தவறவிடும் "ஆஃப் லைன்' வாழ்க்கை

Source:www.dinamani.com


தாராளமயமாக்கலின் விளைவாக வளரும் நாடுகளின் இளைஞர்களில் பெரும்பாலானோர், பணக்கார நாடுகளின் தொலைபேசி ஆபரேட்டர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். மூலை முடுக்கெல்லாம் ஸ்மார்ட்போன்கள் நுழைந்துவிட்டன. "ஆல்வேஸ் ஆன்' என்று சொல்லப்படும் மந்திரத்தின்படி உலகத்துடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்கும் வசதி எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. எழுதப்படிக்கவே தெரியாதவர்களுக்குக்கூட செல்போனில் குறுஞ்செய்திகளைப் படிக்க முடிகிறது. இவையெல்லாவற்றையும்தான் நாம் தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்று கூறுகிறோம்.
ஆனால், இந்தப் புரட்சி மனிதனை இன்னும் ஆக்கப்பூர்வமாக மாற்றியிருக்கிறதா என்றால், இல்லவே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். இந்தக் காலத்து இளைஞர்கள் புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் வேண்டுமானால் விட்டுவிடுவார்கள். ஆனால், பேஸ்புக்கையும் டுவிட்டரையும் விட்டு விட மாட்டார்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு. "கணவன் - மனைவி உறவு, குழந்தைகள், தூக்கம் போன்றவைகூட சமூக வலைத் தளங்களுக்குப் பிறகுதான்' என்ற நிலைமையை நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கிறார்களாம்.


இப்போது நாம் கையில் வைத்திருக்கும் செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டுமே பயன்படக் கூடியவையல்ல. அவை ஸ்மார்ட்போன்களாகிவிட்டன. ஒரு "கிளிக்' அல்லது ஒரு "டேப்' தொலைவில்தான் ஜிமெயிலும், பேஸ்புக்கும் கைக்குள் அடக்கமாக இருக்கின்றன. உலகத்தில் என்ன நடந்தாலும், அடுத்தநொடியில் தகவல்கள் அனைத்தும் நம் ஸ்மார்ட் போன்கள் வழியாகத் திணிக்கப்படுகின்றன.
உலகத்தில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாகிவிட்டனர் என்று கூறுவது பழங்கதை. அவற்றின்மீது அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் புதிய பரிணாம வளர்ச்சி. பேஸ்புக்கின் சுவர்களை ஏதோ உண்மையான சொத்தைப் போலக் கருதி, "இது என்னுடைய சுவர், அது அவனுடைய சுவர்' என உரிமை கொண்டாடுவதைக் கேட்க முடிகிறது. 
மார்க் ஸýக்கர்பெர்க் நினைத்தால் எல்லாச் சுவர்களையும் ஒரே நாளில் தரைமட்டமாக்கிவிட முடியும் என்பதைக்கூட இந்த "அன்பர்கள்' புரிந்து கொள்வதில்லை.
"12 பி பஸ்ஸýக்காக மந்தைவெளியில் காத்திருக்கிறேன்' என்பதில் தொடங்கி, "காலை உணவுக்கு பழைய சோறு சாப்பிடுகிறேன்' என்பதுவரைக்கும் உடனுக்குடன் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் சொல்லிவிட கைகள் பரபரக்கும்.
"எங்கள்வீட்டு மாட்டின் கறந்தபால் வெள்ளையாக இருக்கிறது' என்று யாராவது எழுதினால்கூட அதற்கு ஓடோடிச் சென்று "லைக்' போட்டாக வேண்டும். "வாவ் சூப்பர்' என்று கருத்துச் சொல்லியாக வேண்டும். நமது கருத்துக்கு யார் எதிர்க்கருத்து இடுகிறார்கள், நாம் யாருக்கு என்ன கருத்து எழுத வேண்டும் என மனதைக் குறுகுறுக்கச் செய்யும் பல உடனடிக் கடமைகள் இருக்கின்றன. இதற்காகவே பேஸ்புக்கையும், டுவிட்டரையும் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு. இதுதான் வலைத்தள அடிமைத்தனத்தின் அறிகுறி.
இன்னும் சிலருக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்காவிட்டால், பிற வேலைகளைக் கவனிக்க முடியாது. உருப்படியாக எந்த மின்னஞ்சலும் வராது என்று தெரிந்தாலும்கூட ஒரு வெற்று எதிர்பார்ப்பில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து வைத்திருப்பது இவர்களது பழக்கமாக மாறியிருக்கும்.
இந்தப் பழக்கங்கள் மிக மோசமானவை என்றோ, பிறருக்குத் தீங்கிழைப்பவை என்றோ கூறவரவில்லை. சம்பந்தப்பட்டவரின் செயல்பாட்டுத் திறனுக்கே பிரச்னையாக இருக்கிறது என்பதுதான் இப்போது நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை. வலைத்தளங்களும் அரட்டைப்பெட்டிகளும் இணையத்தில் உலவும் நேரத்தில் பெரும்பகுதியைத் தின்றுவிடுகின்றன. அதனால், என்ன நோக்கத்துக்காக இணையத்தில் நுழைந்தோமோ அதிலிருந்து விலகி சிந்தனையும் செயலும் திரிந்துவிடுகின்றன. இதுதான் முதலாவது பிரச்னை.
ஸ்மார்ட் போனையும் லேப்டாப்பையும் படுக்கைவரை கொண்டு செல்வது, சாப்பிடும் நேரம்தான் ஓய்வு நேரம் எனக் கருதி அந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளைச் செய்வது என நம்மை அறியாமலேயே பல கெடுதலான பழக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறோம்.
இதற்கு என்னதான் தீர்வு? தொழில்நுட்ப வளர்ச்சியையோ, தாராளமயமாக்கலின் பிற விளைவுகளையோ தடுக்க முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியாது என்பதுதான் பதில். ஆனால் மோசமான விளைவுகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், கணினி உள்ளிட்ட அனைத்துமே வெறும் ஜடப் பொருள்கள்தான். பேஸ்புக், டுவிட்டர், அரட்டைப் பெட்டிகள் போன்றவையும் மனிதனால் உருவாக்கப்பட்டவைதான்.
நம்முடைய அடிமை வழக்கம்தான் திருத்தப்பட வேண்டிய அம்சமே தவிர, தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறைசொல்லி எந்தப் பயனும் இல்லை. செல்போன், பேஸ்புக், டுவிட்டருடன்தான் நாம் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
ஆன்லைனில் இருப்பதையே ஒட்டுமொத்தமாக கைவிட்டுவிட முடியாது. ஆனால், அதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நேரமும், சக்தியும் விரயமாவதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், குடும்பம், நண்பர்கள், சமூகம் என ஆஃப் லைனில் இருக்கும் உன்னதமான வாழ்க்கையை இழக்க நேரிடும்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire