Tuesday, January 8, 2013

திறப்புவிழா நடைபெறாத காட்டுப்பள்ளித் துறைமுகத்துக்கு முதல் கப்பல் இன்று வருகை: அரசு உத்தரவு செயல்படுத்தப்படுமா?


Source: www.dinamani.com

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எல் அன்ட் டி துறைமுகத்திற்கு எம்.வி. மார்ஸ்க் டால்டன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல் செவ்வாய்க்கிழமை வருகிறது. கப்பலின் பயணப் பட்டியலில் கப்பலின் வருகை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல் அன்ட் டி நிறுவனம் உறுதியளித்துள்ள மீனவர்களுக்கான வேலைவாய்ப்புகள், வாழ்வாதாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட நிலையில், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தை உடனடி செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில்  எல் அன்ட் டி நிறுவனம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையை அடுத்து மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியார் நிறுவனம் சார்பில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த 2008 ஆகஸ்டில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனையடுத்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 2012 பிப்ரவரியில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இறுதிகட்ட பூர்வாங்க வேலைகளில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் துறைமுகம், கப்பல் கட்டும் தளத்தின் திறப்பு விழா கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது.
இதற்கு காரணம் சுங்கத் துறை அலுவலர்கள் பற்றாக்குறையால் சுங்கத்துறை அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. மேலும் பிரதமர் மற்றும் முதல்வரின் வருகைக்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 23- ல்  சென்னை சுங்கத்துறை ஆணையரகம் துறைமுகம் செயல்படுவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டு அதற்கான அலுவலர்களும் உடனடியாக நியமிக்ககப்பட்டனர்.
திறப்பு விழா அறிவிப்பும், ரத்தும்: இதனையடுத்து டிசம்பர் 13-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா துறைமுகத்தைத் திறந்து வைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது.  மேலும் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
முறையான அறிவிப்போ அல்லது அழைப்பிதழோ எல் அன்ட் டி நிறுவனம் சார்பில் அளிக்கப்படாத நிலையில் திறப்புவிழாவும் நடைபெறவில்லை.  இது குறித்து துறைமுக நிர்வாகத் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாதது மட்டுமல்ல இது குறித்து செய்தியாளர்களிடம் பேசவே தயங்கினர்.
இந்நிலையில், சென்னைத் துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகம் திறக்கப்படுவதன் காரணம் குறித்து தகவல் ஏதும் இல்லை. ஆனால் எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்தை மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 10-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் தில்லியிலிருந்து திறந்து வைக்கிறார் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் காட்டுப்பள்ளி துறைமுகம் திறக்கப்படாததன் பின்னணி என்ன என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன் பின்னரும் எல் அன்ட் டி நிறுவன அதிகாரிகள் வழக்கம்போல் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை.
மர்ம முடிச்சை அவிழ்த்த முதல்வர்: இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எல் அன்ட் டி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும்தளம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டார். இதில் துறைமுகம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம், மீனவர்களுக்கு அளிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர் தெரிவித்துள்ள உத்தரவுகளை செயல்படுத்துவதில் எல் அன் டி நிறுவனம் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. காரணம் கப்பல் கட்டும் தளத்திலும், துறைமுகத்திலும் பல்வேறு நவீன கருவிகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை இயக்க திறன் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே தேவை. ஓரளவு அனுபவம் இல்லாத பணியாளர்களை சேர்க்கலாம். முதல்வர் அறிவித்துள்ளதுபடி பார்த்தால் ஒட்டுமொத்தமாக மீனவர்களை மட்டும் பணியில் சேர்க்கும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. முதல்வர் வெளியிட்ட அறிக்கை மூலம் தமிழக அரசின் நிலை குறித்து தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டும் தள திறப்பு விழா நடைபெறுமா? முதல்வர் அறிக்கையின் மூலம் எல் அன்ட் டி நிறுவனம் அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்தாதவரை துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தைத் திறக்க தமிழக அரசு ஒப்புக்கொள்ளாது என்பது தெளிவாகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் திறந்து வைப்பாரா  அல்லது மாநில அரசின் முடிவுக்கு மதிப்பளிப்பாரா என்பது விரைவில் தெரியும். மேலும் துறைமுகமே இன்னும் திறப்புவிழா காணாத நிலையில் மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பலான எம்.வி.மார்ஸ்க் டால்டன் செவ்வாய்க்கிழமை வருகை தந்து சுமார் 900 காலி சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துறைமுகம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னைத் துறைமுகத்தில் நிலவும் கன்டெய்னர் லாரி போக்குவரத்து ஓரளவு குறையும். மேலும் சென்னைத் துறைமுகம் தனது கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த காட்டுப்பள்ளி துறைமுகம் போட்டியாக அமையும். 
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இத்துறைமுகத்தை இயக்க எல் அன்ட் டி நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...