யை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று கூறுவதற்கும், சிறிலங்காவின் இறையாண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் கூறுவதற்கு வழிவகுக்கும்.

2) இத்தேர்தலில் தமிழர்கள் பங்கேற்று, தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் எவராயினும், அவர் தமிழ் மக்களையும் உள்ளடக்கிய சிறிலங்க அரசின் தலைவராக அங்கீகாரம் பெறுவார். அதன் மூலம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வை உருவாக்கி அதனை – இந்தியா,சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகளின் ஆதரவுடன் – தமிழர்களின் மீது திணித்துவிடலாம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவரையும் தேசப் பாதுகாப்பின் பேரிலும், பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு்ம் சிறையில் அடைத்துவிடலாம்.

இவ்விரு காரணங்களினால்தான், தமிழர் தேசியக் கூட்டணியை வளைத்துப் போட இரு சிங்கள அரசியல் தலைமைகளும் தலைகீழாக நின்று முயற்சிக்கின்றன. தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்று கூறி எதை முன்மொழிந்தாலும் அதற்கு தமிழர் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருந்தால்தான் அது சர்வதேச அளவில் செல்லுபடியாகும் என்பது இந்தியாவிற்குத் தெரியும், அதனால்தான் த.தே.கூ. தலைவர்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகம் செய்கிறது.

ஈழத் தமிழர்கள் இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, சிறிலங்க அதிபர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். எந்த அடிப்படையைக் கூறி புறக்கணிப்பது என்ற கேள்வி எழுமானால், தங்களின் இறையாண்மையை நிலைநிறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தமிழர்களிடையே ஐ.நா. முன்னின்று பொது வாக்கெடுப்பு நடத்தட்டும். அதில் பங்கேற்று, தாங்கள் சிறிலங்காவுடன் இணைந்து வாழ விரும்புகிறோமா அல்லது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தனியே பிரிந்துசென்று தமிழீழ தனியரசாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோமா என்பதை சர்வதேசம் தீர்மானிக்கட்டும் என்று கூற வேண்டும்.

தமிழர்கள் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்தாலும், தங்களின் அரசியல் விடுதலையை உறுதி செய்யும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது வாக்களித்து ஒருமித்த எண்ணத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதனை வீழ்த்தும் விதமாக, சிறிலங்க அதிபர் தேர்தலில் பங்கேற்பது தமிழரின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்குப் புதைகுழியாகும் என்பதை உணர வேண்டும்.


No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...