வைர விழா காணும் பிரித்தானிய அரசி எலிசபெத்திற்கு ஓர் ஈழத் தமிழ் மன்னனின் கடிதம்..



விருந்திற்கு அழைப்பில்லாவிட்டாலும் அதோ அவன் புலிக்கொடியுடன் வீரமாக நிற்கிறான்..
பிரித்தானிய மகாராணியார் எலிசபெத் இரண்டு தன்னுடைய அறுபது ஆண்டுகால ஆட்சியின் வைரவிழாவை தற்போது வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்.
நியூசிலாந்தில் இருந்து பிரிட்டன் வரை கொமன்வெல்த் நாடுகளில் அவருடைய வைரவிழா விளக்குகள் ஒளியடித்து மின்னிக் கொண்டிருக்கின்றன..
கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு பிரித்தானிய மகாராணி விருந்து வைக்கிறார், அதில் கலந்து கொள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் இங்கிலாந்து வந்துள்ளார்.
கொமன் வெல்த் என்றால் என்ன..?
முன்னர் பிரிட்டனின் காலனித்துவ நாடுகளாக இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் பிரிட்டனுடன் உறவைப் பேண அமைத்துக் கொண்ட தாபனமே கொமன்வெல்த்.
பிரித்தானிய மகாராணியார் என்பவர் நாட்டின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உடையவர் அல்ல, பாராளுமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு இறுதியாக அவர் கையொப்பமிட அந்த சட்டங்கள் அமலுக்கு வரும்.
மகாராணி கையொப்பம் வைக்காவிட்டாலும் அந்த சட்டத்தை மறுபடியும் வாக்கெடுப்பிற்கு விட்டு அமல் செய்ய பாராளுமன்றத்தால் முடியும்.
இப்படி அதிகாரம் இல்லாத முடியாக இருந்தாலும் பாரம்பரிய சம்பிரதாயங்கள் நிலைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நிலைத்திருப்பது பிரித்தானிய முடியாகும்.
எனவேதான் இலங்கையில் நடைபெறும் தமிழர் பிரச்சனையில் யாதொரு முடிவையும் ஏற்படுத்தும் அதிகாரமுடையதாக பிரித்தானிய முடி இல்லை.
இந்த யதார்த்தங்களை மனதில் வைத்தே பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவை ஈழத் தமிழரோடு தொடர்புபடுத்த வேண்டும்.
பிரிட்டன் அரசியலில் அதிகாரமற்ற சின்னமாக பிரித்தானிய மகாராணி இருப்பதைப் போலவே ஈழத் தமிழரும் இலங்கைத் தீவை ஆண்ட கனவுகளுடன் அதிகாரமற்று இருக்கிறார்கள்.
மகாராணிக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் முடிக்குரிய மரியாதை இருக்கிறது… ஆனால் முடிக்குரிய ஆட்சியை நடாத்திய ஈழத் தமிழினம் பூசா முகாமில் கிடக்கிறது.
வந்தேறு குடிகளான தமிழருக்கு இங்கு என்ன உரிமையென ஒரு புத்த பிக்கு கடந்த வாரம் கேட்டான்.. அவன் மொட்டை போட்டுள்ள புத்த மதமே சிறீலங்காவின் வந்தேறு குடியென்பது தெரியாத பேதை அவன்.
1505ல் போத்துக்கேயர் இலங்கை வந்தபோது யாழ்ப்பாண இராட்சியம், வன்னி இராட்சியம் என்ற இரண்டு தனியான தமிழ் மன்னராட்சிகள் இலங்கை மண்ணில் நிலவியது உலகறிந்த உண்மை.
கொழும்பு பாணந்துறை வரை வரிவிதித்தவனும் தமிழனே என்பதும் உண்மை.
யாழ்ப்பாண சக்கரவர்த்தியிடம் அனுமதி பெற்றுத்தான் இபன் படுடா என்ற மொறோக்கோ யாத்திரிகன் கண்டிக்கு போனான்.
யாழ். சக்கரவர்த்தியின் ஓலை கண்டால் சிரந்தாழ்த்தி வழிவிட்டதே சிங்கள ஆட்சி..
போத்துக்கேயரின் பின்னர் ஒல்லாந்தர் வந்தபோதும், அதன் பின்னர் பிரித்தானியர் வந்தபோதும் மேலைத்தேயத்தவருக்கு எதிராக தெளிவாக போராடியவர்கள் தமிழ் மன்னர்களே.
இறுதியாக 1815 ல் கண்டி கைப்பற்றப்பட்டபோது பிரிட்டனுக்கு எதிராக தெளிவான போரை நடாத்தியவன் கண்ணுசாமி என்ற இயற் பெயருடைய சிறீவிக்கிரம ராஜசிங்கனே.
அவனை கோவாவில் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதும் பிரித்தானிய முடியே.
பிரித்தானிய காலனித்தவத்திற்கு அடிவருடிகளாகவும், காட்டிக் கொடுப்பவராகவும் தமிழ் மன்னர்கள் என்றும் இருந்ததில்லை.
பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த இனங்களில் இன்று ஒன்பது கோடி மக்கள் இருந்தும் உலகப்பந்தில் நாடில்லாமல் இருக்கும் ஒரேயொரு முதிய – பெரிய இனம் இந்தத் தமிழினம்தான்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
வாளொடு முன் தோன்றிய இனம் … என்று தமிழ் இனத்தை போற்றுகிறார்கள்.
கல்லும் மண்ணும் தோன்ற முன்னே தமிழ் எப்படி தோன்றும் முட்டாள்களே..! என்பான் தன்னை அறிஞனென நினைக்கும் பேதைத் தமிழன்.
கல் ஆயுதமாக தோன்றியபோது அதை வாளாக மாற்றி நாகரிகம் கண்டவன்.. மண்ணில் இருந்து மற்றைய உலோகங்கள் தோன்ற முன்னரே அவன் புகழ் தோன்றிவிட்டது.
அப்படிப்பட்ட தமிழன்…
தென்னாசியாவையே தன் ஏக கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோளமன்னர்கள் பூத்த இனமாக பெருமை கண்டவன்…
அவனை நட்பாக நடித்து, அநாதைகளாக மாற்றிச் சென்ற பெருமை பிரித்தானிய முடியின் பேரில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்களில் உள்ள தமிழனின் குடியுரிமையை பறிக்கும்படி சிங்களவனுடன் இரகசிய ஒப்பந்தம் செய்தது யார்..?
ஈழத் தமிழனை அதிகாரமற்றவனாக்கி செல்ல இரகசியமாக உடன்பட்டது யார்..?
பிரித்தானியாதான்..
நன்றி.. மகாராணியாரே.. நன்றி..!
இன்று உங்களுடைய வைரவிழாவில் சிங்கள மகிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார், போர்க் குற்றவாளியானாலும் அவருக்கு அழைப்புண்டு.
ஆண்ட தமிழன் எங்கே..?
உங்கள் விருந்துபசாரத்தில் வழங்கப்படும் தேநீரைப் பாருங்கள் தமிழன் தெரிவான்…
அவனுக்கு அழைப்பில்லை.. போகட்டும்..
அன்பான மகாராணியாரே..
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.. உங்கள் வீதியில் அகதியாக இருந்தாலும் புலிக்கொடியுடன் தமிழன் நிற்கிறான்.. ஏன் நிற்கிறான்..?
அவன் ஆண்ட பரம்பரை என்ற தன்மானத்துடன் நிற்கிறான்… அவன் வாழ்க..!
அருகில் சிங்கக் கொடியுடன் வேறு சிலர் நிற்கிறார்கள்… ஏனென்று கேட்டுப் பாருங்கள்.. அந்த வெட்கக் கேட்டை நாம் சொல்லவில்லை..
அரசன் ஆண்டியாவதும் ஆண்டி அரசனாவதும் உலக இயற்கை..
காலம் மாறும்…
அதுவரை தமிழ் மன்னர்களின் அரச முடி தன்மானம் குலையாமல் உங்களை வாழ்த்துகிறது..
இலங்கைத் தீவின் முதல் மன்னரான நாகர் இன தலைவன் முதல் கடைசி தமிழ் அரசன் சிறீவிக்கிரம ராஜசிங்கன் வரை அனைவரும் உங்களை வாழ்த்துகிறார்கள்…
மகிந்த ராஜபக்ஷவுடன் சமமாக இருக்க மானமுள்ள தமிழன் விரும்பமாட்டான்.. அதைவிட அவன் பக்கங்காம் பலசிற்கு வெளியே புலிக் கொடியுடன் நிற்பது நமக்கு பெருமையாக இருக்கிறது..
உங்கள் விருந்தில் தமிழன் இல்லாதிருப்பது நன்றே..
தீதும் நன்றும் பிறர்தர வாரா..!
வைரவிழா காணும் மகாராணியார் குடும்பம் வாழ்க..
அலைகள் தமிழன் அரச அறிவியல் பிரிவு 05.06.2012

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire