Sunday, February 19, 2012

அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றுமா? - தாயகத்தில் இருந்து வீரமணி


"உலக வல்லரசான அமெரிக்கா நினைத்தால் ஈழத்தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதியான தீர்வொன்றைப் பெற்றுதர முடியுமென்று இன்றுவரை தமிழ் மக்கள் நம்புகின்றனர்."


ஜெனீவாவில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஈழத்தமிழ் மக்கள் சிறியதொரு மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்தச் செய்திகளின் தொடர்ச்சியாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்டீபன் ரெப் இலங்கை வந்துள்ளமையும், அவர் தமிழர் பிரதேசங்களுக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் மக்களுக்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.

ஆனால், அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து தமிழ் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை யாழ்.குடாநாட்டு மக்களின் கருத்துக்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. 2008 ஆம் ஆண்டு தீவிரம் பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தமாக மாறி வன்னியில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்டபோது, தமிழர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் நம்பியிருந்தனர். பாரிய கப்பல்கள் சகிதம் அமெரிக்கா கடல்வழியாக வரும் என்றும், அவற்றின் மூலம் பொதுமக்களும் போராளிகளும் மீட்கப்படுவார்கள் என்றும் அப்போது தமிழ் மக்கள் வெகுவாகவே நம்பியிருந்தனர்.

யுத்த வலயத்தில் சிக்குண்டிருந்த மக்கள் மட்டுமன்றி வடக்குக் கிழக்கு உட்பட ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்த தமிழ் மக்கள் மத்தியிலும் இந்தக் கருத்துக்கள் வேகமாக பரவியிருந்தன. மக்களின் இந்த அதீத நம்பிக்கைக்கு காரணமும் இல்லாமலில்லை. சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க கூடியவரும், சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கூடிய கவனம் செலுத்துபவருமான பராக் ஒபாமா அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தமையே தமிழ் மக்களை இந்த நம்பிக்கைக்குள் ஈர்த்திருந்தது.

ஆனால் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும், நாசகார குண்டுகளையும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது வீசி அவர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இதே அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்காக சிறீலங்கா அரசிற்கு அழிவு ஆயுதங்களை வழங்கிய நாடுகளை தண்டிப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ பதிலாக அந்த நாடுகளுடன் அமெரிக்கா நட்புரிமை பாராட்டிக் கொண்டிருந்தது.

ஒரு இனத்தை எந்த வகையில் அழித்தொழிக்க முடியுமோ, எந்த வகையில் துன்புறுத்த முடியுமோ, அத்தனை கொடூரங்களையும் மேற்கொண்ட சிறீலங்கா அரசை தண்டிக்காவிட்டாலும் தட்டிக்கேட்காமலிருந்த அமெரிக்காவின் செயல் குறித்து, ஈழத்தமிழ் மக்கள் இன்றுவரை கடும் விசனத்துடனும் கவலையுடனும் இருக்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்களை எட்டுகின்ற தற்போதைய நிலையில் சிறீலங்காவிற்கு எதிரான யுத்தக்குற்ற தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு அமெரிக்கா முயற்சியெடுத்திருப்பது குறித்து தமிழ் மக்கள் மனதில் சிறியதொரு மகிழ்ச்சி நிலவுகின்றபோதிலும் அந்த மகிழ்ச்சிக்குள் சந்தேகப் பார்வையும் தலைதூக்கியுள்ளது.

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டுவரும் பட்சத்தில் அது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவிபுரியுமென்று ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதுக்குழுவின் பேச்சாளர் டேவிட் கெனடி கருத்து வெளியிட்டிருக்கின்றார். இக்கருத்து தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இருக்கின்றபோதிலும், என்ன நோக்கத்துடன் தற்போது அமெரிக்கா இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றது என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் யாழ்.குடநாட்டிலுள்ள சில புத்திஜீவிகள் கூறியுள்ளனர்.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கடும்போக்குடன் செயற்படும் சிறீலங்கா அரசாங்கத்தை தண்டிப்பது போன்று பாசாங்கு செய்வதன் மூலம் தனது பூகோள நலன்களை சாதிப்பதற்கு அமெரிக்கா முற்படுகின்றதோ என்று தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்டீபன் ரெப்பின் செயற்பாடுகள் வித்தியாசமான முறையில் அமைந்திருந்தமை தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

ஸ்ரீபன் ரெப் கடந்த 8ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்திருந்தார். ஏனைய நாடுகளிலிருந்து வருகை தரும் தூதுவர்களைப்போல் அல்லாது பல்வேறு விடயங்களையும் அவர் கேட்டறிந்திருக்கின்றார்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்திலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள், இராணுவத்தின் நிலைகள் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டிய இடங்கள், இராணுவத்தினர் தற்போது அமைத்துள்ள புதிய முகாம்கள் தொடர்பான விபரங்கள் போன்றவற்றை விரிவாக கேட்டறிந்தார். யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள மாவட்டத்தின் கட்டமைக்கப்பட்ட பெரிய புவியியல் வரைபடமொன்றினுடாக மேற்படி விபரங்களை அவர் அறிந்து கொண்டார்.

மேலும் யுத்தத்தின்போது காணாமல்போனவர்கள் தொடர்பான விபரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார். அரச அதிபர் சிறீலங்கா அரசிற்கு சார்பான கருத்துக்களை கூறியபோதிலும் ஸ்டீபன் ரெப் அதனை பெரியளவில் கவனத்தில் எடுக்கவில்லை. மறுநாள் 9ம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற தூதுவர் செல்வபுரத்திலுள்ள யூதா தேவாலயத்தில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதுவரை வடக்குக் கிழக்கு மாகாணங்களிற்கு வருகை தந்த ஏனைய நாட்டுத் தூதுவர்கள் எவரும் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியாத நிலையில், அமெரிக்கத் தூதுவர் மக்களைச் சந்தித்துள்ளமை மக்கள் மனதில் சிறியதொரு நம்பிக்கையினைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் என்பதை அறிந்த மக்கள் தமது வேதனைகளை வெளிப்படையாகவே கொட்டித்தீர்த்தனர். யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அவரிடம் எடுத்துக் கூறிய மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நேரடியாக இராணுவத்திடம் தாங்கள் கையளித்த தமது பிள்ளைகள், தமது கணவன்மார் தொடர்பிலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லையென்று கண்ணீர் மல்க கதறியழுதவாறு கூறினர்.

1990 ஆம் ஆண்டு யுத்தம், 2004 ஆம் சுனாமி இயற்கைப்பேரழிவு அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தம் என்று பல பேரழிவுகளை சந்தித்த பின்னர் தற்போது மீளக்குடியேறியுள்ள தங்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படைத் தேவைகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும் கூறினர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் அவர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் சில பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஏனைய இனங்களைப்போன்று தமிழ் இனமும் சமமான உரிமைகளுடன் வாழ விரும்புவதாகவும் கூறிய முல்லை மக்கள், இவ்விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நிலையான நிம்மதியான தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அமெரிக்கத் தூதுவர் ஏறக்குறைய 3 மணித்தியாலங்கள் வரை மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் வேதனைகளைப் பதிவாக்கினார்.

10ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்குச் சென்ற அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ரெப் குழுவினர் அங்கும் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினர். முதல்நாள் வியாழக்கிழமை முல்லைத்தீவில் தனியிடமொன்றில் பொதுமக்களைச் சந்தித்ததால் அவர்கள் சென்ற பின்னர் இராணுவத்தினர் அந்த மக்களை விசாரணைக்குட்படுத்தியதை அறிந்த அமெரிக்கத் தூதுவர் கிளிநொச்சியில் பொது இடத்தில் மக்களைச் சந்திக்காமல், பல்வேறு இடங்களுக்கும் சென்று நேரடியாகவே மக்களுடன் கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு மக்கள் கூறிய அதே வேதனையான கருத்துக்களையே கிளிநொச்சி மக்களும் அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். மக்களின் வேதனைகளையும் விம்மல்களையும் பதிவாக்கிச் சென்றுள்ள அமெரிக்கா, சிறீலங்கா அரசு தொடர்பிலும் ஈழத்தமிழர் தொடர்பிலும் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதே தமிழ் மக்கள் மத்தியிலுள்ள எதிர்பார்ப்பாகவுள்ளது. நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழத்தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தொடர்சியாக நடத்தி வரும் போராட்டங்களின் மத்தியில் அமெரிக்கா தற்போது தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவதாக வெளிப்படுகின்றது.

இந்தக் கரிசனையானது தமிழ் மக்களின் நலன்களுக்குச் சார்பானதா என்ற சந்தேகம் நிலவுகின்ற நிலையில் சார்பானதாக அமையவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா நினைத்தால் ஈழத்தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதியான தீர்வொன்றைப் பெற்றுதர முடியுமென்று இன்றுவரை தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கை வீண்போக கூடாது. அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது. சர்வதேச நாடுகளும் அமெரிக்காவும் இணைந்து தமிழ் மக்களுக்கு நிலையானதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

நன்றி :ஈழமுரசு

No comments:

Post a Comment

Onne Multipurpose Terminal invests in new cranes, CFS

  Jacob Gulmann (sixth from left), OMT CEO, and Abdulrahmon Hussain (eighth from left), Principal Manager representing the Managing Director...