சிங்கக் கொடியும்! புலிக்கொடியும்!
விலங்குகள் பற்றியதான உறவாடற் புலத்தில் காட்டு ராஜாவாக கருதப்படும் சிங்கத்துக்கு சவால்விடக்கூடிய பலத்துடன் கூடிய விலங்காகக் கொள்ளப்படுவது புலிதான். ஆனாலும் இந்த இரு விலங்குகளுமே பூனைக் குடும்பத்தின் இருவேறு பிரிவுகள்தான்.
இதனால்தான் வாளேந்திய சிங்கத்தை கொடியாகக் கொண்டுள்ள அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு பாயும் புலியைத் தமது சின்னமாகவும், கொடியாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வரித்துக் கொண்டார்கள்.
ஒருகட்டத்தில் தொண்ணூறுகளுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களின் தேசியக் கொடியாகவும் புலிக்கொடி பிரகடனப்படுத்தப்பட்டது.
தமிழர்களின் போர்த் திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசின் கொடியாகவும் புலிக்கொடியே இருந்ததால் அநேக தமிழர்கள் புலிக்கொடியை தமது தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டார்கள்.
இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலி என்றழைக்கப்படும் பரராஜசேகரமன்னனின் கொடியான நந்திக் கொடியையே தமிழ்மக்களை அடையாளப்படுத்தும் கொடியாக கொண்டு வரமுயற்சித்திருந்தனர்.
ஆயினும் நந்தியைப் புலி தோற்கடித்திருந்தது. பின்னொரு நாளில் நந்திக் கடலில் புலிகள் தோற்கடிக்கப்படும்வரை புலிக்கொடியே தமிழர்களின் தேசியக் கொடியாக அங்கீகாரம் பெற்றிருந்தது.
புலிப்படம் பொறிக்கப்பட்டிருந்த எந்தவொரு பொருளையும் இலங்கைக்கு எடுத்து வருவதற்கு முடியாத நிலை தோன்றியிருந்தது. கொட்டியா (புலி) என்ற பதம் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான ஒரு சொல்லாகவே மாறியிருந்தது.
எங்கள் பெரிசுகளிடம் முன்னர் பச்சை குத்துதல் என்பது ஒரு பொழுது போக்கான விடயமாக இருந்தது. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த உருவங்களை, பெயர்களை உடல்களில் பச்சை குத்திக் கொண்டார்கள்.
அவ்விதம் புலியின் உருவங்களைப் பச்சை குத்திக் கொண்டவர்கள் பின்னாள்களில் படைத்தரப்பின் கெடுபிடிகளையும், விசாரணைகளையும் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அந்தளவுக்கு புலி சார்ந்த எந்தவொரு விடயமும் சிங்களத் தரப்புக்கு ஒவ்வாமையாகியிருந்தது.
உலக நாடுகளில் பெரும்பான்மையானவை தமது நாட்டின் கொள்கை, தனித்துவம், அரசியற் பண்பு, மரபு என்பவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தத்தம் நாடுகளின் தேசியக் கொடிகளை அமைப்பது வழமை. தமது நாட்டுக் கொடியில் விலங்குகளின் உருவத்தைப் பொறித்து சொந்தம் கொண்டாடும் நாடுகள் உலகில் மிகக்குறைவு.
பூட்டான் கொடியில் உள்ள ட்ரகனும், தென்னமெரிக்க நாடொன்றில் உள்ள கழுகும் தவிர வேறு நாடுகளின் கொடிகளில் உயிரினங்களைக் கண்டதாக நினைவில்லை.
வாளேந்திய சிங்கம் உண்மையில் பௌத்த பேரினவாதத்தின் சொந்தக் கொடியில்லை என்பது சுவாரசியமான விடயம். கண்டி இராச்சியத்தை நாயக்க வம்சவழிவந்த பரம்பரையினர் ஆண்ட போது, இப்போதுள்ள இலங்கைத் தேசியக் கொடியை ஒத்த சிங்கக்கொடியே பயன்பாட்டில் இருந்துள்ளது.
ஆனால் இப்போது நான்கு மூலைகளிலும் உள்ள அரச மர இலைகளுக்குப் பதிலாக அதில் மாவிலைகள் (மாவிலைகள் இந்து சமயத்தைக் குறிப்பவை) இருந்துள்ளன. பின்னர் அதையே ரீமிக்ஸ் செய்து, விஜயன் சிங்கத்தின் வம்சத்தில் வந்தவன் என்ற மகாவம்சக் கதையுடன் வாளேந்திய சிங்கத்தை இணைத்து, மாவிலைகளுக்குப் பதிலாக புத்தரின் போதனைகளைக் குறிக்கும் அரசமிலைகளைப் பொருத்தி, இப்போதுள்ள இலங்கைக் கொடி உருவாக்கப்பட்டது.
போரிடும் நாடுகள் தத்தம் நாட்டுக்கொடிகளை கௌரவத்தின் அடையாளமாகக் கொண்டிருப்பது வழமையானது. அதனால்தான் தமக்கு எதிரான நாடுகளின் கௌரவத்தின் குறியீடான கொடிகளை எரித்தும், காலால் மிதித்தும், காறி உமிழ்ந்தும் குறித்த நாட்டின் மீதான ஆத்திரத்தைப் பிறநாட்டு மக்கள் தீர்த்துக்கொள்வ துண்டு.
இலங்கையிலும் போர்க் காலத்தில் மட்டுமல்லாது சமாதான காலங்களிலும் கூட புலிக்கொடியும் சிங்கக்கொடியும் தமக்குள் போரிடுவதை நிறுத்தவில்லை.
சமாதான காலத்தில் பல இடங்களில் புலிக்கொடி ஏற்றுவதை படைத்தரப்பு குழப்பமுயன்றது. புலிக்கொடியை ஒரு போர் ஆயுதமாகவே அது கருதியது. அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிங்கக்கொடி செயலிழந்து போயிருந்தது.
அதைவிட புலிகள் தமது கட்டுப்பாட்டை இழந்திருந்த பிரதேசங்களில் மாவீரர்நாள், கரும்புலிகள் நாள், திலீபன் நினைவுதினம் போன்ற விசேட தினங்களில் ஊடுருவி, புலிக்கொடியை இரவோடிரவாகப் பறக்கவிட்ட சம்பவங்களும் நிறைய உண்டு.
அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக படைத்தரப்பு அந்தக் கொடிகளை அறுத்தெறிந்துவிட்டு, அருகில் குடியிருந்த மக்களையும் ஒரு கை பார்த்துவிட்டே மூச்சுவிடும்.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் இந்தக் கொடிவிவகாரம் கொஞ்சமும் ஓயவில்லை.(புதிதாக வெள்ளைக்கொடி விவகாரமும் இந்தக் கொடிவிடயத்தில் இப்போது சேர்ந்து கொண்டுள்ளது) பின்னர் எல்லா நிகழ்வுகளிலும் சிங்கக்கொடி ஏற்றுவதுடன், தேசிய கீதமும் இசைக்கப்படுதல் வேண்டும் என்ற கட்டளை சிரமேற்கொண்டு இலங்கை எங்கும் நிறைவேற்றப்பட்டது.
எவரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை. பெப்ரவரி 4 இலங்கையின் சுதந்திர தினத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் சிங்கக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று பலவந்தப்படுத்தல்கள் ஒவ்வொரு வருடமும் தமிழர் பகுதிகளில் தொடரவே செய்கின்றன.
இந்த நிலையில் இந்த மாதத்தின் முதல்நாளில் தொழிலாளர் தினத்தில் மீண்டும் புலிக்கொடியும், சிங்கக்கொடியும் மோதியுள்ளன. ஆனால் புலிக்கொடியை படைத்தரப்பின் எடுபிடிகளும், சிங்கக்கொடியை தற்போது தமிழர் தரப்புக்கு எஞ்சியுள்ள அரசியல் அமைப்பின் தலைவரும் ஏந்தியதுதான் விசித்திரம்.
வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினப் பேரணிக்கு புலிச்சாயம் பூசி, சிங்கள தேசத்தில் எதிர்க் கட்சிகளை, புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட விளையும் பயங்கர சக்திகளாக உருவகப்படுத்தவே புலிக்கொடி நாடகத்தை அரசுத் தரப்பு அரங்கேற்றியதாகச் சொல்லப்படுகின்றது.
பேரணியில் வந்த ஒருவர் தனது பொக்கற்றில் இருந்த புலிக்கொடியை எந்தவித பதற்றமுமில்லாமல் வீடியோவுக்கு காட்டுகிறார் (வீடியோவில் அவரது முகமும் தெளிவாகத் தெரியவும் செய்கிறது) இன்னொருவர் தனது பெனியனில் பொறிக்கப்பட்டிருந்த தமிழீழச் சின்னத்தை ஒரு துள்ளலுடன் காட்டி ஓடுகிறார். இவ்விரு செயற்பாடுகளையும் சூட்டோடு சூடாக அரச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
அந்த வீடியோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு விடயம் உடனேயே பிடிபட்டிருக்கும். அதாவது குறித்த நபர்கள் இருவரும் புலிக்கொடியைக் காட்டப்போகிறார்கள், அல்லது தமிழீழச்சின்னத்தைக் காட்டப்போகிறார்கள் என்பது வீடியோ எடுத்தவர்களுக்கு முன்னரேயே தெரிந்திருக்கிறது.
ஏனெனில் பேரணியில் வந்த மற்றவர்களை விட்டுவிட்டு, கமெராவின் பார்வைக்கோணம் குறித்த நபர்களை மையமாக வைத்தே நகர்ந்திருக்கிறது. இதனை அந்த வீடியோக்களே எந்த ஒளிவு மறைவுமின்றிக் காட்டிக் கொடுக்கின்றன.
எனவே பேரணியைக் குழப்பி அல்லது எதிர்க்கட்சிகளுக்கு புலிச்சாயம் பூச அல்லது எதிர்காலத்தில் இவ்வாறான பேரணிக்களுக்கு அனுமதியை மறுப்பதற்கான காரணத்தை இப்போதே உருவாக்கல் என்பன போன்ற விடயங்களுக்காகவே இவ்வளவு நாள்களும் உறங்கு நிலைக்குப் போயிருந்த புலிக் கொடியை மீளவும் உலவ விட்டிருக்கிறது அதிகாரத்தரப்பு.
இதைவிட தமிழ் மக்களை அதிர்ச்சியுற வைத்த அடுத்த கொடி விவகாரம் கூட்டமைப்பன் தலைவர் சம்பந்தன் மே தினப் பேரணியின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் சிங்கக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்தமைதான்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் தமது அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க நம்பியிருக்கும் ஒரே அமைப்பு கூட்டமைப்பு மட்டுமே. அதனால்தான் மற்றைய கட்சிகள் போல் கூட்டமைப்பு மக்களுக்கு அள்ளி வழங்கியிராத போதிலும், கூட்டமைப்பின் வேட்பாளர்களை மக்கள் தொடர்ந்தும் வெற்றிபெறச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் எந்தக் கொள்கைக்காக கூட்டமைப்பை ஆதரித்து வருகிறார்களோ அதற்கு நேரெதிராகக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கிப் பிடித்ததால் தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றமும். கூட்டமைப்பின் மீதான வெறுப்புணர்வும் தலைதூக்கியுள்ளது.
ஆனால் உண்மையில் சம்பந்தர் தானே வலியச் சென்று சிங்கக் கொடியைப் பிடிக்கவில்லை. மிகத்தந்திரமாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தர் கைகளில் அந்தக் கொடியைத் திணித்துவிட்டார் என்பதே உண்மை. ரணில் ஒரு நசுவல் மன்னன். புன்னகையை உதடுகளில் தவழவிட்டாவாறே நரிவேலைகளைச் செய்வதில் கெட்டிக்காரர்.
இப்படித்தான் சிரித்துக் கொண்டே புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்தெடுத்து, புலிகளைப் பலவீனப்படுத்தியவர். அதேபோன்று இப்போது மே தினத்திலும் சமயம் பார்த்து சம்பந்தரின் கைகளில் சிங்கக் கொடியைக் கொடுத்து சிங்கக் கொடியின் கீழ் தமிழர்கள் வருவதற்கு தயார்.
தமிழர்களின் அரசியல் தலைமைத்துவமே சிங்கக் கொடியை எங்களால் ஏந்திவிட்டது என்று தென்னிலங்கையில் தன் அரசியல் செல்வாக்கை தம்பட்டம் அடிக்கத் தொடங்கிவிட்டார்.
ஆனால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தேவையில்லாமல் கொடி பிடித்து, சிக்கல் சகதிக்குள் மாட்டிவிட்டார். என்னதான் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டாலும் , நடந்த நிகழ்வு மறைந்து போய்விடுமா?
தலைவர்கள் எந்தக் கொடியைத் தூக்கினாலும் ஈழத்தமிழர்கள் அநேகரின் மனதின் ஆழத்தில் என்றும் சோழக் கொடியே எழுந்து நின்றாடும் என்பதே யதார்த்தம்.
Comments
Post a Comment