தமிழக அரசியல்வாதிகள் தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா?

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் ஒரு இரவில் பலசித்திரவதைகளை அனுபவித்து தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் மீது அயல் நாட்டார் சட்டம் பாய்ந்துள்ளது. சிறிலங்காவின் முற்கம்பி வேலுக்குள் இருக்கும் மக்களை தான் தமிழக அரசியல் வாதிகளால் காப்பாற்றமுடியவில்லை. தமிழகரசின் முள்வேலிக்குள் இருக்கும் எமது உறவுகளையாவது மீட்பார்களா? என்ற ஏக்கத்துடன் வேலுர் சிறையில் காத்திருக்கும் மக்கள் விடுக்கும் அன்பு வேண்டுகோள்

மதிப்பிற்குரிய ஐயா,

நான் அனைவரும் இலங்கையில் ஏற்பட்ட இனவெறி யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் வந்து அகதிமுகாம்களிலும் திறந்தவெளி அகதிமுகாம்களிலும் முறையாக பதிவு செய்து வாழ்ந்து வந்த எம்மை குரோதம் காரணமாகவும் சந்தேகத்தின் பேரிலும் கியூபிரிவு காவற்துறையினர் கைது செய்து பலதரப்பட்ட வழக்குகளை எம்மீது ஜோடித்து புழல், திருச்சி, மதுரை ஆகிய சிறைகளில் அவரவர் இடத்திற்கேற்றால் போல் அடைக்கப்பட்டோம். பின் பல சிரமங்களிற்கு மத்தியிலும் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் பல இலட்சங்கள் ரூபாய் வரை செலவழித்து எமது குடும்பத்தார் பிணையில் எடுத்தார்கள். பிணையில் வெளி வந்தவர்களையும் வழக்கு முடிந்து வந்தவர்களையும் சிறைவாசலில் வைத்தே மீண்டும் கியூபிரிவு காவற்துறையினர் கைது செய்து அயல் நாட்டார் சட்டமான (3-2) வெளியில் வாழமுடியாத சட்டத்தினை எம்மீது திணித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு எனும் கிளைச்சிறைச்சிறையில் அடைக்கப்பட்டோம்.

அயல் நாட்டார் சட்டம் என்பது, ஒரு சிங்களவனுக்கு அல்லது பிற நாட்டவனுக்கோ பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது. அனால், ஈழத்தமிழனுக்கு அகதியாக வந்து அகதியாக அங்கீகரிக்கப்பட்டு வெளிப்பதிவில் வாழ அனுமதிக்கப்பட்டு சகல பதிவுகளுடன் இருந்தும் பல வருடங்களாக வாழ்ந்தவனையும் மன விரோதம் காரணமாக உள்நோக்கத்துடன் எந்தவித தயவு தாட்சனம் இன்றி கைது செய்து அயல் நாட்டார் சட்டம் பயன்படுத்தி சிறையில் அடைத்துவிடுகின்றார்கள்.

செங்கல்பட்டு கிளைச் சிறையில் இருந்தும் எம்மில் பல பேருக்கு பலவருட காலமாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் அதேபோல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவரிகளுக்கு முறையாக குறிப்பிட்ட திகதியில் வழிக்காவல் துணையுடன் நீதிமன்றம் அழைத்துச் செல்வதிலும் தாமதங்கள் ஏற்படுத்தி, பல பேரை அழைத்து செல்லாமல் பிடிவாரண்ட் போட செய்து திரும்பவும் அவர்கள் முதலில் அடைக்கப்பட்ட அதே சிறையில் அடைத்து வைப்பதிலும் பல கஸ்டங்களை உண்டு பண்ணி மனழுத்தத்தை தந்து குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேலாக எம்மீது அமர்த்தப்பட்ட வழக்குகள் நிறைவுபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு பலவருடங்களாக எம் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் நாங்கள் அனைவரும் எமது விடுதலையை வலியுறுத்தி அதாவது எம்மில் பல பேரின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றார்கள். அவர்களுடன் வெளியில் நாமும் தங்கியிருந்து எம்மீது அவர்த்தப்பட்டு இருக்கும் வழக்குகளை முடிக்கிறோம் என்பதை கோரிக்கையாக வைத்து கடந்த 2009 ஜூலை மாதம் ஏழுநாட்கள் உண்ணாவிரம் இருந்தோம். இதில் ஒரு சில நாட்களில் மட்டுமே ஒரு சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். (எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கு தகுந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை) ஏழாவது நாளில் ஒரு சில அதிகாரிகள் வருகை தந்து உங்களை விடுதலை செய்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும் இரண்டு மாதத்திற்குள் உங்கள் விடுதலைக்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் நம்பிக்கை வார்த்தைகள் அளித்தமையால் எமது உண்ணாவிரத போராட்டத்தை ஏழாவது நாளில் கைவிட்டோம்.

ஆனால், எமக்கு அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வாக்கு நிறைவேறாத பட்சத்தில் நாம் மீண்டும் 20.09.09 அன்று முன்னர் குறிப்பிட்ட கோரிக்கைகளை வைத்தே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். இந்த உண்ணாவிரத போராட்டத்திலும் கைவிடும்படி வலியுறுத்தினார்களே தவிர எமது கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இதனால், பத்தாவது நாளிலும் பன்னிரண்டாவது நாளிலும் உண்ணாவிரதம் இருந்த ஏழுபேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அதன்பின்னர், மீதமுள்ளவர்கள் நீராகாரம் எதுவும் அருந்தாமல் மூன்று நாட்கள் இருந்தபோது குறிப்பிட்ட அதிகாரிகள் சிலர் வந்து முன்னர் இருந்த உண்ணாவிரதத்தில் கூறியது போல் இரண்டாவது உண்ணாவிரத போராட்டத்திலும் எமது வழக்குகள் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி மூன்று மாதத்திற்குள் நல்ல முடிவு கூறுவதாக அவகாரம் கொடுக்கப்பட்டது.

திரும்பவும் எமக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காதபட்சத்தில் கடந்த 18.01.10 அன்று நாம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் நாம் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் போது தான் ஒரு சில அதிகாரிகள் முகாமை வந்து பார்வையிடுவது வழக்கம். இதற்காக எமது வழக்குகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைப்பதற்காக உண்ணாவிரதம் இருந்த மூன்றாவது நாள் 20.01.10 அன்று நாம் எமது முகாம் கதவை அடைத்து பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தாமல் எமது உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். இதன் பலனாக பல அதிகாரிகள் வருகை தந்து எமது கோரிக்கைகளை ஏற்று பத்து நாட்களில் தீர்வு சொல்வதாக கூறிச்சென்றனர். (முதல் மூன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஏமாற்றப்பட்டது போல) பின்னர் 01.02.10 அன்று நான்காவது உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் உண்ணாவிரதம் இருந்து இரண்டாவது நாள் நகரகாவல் அதிகாரியான ஆல்பிரட் வின்சன் என்பவர் எமது கோரிக்கைகளை எதுவும் நிறைவேறாது என்று கூறியதால் நாம் மனமுடைந்த நிலையில் நாம் அனைத்தும் மீண்டுமொரு உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். 02.02.10 அன்று மாலையளவில் காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் விளைவிக்காமல் முகாமினுள் உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது போராட்டத்தை ஏற்காமல் கொச்சைப்படுத்தும் விதத்தில் திடீரென்று எமது முகாம் அவர் மீது ஏணி வைத்து ஏறி எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் (இருபத்தைந்து பேர் சாதாரண உடையணிந்த காவலர்கள் மற்றும் கியூபிரிவினர் உட்பட) எமது முகாமிற்குள் இறங்கி அதாவது ஏற்கனவே திட்டமிட்டது போல் எந்தவித ஒரு பேச்சுக்கும் இடமளிக்காமல் அவர்கள் கொண்டுவந்த லத்தி உருட்டுக்கட்டைகளால் முகாமில் இருந்த பல பேருக்கு இரத்தகாயங்கள் ஏற்படும் அளவுக்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டோம். இதனால் நாம் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு எமது அறைகளுக்குள் ஓடி ஒழிந்த போது, கியூபிரிவு குமார் என்பவரால் அடையாளம் காட்டப்பட்டு எம்மை எமது அறையில் இருந்து பலவந்தமாக வெளியில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்து முகாம் முற்றத்தில் உள்ள மரத்தடியில் முட்டிபோட்டு உட்கார வைத்தனர். பின்னர் ஒவ்வொருவரின் பெயர்களை தனித்தனியாக அழைத்து எம்மை சுற்று சுமாராக பத்து காவலர்கள் (சேவியர் தன்ராஜ் – எ.எஸ்.பி, நகரகாவல் அதிகாரி அல்பிரட்வின்சன் பதில் அதிகாரி, ராஜேந்திர பிரசாத் ஓட்டுனர் ரமேஷ், முனியாண்டி, எஸ்.பி ஏட்டு, அன்று முகாம் கடமையில் இருந்த அதிகாரி அவருடன் இருந்த காவலர்கள், எஸ்.ஐ கியூபிரிவு கவாலர், எ.ஏஸ்.பி. காவலர்கள்,எஸ்.பி காவலர்கள்) சுற்றி நின்று கதறக்கதற ஜீரணிக்க முடியாத பிறப்பை இழுவுபடுத்தும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் (அக்கா,அம்மா,தங்கை,மனைவி,போன்றோர்களை சம்மந்தபடுத்தி) திட்டி அடித்தனர். அதுமட்டும் இன்றி சில பேர் போதையிலும் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் என்று கூட பாராமல் தலையிலும் ரமணன் என்பவதுக்கு உக்காரவைத்து அவரது ஆண்குறியிலும் பூட்ஸ் காலால் மிதித்த் அடித்தார்கள்.
நாம் விடுதலை கேட்பதற்காகவும் குற்றப்பத்திர்கை தாக்கல் செய்யச்சொல்லி கேட்டதற்காகவும் மருத்துவமனை சென்றுவர வழிக்காவல் கேட்டதற்காகவும் தாம் அனைவரும் அடிப்பதாக காரணம் சொன்னார்கள். அடித்ததோடு மட்டுமல்லாமல் “நீங்கள் அனைவரும் இரண்டு வருடத்திற்கு வெளியில் வராதபடி ஓர் வழக்கையும் தொடரப்போவதா ” கூறி எம்மீது பொய்யான வழக்கை தாராளமாக பல பிரிவுகளில் பதிவு செய்தார்கள்.

பின்னர், பெயர்களை அழைத்து அடித்து உதைத்த பின்னர் எம்மை உட்கார வைத்துவிட்டு எமது உடமைகள் அனைத்தையும் எம் கண்முன்னே சூறையாடி எம்மை உட்கார வைத்து மாறி மாறி எந்தவித கேள்வியும் இன்றி மாறிமாறி அடித்தனர். அதாவது இரவு 7.30 தொடக்கம் அதிகாலை 2.30 மணிவரை இந்த துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டு இருந்தது. பின்னர் எங்களை காவலர்களின் வாகனத்தில் ஏற அழைத்துச் செல்லும் போது எம்மை வரிசையில் விட்டு இரண்டு கரையில் காவலர்கள் நின்று கொண்டு அடித்து அடித்தே ஏற்றினர்கள். இச்சம்பவம் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையிலேயே நடந்தது. இந்த தாசில்தார் எமது ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டத்திலும் வந்து வாக்குறுதிகள் தருவார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைவிலங்கிட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காவலர்கள் அடித்த விபரங்களை கூறக்கூடாது என்று லத்தியாலும் பூட்ஸ் காலாலும் அடித்து உதைத்தே மருத்துவரிடம் கூட்டிச்சென்றார்கள். பி.பி மட்டுமே பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள். பின்னர் 03.02.10 அதிகாலை செங்கல்பட்டு ஜே.எம்.ஐ நீதிமன்ற நீதிபதி அவர்கள் முன் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது நாம் அணிந்திருந்த காலணிகள் அனைத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து பறித்து எறிந்து விட்டுத்தான் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். அதே நேரம் நீதிபதி அவர்களும் எம் அனைவரையும் எந்த கேள்விகளும் கேட்கவில்லை. எம்மை கூட்டிச்சென்ற காவலர்களும் எமது கையில் விலங்கிட்ட விலங்கை கழட்டி வலப்பக்கம் (எம்மில் ஒரு சிலரிடம்) அழுத்தி பிடித்து எதுவும் நீதிபதியிடம் கூறக்கூடாது. மீறி கூறினால் வாகனத்தில் வைத்து எமது கால்களை உடைப்போம் என்று மிரட்டினார்கள். அதனில் எமக்கு நடந்த கொடூர சம்பத்தை நீதிபதி முன் கூற முடியவில்லை. நீதிபதி முன் ஆஜர்படுத்தி கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றிய பின்னரும் எம் அனைவரையும் அடித்து துன்புறுத்தி கையொப்பம் இட வற்புறுத்தி சில பத்திரங்களில் கையொப்பம் பெற்றார்கள் அதோடு எம்மை ஏற்றிய வாகனம் புழல் மத்திய சிறைக்கு சென்று கொண்டிருந்த போது எமது எமது உள்ளாடைகளை கழட்டிவீசும்படி அடித்தார்கள். புழல் மத்திய சிறையில் சிங்கள மீனவர்கள் இருப்பதால் எமக்கும் அவர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படும் என்று அங்கு அடைக்காமல் பின்னர் திரும்ப வேலூர் சிறையை நோக்கி எம்மை கொண்டு வரும்போது எம்மில் ஒரு சிலர் உண்ணாவிரதம் இருந்ததனால் மிகவும் சோர்வாக இருந்தார்கள் அவர்களுக்கும் ஒரு சொட்டு தண்ணீரோ சாப்பாடோ எதுவும் கொடுக்கவில்லை. எம் கையில் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டார்கள். இதுமட்டும் இன்றி எம்மில் ஒரு சிலரில் சோர்வாக சாய்ந்தவர்களை அடித்து அடித்தே வேலூர் சிறையை நோக்கி கொண்டு வந்து பகல் 12 மணியளவில் சிறையில் இறக்கிவிட்டார்கள்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவை யாதெனில் இதுவரை விடுதலை செய்யப்பட்டவர்களில் கடந்த உண்ணாவிரதங்களில் மிக தீவிரமாக முன்னின்று நடத்தியவர்கள் யாரும் (பழிவாங்கும் நோக்குடன்) விடுதலை செய்யப்படவில்லை. அதே நேரம் இச்சம்பவத்தில் பழைய உண்ணாவிரத போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர்கள் பெயர் சொல்லி அழைத்து அடித்து துன்புறுத்தினார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.

எம்மை அடித்தால் எமக்காக எந்த நாய் குரல் கொடுக்கிறது என்று பார்ப்போம் என்று சொல்லி சொல்லி அடித்தார்கள். இதனால் இவர்கள் கூறிய இக்கூற்றை தயவு செய்து உண்மையாக்கிடாதீர்கள்.

நீங்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து கொண்டு வவுனியாவில் இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களின் முற்கம்பி வேலியை அகற்ற முடியவில்லை. அவர்களை விடுதலை செய்து காப்பாற்ற முடியவில்லை. செங்கல்பட்டில் உறவுகள் இழந்து, உடமைகள் இழந்து, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமை நிராகரிக்கப்பட்டு, பெரும் துயரங்களுடன் வாழும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை அடைத்து வைத்திருக்கும் முற்கம்பி வேலியையாவது அகற்றிவிடுங்கள்.

நாட்டில் நடந்தேறிய இறுதி கொடிய இராணுவ நடவடிக்கை காரணமாக எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் பட்ட அவலங்களை போல் ஒரே இரவில் எமது பொருட்கள் சூறையாடப்பட்டு அனாதைகளாக பொய்வழக்குகள் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். நாம் அங்கு அனுபவிக்க தவறிய துன்பங்களை இங்கு அனுபவித்து விட்டோம்.

அன்பான உறவுகளே! எமது இந்த துன்ப துயரத்திற்கு பிறகாவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு மட்டும் பயன்படுத்தப்படும் அயல் நாட்டார் சட்டத்தில் (3(12) இருந்து விடுதலை பெற அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆவன செய்து எம்மை வந்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வேலூர் சிறையில் காத்திருக்கின்றோம்

Read more: http://meenakam.com/?p=5641#more-5641#ixzz0f8odZQMb

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire