Wednesday, September 1, 2010

திருவொற்றியூர் நகராட்சி டெண்டரில் தொடரும் தில்லுமுல்லு 40 சதம்வரை கமிஷன் பங்கீடு: நகர்மன்றத் தலைவர் குற்றச்சாட்டு

By முகவை.க.சிவகுமார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் நகராட்சியின் டெண்டர்களில் தொடர்ந்து தில்லுமுல்லு நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இனி செங்கல்பட்டில் உள்ள நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் மட்டுமே திருவொற்றியூர் நகராட்சி பணிகள் நடைபெறும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நகராட்சி டெண்டர் பணிகளில் ஆளும் கட்சியினரின் துணையுடன் 40 சதவீதம் வரை கமிஷன் பங்கீடு செய்யப்படுகிறது என நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
திருவொற்றியூர் நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஆர்.ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) தலைமை வகித்தார்.
கூட்டம் தொடங்கியவுடன் துணைத் தலைவர் வி.ராமநாதன் (தி.மு.க) எழுந்து,"தி.மு.க கவுன்சிலர்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நகர்மன்றத் தலைவராக உள்ள ஜெயராமன் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கி வருகிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும்" என கோரிக்கை எழுப்பினார்.
பதவி விலக அவசியம் இல்லை என ஜெயராமன் மறுத்ததை அடுத்து தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய நகர்மன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.குப்பன், "திருவொற்றியூர் நகராட்சி டெண்டர்கள் இனி செங்கல்பட்டில்தான் நடைபெறும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நகராட்சியில் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது குறித்து ஆணையர் பதில் அளிக்க வேண்டும்" என பேசினார்.
ஆனால் ஆணையர் கலைச்செல்வன் பதில் அளிக்காததை அடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் ஆணையர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பல்வேறு பணிகள் குறித்த 81 தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
பின்னர் நகர்மன்றத் தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியது,
திருவொற்றியூர் நகராட்சி டெண்டர்களில் தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்களின் தலையீடு இருந்து வருகிறது. முதலில் ஒப்பந்ததாரர்களைத் தடுத்து நிறுத்தினர். அதன் பின்பு டெண்டர் பெட்டியில் தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தினர். இதனால் பல்வேறு முறை டெண்டர்கள் தள்ளிவைக்கப்படுவதால் அடிப்படை பணிகள் முடங்குகின்றன.

இ-டெண்டரில் தில்லுமுல்லு:
இந்நிலையில் கடந்த ஜூன் 16-ல் சாலைகள் அமைக்க 42 பணிகளுக்கு ரூ.4.50 கோடிக்கான டெண்டர் நடைபெற்றது. இது இ-டெண்டர் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் கூடி 'சிண்டிகேட்' ஏற்படுத்தினர்.
இதனால் 32 பணிகளுக்கு போட்டியி்ல்லாத நிலை ஏற்பட்டது. மீதம் உள்ள 8 பணிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது. இதில் குறைவான மதிப்பீடு அளித்திருந்ததை அடு்த்து 4 பணிகள் எதிர் தரப்பினருக்கு கிடைத்தது.
ஆனால் இதனையும் விட மனதில்லாத ஆளும் கட்சியினர் நகராட்சி அதிகாரிகளின் துணையுடன் டெண்டருக்கான டெண்டருடன் இணைக்க வேண்டிய கிஷான் விகாஸ் பத்திரங்களை காணாமல் செய்தனர். மீண்டும் கே.வி.பி பத்திரம் அளிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை மறுத்த ஒப்பந்ததாரர் உயர்நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார்.

மேலும் ஒரு வினோதம் என்னவெனில் நான்கில் ஒரு டெண்டர் கணக்கிலேயே காட்டப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் இ-டெண்டர் முறையினை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையத்தை (என்.ஐ.சி) அணுகினார்.
ஆனால் டெண்டர் முறையாக பதிவு செய்யப்பட்டு திருவொற்றியூர் நகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்.ஐ.சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
பின்னர் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது. தில்லுமுல்லுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மறு உத்தரவு வரும்வரை திருவொற்றியூர் நகராட்சி டெண்டர்கள் அனைத்தும் இனி செங்கல்பட்டில் உள்ள நகராட்சி மண்ட நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில்தான் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றால் இவையெல்லாம் விவாதிக்கப்படும் என்பதால்தான் ராஜினாமா செய்யவேண்டும் என காரணத்தைக் கூறி கூட்டம் நடைபெறவிடாமல் தி.மு.கவினர் தடுத்துள்ளனர்.
40 சதம் கமிஷன் பங்கீடு:
நகராட்சியின் பல்வேறு மட்டத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. டெண்டர் பணிகளில் 40 சதம்வரை கமிஷனாக பங்கிடப்படுகிறது. மீதம் உள்ள தொகையில்தான் பணிகள் நடைபெறுகின்றன.
ராஜா சண்முகம்நகர், பேசின்சாலை, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த சாலைகளின் நிலை என்ன என உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினாலே முறைகேடுகள் வெளியில் வரும் என்றார் ஜெயராமன்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தொடர்ந்து சாக்கடை நீர் தேங்கிஉள்ளது எனக்கூறி நகர்மன்ற உறுப்பினர் மணிக்குமார் (அ.தி.மு.க) மண் பானையில் சாக்கடைநீரை எடு்த்து வந்து நகர்மன்றக் கூட வாயிலில் கீழேபோட்டு உடைத்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

New Maersk Vessel Class To Enter Service

  A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...