Saturday, December 12, 2009

ஈழத்தமிழினம்:அரசியல்க் கட்சிகளின் விரிவாக்கமும் அந்தரங்க இராணுவக் களையெடுப்பும்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவின் அரசியல் முன்னணிக் கட்சிகள் யாவும் தழிழீழத்தில் முற்றுமுழுதாகச் செயற்பாடிழந்து, மக்கள் சிந்தனையினின்றும் அகற்றப்பட்டு, அவற்றின் பெயரையே மக்கள் மனதில் மறைந்து போகும் அளவிற்கு முடக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த ஆறுமாத காலத்திற்குள் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து, அவர்களின் படுகொலையால் ஓடிய இரத்தவெள்ளம் காய்வதற்கு முன்பாகவே அந்த இலட்சக்கணக்கான தமிழர்களின் சவக்குழியின் மேல் நின்றுகொண்டு அரசியல் கட்சிகளின் விரிவாக்கம் வெகு வெகமாகவும் கோலாகலமாகவும் தமிழீழம் எங்கும் தாரை, தப்பட்டைகள் முழங்க முன்னெடுக்கப்படும் ஓர் அநாகரீகமான செயற்பாடு களைகட்ட ஆரம்பித்துள்ளது.

அதற்கு முட்டுக்கொடுக்கவும் - முனைப்பெடுக்கவும், காட்டிக்கொடுப்பதையும் - கூட்டிக்கொடுப்பதையும் கைவந்த கலையாகக் கொண்ட கயவர் கூட்டம் தாரை, தப்பட்டை, தாள வாத்தியங்களுடன் தயார் நிலைக்கு வந்துவிட்டன.

ஆனாலும் ஈழத்தமிழினம் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் பறிகொடுத்து, ஊண்-உறக்கமின்றி அநாதரவாக அலைந்து, சொந்த மண்ணிலேயே அரசியல் அகதிகளாக முட்கம்பி முகாம்களுக்கள் முடக்கப்பட்டதை முற்றாக மனதில் வடுக்களாகப் பதியவைத்துள்ளதை யாரும் அழித்துவிட முடியாது.

இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் “வீடுகொளுத்திய ராசாவும், கொள்ளி கொடுத்த மந்திரியும் போல்” இருபெரும் தமிழின அழிப்பின் ஜவாப்தாரிகளான மஹிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு எதிரும் புதிருமாகக் களமிறங்கி இருப்பதுவும், அதற்காக தங்கள் பக்கபலமாக உள்ள இலங்கையின் அரசியற் கட்சிகளின் காரியாலயங்களை தமிழீழத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்து தமிழ்மக்களின் வாக்கு வேட்டைக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதே வேளை யாருக்கும் தெரியாமல் இன்னுமொரு வேட்டை அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதுதான் இராணுவ வேட்டை. தற்போது களமிறங்கி இருக்கும் இருவருக்கும் ஆதரவானவர்கள் சரிக்குச் சரி இராணுவத்தில் இன்றிருந்த நிலையை முற்றுமுழுதாக மாற்றி அமைக்கும் உள்நோக்குடன், தனது ஜனாதிபதி பதவி எனும் ஆயுதபலத்துடன் மஹிந்த ராஜபக்சே அவசர அவசரமாக பல உயர் இராணுவ அதிகாரிகளைப் பதவிமாற்றம், இடமாற்றம், இளைப்பாறுதல், பதவி உயர்வு என்னும் பெயரில் வேறு நாடுகளுக்கு அனுப்புதல் என மஹிந்த மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் சரத் பொன்சேகாவுக்குச் சார்பானவர்கள் இராணுவத்தில் பெருமளவு குறைந்துவிட்டது.

அதேவேளை அவரது பாதுகாப்புப் பகுதியும் குறைக்கப்பட்டு, அவருக்குப் பின்னால் பல சதிவேலைகளும் நடந்துகொண்டிருக்கும் அதே வேளை, சரத் பொன்சேகாவுக்குச் சார்பான இராணுவத்தினர் பலர் சாதாரண தரத்தில் இருந்துகொண்டு உளவு வேலைகளில் ஈடுபட்டு மஹிந்தரின் செய்றபாடுகளை சரத் பொன்சேகாவுக்கு உளவுத்தகவல் பரிமாறிவரும் இராணுவத்திரை இரவோடு இரவாகக் களையெடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தக் களையெடுப்புக்களையும்கூட சாதாரண அப்பாவித் தமிழ்மக்கள் மேல் போடும் பாரிய சதித்திட்டமும் தீட்டப்பட்டுக்கொண்டிருப்பதும், அதனை இராணுவத்தினரின் மனவிரக்தியினால் தற்கொலை என்று தகிடுதத்தம் செய்வதற்கும் ஒரு கூட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ? “அரசன் அண்டறுப்பான், தெய்வம் நிண்டறுக்கும் போங்கள்”

-அகத்தியன்

Source: http://www.paristamil.com/tamilnews/?p=50542

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...