அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ. 11.80 உயர்வு


Source: www.dinamani.com
By - எம். மார்க் நெல்சன் -, சென்னை
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையை உருவாக்கியுள்ளது என போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும். குறிப்பாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சம் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 என்ற அளவுக்கு உயர்த்தியது. இதனால், ஏற்கெனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேலும் பாதிப்பை சந்தித்தன.
இந்த பாதிப்பை சமாளிப்பதற்காக தமிழகத்தில் இயங்கி வரும் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ரூ. 200 கோடி அளவுக்கு மானியத்தை தமிழக அரசு வழங்கியது.
இந்த மானியத்தைக் கொண்டு போக்குவரத்துக் கழகங்கள் ஓரளவுக்கு நிலைமையை சீர்செய்துவந்த நிலையில், இப்போது மீண்டும் லிட்டருக்கு ரூ. 11.80 அளவுக்கு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
அதாவது, பொதுமக்களுக்கான சில்லரை விற்பனை டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 60 பைசா வரை உயர்த்தியுள்ளது. ஆனால், டீசலை மொத்தமாக வாங்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே, மின் நிலையங்களுக்கான டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த டீசல் ரசீதிலேயே இந்த விலை உயர்வு பிரதிபலித்துள்ளது. இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ. 49.06 என்ற அளவில் இருந்தது இப்போது ரூ. 60.86 என பில் வந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சம் கூடுதல் செலவு: இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால், ஊழியர்களுக்கான சம்பளத் தேதி ஒவ்வொரு மாதமும் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப் படியும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியிருப்பது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
இப்போது டீசல் விலை உயர்வின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் லாப நஷ்டமின்றி இயங்க, பஸ் ஒன்றுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 30 முதல் ரூ. 32 வரை கிடைக்க வேண்டும். ஆனால், இப்போது ரூ. 22 என்ற அளவில்தான் கிடைக்கின்றது.
இதன்படி, பஸ் ஒன்றுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் கிலோ மீட்டர்கள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, கழகத்துக்கு நாள் ஒன்றுக்கான கூடுதல் செலவு ரூ. 14 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துக் கழகங்களுக்கும் இதே நிலைதான்.
இதே நிலை நீடித்தால் அனைத்து ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாத நிலையும் ஏற்படலாம். எனவே, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு மீண்டும் மானியம் வழங்க வேண்டும். இல்லையெனில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு எவ்வளவு?
இந்த டீசல் விலை உயர்வு காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 27 லட்சத்து 58 ஆயிரத்து 430 கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒரவர் கூறியது:
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 3,637 பஸ்களை இயக்க, நாள் ஒன்றுக்கு 2.32 லட்சம் லிட்டர் டீசல் தேவை. ஒரு பஸ்ûஸ 4.33 கி.மீ. இயக்க ஒரு லிட்டர் டீசல் தேவை.
இதன்படி கணக்கிட்டால், இப்போதைய டீசல் விலை உயர்வின்படி மாநகரப் போக்குவரத்துக்கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 27 லட்சத்து 58 ஆயிரத்து 430 அளவுக்கு கூடுதல் செலவாகும்.
மாதம் ரூ. 8.27 கோடியும், ஆண்டுக்கு ரூ. 100 கோடி அளவுக்கு கழகத்துக்கு கூடுதல் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire