Tuesday, February 2, 2010
ஈழம்: இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை!
ஈழம் தொடர்பான செய்திகளில், முள்ளிவாய்க்கால் சம்பவங்களைப் பற்றிக்கூறும் அனைவரும் அதை இறுதிப்போர் என்றே வர்ணிக்கின்றனர். ஆனால் அதுதான் இறுதிப்போர் என்று யார் அறுதியிட்டு கூற முடியும்? இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஏதோ ஒரு விதத்தில் கட்டமைக்கப்பட்ட அரசு என்ற இயந்திரத்தை, அந்த அரசின் இயல்புகள் எத்தனை முரண்பாடுகளோடு இருந்தாலும், அதனை ஏற்று – அங்கீகரிக்கும் சர்வதேசச் சூழலில், தனிப்பட்ட ஈகோ பிரசினைகளும், துரோகங்களும் அதிகரித்து வரும் சூழலில் நடைபெறும் ஒரு இன விடுதலைப்போரில் சறுக்குதல்கள் மிகவும் இயல்பானவையே. ஆனால் இந்த சறுக்குதல்களிலிருந்து அந்த இனம் கற்றுக்கொள்ளும் பாடங்களே, அந்த இனத்தின் வாழ்க்கைக்கும், விடுதலை உள்ளிட்ட வளர்ச்சிகளுக்கும் பொறுப்பாக அமையும்.
ஈழத்தில் அண்மையில் ஏற்பட்ட சறுக்குதல் மிகவும் ஆழமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும் இந்த சறுக்குதலில் இருந்து தமிழினம் என்ன பாடத்தை கற்றுக்கொண்டது என்பது ஆழமான பரிசீலனைக்குரியது.மனித இனத்தின் மிகப்புராதனமான இனமான தமிழினம் அனைத்துத்துறைகளிலும் திறம் பெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றைய தமிழினம் அதே திறத்துடன் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் வேதனைதான் மிஞ்சும். சுமார் 30 ஆண்டுகள் நடந்த ஈழ விடுதலைப்போரில் ஈழத்தமிழர்கள் எதைக்கற்றனர் என்பதைவிட தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் கற்றார்கள் அல்லது எதை மறந்தார்கள் என்பதை பார்க்கலாம்.தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் ஈழம் குறித்து பேசாத மக்கள் பிரிவினரே இருக்க முடியாது: அரசியல் தலைவர்களும் இருக்க முடியாது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் இருந்த எழுச்சி இன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கான விடை மிகுந்த பரிசீலனைக்கு உரியது.ஈழப்பிரசினையின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் எழுச்சி, சிங்கள அரசால் இறுதிப்போர் என்று வர்ணிக்கப்பட்ட போரின்போது ஏற்படவில்லை. அதற்கான காரணங்களை பலரும், பலவிதமாக கூறக்கூடும். ஈழப்போர் நீண்டகாலம் நீடித்ததால் தமிழகத் தமிழர்களின் ஈடுபாடு குறைந்ததாக சிலர் கூறக்கூடும். ராஜீவ் காந்தியின் முடிவு காரணமாக தமிழகத்தமிழர்களின் ஆதரவை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டதாக கூறக்கூடும். விடுதலைப்புலிகள் மீதான மக்களின் விமர்சனம்கூட ஈழம் குறித்து தமிழகத்தமிழர்களின் நிலையை மாற்றியிருக்கலாம் என்றும் சிலர் விமர்சிக்கக்கூடும்.
ஆனால் இந்த காரணங்கள் இல்லாவிட்டால்கூட தமிழகத் தமிழர்கள் ஈழப்பிரசினையில் இந்த எதிர்விளைவை காட்டியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு தமிழர்களின் ஆளுமையில் அல்லது உளவியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பரிசீலிக்க வேண்டும்.கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு பலவிதங்களில் முன்னேறி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாறிவரும் உலகமய பொருளியல் சூழலுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் ஒரு பிரிவினர், கணிப்பொறி உள்ளிட்ட நவீன அறிவியல்துறைகளில் நிபுணத்துவம் பெற்று உலகம் முழுவதும் உள்ள கணிப்பொறி நிறுவனங்களில் முக்கிய பணியாற்றுவது வரவேற்க வேண்டியதுதான்.ஆனால் சமூகத்தில் முன்னேற்றம் என்பது பொருள் சார்ந்த ஒரு கருத்தாக மட்டுமே இருப்பது மிகப்பெரும் பின்னடைவே! அறம் சார்ந்த சிந்தனைகள் பின்தள்ளப்பட்டு, பொருளே பிரதானம் என்ற கருத்து சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் முதன்மை பெற்று வருகிறது. பொதுமக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் முன்மாதிரி பிம்பங்களாக திகழும் அரசியல் தலைவர்கள், தொழிற்துறையினர், திரையுலக பிரபலங்கள் ஆகிய அனைவரும் அறம் குறித்த சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, பொருள் குறித்த சிந்தனைகளையே முன்வைக்கின்றனர்.
எனவே இளையதலைமுறையும், அறத்தைக் கொன்றேனும் பொருள் தேடவேண்டும் என்று புரிந்து கொள்கிறது. ஆனால் கொல்லப்படுவது அறம் மட்டுமல்ல, தங்கள் சுய ஆளுமையும்தான்! என்பது புரிவதில்லை.ஆளுமைகள் கொல்லப்படும்போதுதான் அறம் சார்ந்த பார்வைகள் பொருள் இழக்கின்றன. பதிலாக பொருளே பிரதானமாக, பொருளுக்காக எதையும் சமரசம் செய்துகொள்ளும் மனோபாவம் உருவாகிறது. இந்த நிலையில்தான் சமூகப்பார்வை என்பது முற்றிலுமாக விலகி சுயநலம் மட்டுமே முன்னால் நிற்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இன்னல் என்றால்கூட, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை உருவாகிறது.இந்த மனநிலை மேலும், மேலும் ஊடுருவி தன்னை பாதிக்காத எந்த பிரச்சினையும், ஒரு பிரச்சினையே அல்ல என்று முடிவெடுக்க வைக்கிறது.தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வதாக மைய அரசின் தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்தாலும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி கொள்கைகளை வகுப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வெளியானாலும் அது எவருடைய மனதையும் துணுக்குற வைப்பதில்லை.தமிழர்களிடம் இந்த மனநிலையை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் ஊடகங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளைவிட நடிகர், நடிகைகள் குறித்த செய்திகளும், அரசும் காவல்துறையும் திட்டமிட்டு வெளியிடும் பிற பரபரப்பு செய்திகளும் பொதுமக்கள் உண்மையான பிரசினைகள் குறித்து சிந்திக்காதவண்ணம் திசை திருப்புவதில் வெற்றி காண்கின்றன. ஆக மொத்தத்தில் எந்த ஒரு சமூக அநீதியைக் கண்டாலும், அதைக் காணாததுபோல் நடித்து சிந்தனையை வேறுபக்கம் திருப்பும் அயோக்கியத்தனமான முயற்சியில் தமிழ்ச்சமூகம் வெற்றியடைகிறது. அந்த வெற்றியில் இன்பமும் காண்கிறது.
இந்த உளவியலின் நீட்சியே ஈழ விவகாரத்திலும் நடந்தது.
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததில் தமிழகத்தின் அனைத்து துறையினரும் அவரவர் தகுதிக்கேற்ப போட்டிபோட்டு வேலை செய்ததாக துணிந்து கூறலாம்.உயிர்தப்பி ஓடி வரும் ஈழ அகதிகள் அனைவரையும் பயங்கரவாதிகளாக நடத்திய, நடத்தும் மத்திய-மாநில அரசு அமைப்புகள், அபயம் தேடி ஓடிவந்த அகதிகளை கால்நடைகளைவிட கீழாக நடத்தின. இவர்களுக்காக பேசுவதற்கு தமிழகத்தின் எந்த பிரதான அரசியல் கட்சியும் முன்வரவில்லை.
ஈழத்தில் போர்முனையில் இருந்த போராளிகளையும், ஆயுதம் தரிக்காத சாதாரண குடிமக்களையும் சர்வதேச சட்டவிதிகளின்படி நடத்தவேண்டும் என்ற சட்டரீதியான குரலை முழுமையாகவும், உரத்தும் யாரும் எழுப்பவில்லை. இது குறித்து சர்வதேச நாடுகளிடம் முறையான கருத்துப்பரப்பலை மேற்கொள்ள வேண்டிய தார்மீக கடமையேக் கொண்ட இந்தியாவோ, இறுதி யுத்தத்திற்கு பிறகும்கூட சிங்கள இனவெறி அரசை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் நடந்து கொள்கிறது. மத்திய அரசில் அங்கம் வகித்த, வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்தவில்லை.
தமிழ்நாட்டிலோ ஈழவிவகாரத்தை கையிலெடுத்த அனைத்து அரசியல்வாதிகளுமே, தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களுக்கும், நலன்களுக்கும் ஏற்பவே இந்த விவகாரத்தை கையாண்டனர். இந்த கொடுமையின் உச்சத்தில் செயலாற்றியது ஆளும் திமுகவும், முதன்மை எதிர்கட்சியான அதிமுகவும். திராவிடர் கழகம் போன்ற அரசியல் சாராத சமூக இயக்கங்களும்கூட ஈழப்பிரசினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பதைவிட, தமிழகத்தின் ஆளும் கட்சியை சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவது குறித்தே அதிகம் யோசித்தது.
ஈழப்பிரசினையை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டிய சமூகக்கடமை கொண்ட ஊடகங்களோ துரோகத்தின் மறுவடிமாக நடந்து கொண்டன, நடந்து கொள்கின்றன! சென்னை நாய்க் கண்காட்சியில் வெப்பம் தாங்காமல் நான்கு உயர் இன நாய்கள் செத்துப்போனதைக்கூட பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பிய தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி, ஈழத்து சோகங்களை முழுமையாக இருட்டடிப்பு செய்தது. ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்து கட்சி சார்ந்த ஊடகங்களும் ஈழப்பிரசினையை முழுமையாக இருட்டடிப்பு செய்தோ அல்லது தங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப திரித்தோ செய்தி வெளியிட்டன.இந்த விவகாரத்தில் ஊடகங்களை விமர்சித்தவர்கள்கூட பார்ப்பன ஊடகங்களின் எதிர்ப்பைத்தான் கண்டித்தனரே தவிர, தமிழர் ஊடகங்களின் துரோகத்தை இதுவரை அடையாளம் காட்டவில்லை, கண்டிக்கவில்லை. எதிரியைவிட துரோகி மோசமானவன் என்பது இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியவில்லை போலும்! சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் சோகத்தை திட்டமிட்டு மறைத்த பாதகர்கள் ஒரு புறமென்றால், ஆட்சி பீடத்தை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்வு காரணமாக இந்த விவகாரத்தை தவிர்த்த ஊடகங்களும் உண்டு. வடஇந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய ஊடகங்களும், மிழத்திற்குள் இருந்து கொண்டே தமிழர்களுக்கு எதிராக இயங்குவதை வழக்கமாக கொண்ட ஆங்கில ஊடகங்களும் ஈழத்தமிழர் விவகாரத்தை மிகவும் வன்மத்துடனே கையாண்டன.
பெரும் முதலீடுகளில் இயங்கும் இந்த ஊடக நிறுவனங்களின் துரோகத்தையாவது முதலாளித்துவப் பார்வையில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் துரோகத்தை காலத்தால் மன்னிக்க முடியாது. பணியாற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் ஒட்டுமொத்த சிந்தனையையும், செயல்திறனையும் விற்றுவிட்டு “இன்டெலக்சுவல் இம்பொடென்ட்” ஆகிப்போன இந்த செய்தியாளர்கள், அவர்கள் பணியாற்றியிருக்க வேண்டிய பொதுத்தளத்தை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தப் பிரசினையில் முழுமையாக செயல்பட்டிருக்க வேண்டிய பத்திரிகையாளர் அமைப்புகள் ஈழப்பிரச்சினை குறித்து கள்ள மவுனம் சாதித்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சில பத்திரிகையாளர்கள் மட்டுமே இணைய தளங்கள், வலைபதிவுகள் போன்ற மாற்று ஊடகங்களை திறம்பட பயன்படுத்தி ஓரளவிற்காவது ஈழமக்களின் சோகங்களை உலகிற்கு எடுத்து வைத்தனர். ஆனால் அவற்றிலும் மிகஅதிகமானவை தமிழில் மட்டுமே வெளியானதால் இந்தியாவில் தமிழ் அல்லாத மாநில மொழி ஊடகங்கள் இந்த செய்திகளை பிரசுரிக்க விரும்பினாலும், செய்திக்கான மூலங்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.தமிழகத்தில் ஈழப்பிரச்சினைக்காக ஓரளவிற்காவது போராடியவர்கள் வழக்குரைஞர்கள் மட்டுமே. ஆனால் சட்டரீதியாகவும், அறிவுசார்ந்தும் நடந்திருக்க வேண்டிய அந்தப்போராட்டமும், சரியான தலைமையோ, திட்டமிடலோ, கூட்டு நடவடிக்கைகளோ இல்லாததால் – அரசின் சாணக்கியத்தனமான சூழ்ச்சிக்கு இரையாகி போராட்டமே திசைமாறி நீர்த்துப்போனது.போராட்டம் என்பதையே சிந்தித்திராத கணிப்பொறித் தமிழர்களில் சிலர், இன உணர்வு பெற்று போராட முன்வந்தனர். படித்த நடுத்தர வர்க்கத்தில் பெரும் மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்க வேண்டிய இந்தப்பிரிவினரின் போராட்ட உணர்வுகளும்கூட சிலரின் தவறான ஆலோசனைகளால் திசைமாறிப்போனது.
சட்டக்கல்லூரி மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் இந்த பிரசினையில் எந்த ஆர்வமும் காட்டியதாக தெரியவில்லை. இதைக் கல்விமுறையின் வெற்றி என்றுகூட சிலர் கூறக்கூடும். ஆனால் இத்தகைய கல்வியை கற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களாக – ஆதிக்கச் சக்தியினரின் கைப்பாவைகளாக மட்டுமே – வாழ்வதற்கு தயாரிக்கப்படுகின்றனர் என்பதை யாரும் உணரவில்லை.இதற்கு நடுவிலும் சில நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளன. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளை குறிவைத்து தமிழக இளைஞர்கள் களம் இறங்கியதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றோருக்கு தக்க பாடமும், ப.சிதம்பரம் போன்றோருக்கு எச்சரிக்கையும் பரிசாக கிடைத்திருக்கிறது.இதைவிட முக்கியமாக பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் நம்பும் அரசியல் தலைவர் மற்றும் நடிகர்களின் உண்மை முகம் தெரிந்திருக்கிறது. நல் உணர்வு கொண்ட மிகச்சில ஊடகவியலாளர்களுக்கு மாற்று ஊடகத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது குறித்து அனுபவமும் கிடைத்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், எதிர்காலம் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், எந்த உணர்வுமற்று இருக்கும் தமிழன் தனக்குத் தேவையான அனைத்து உணர்வுகளையும் பெறவேண்டிய நிலையை காலம் உருவாக்கும். உலகமயச்சூழலில் அனைத்து இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகமாகும் இன்றையச் சூழலில், ஈழத்தமிழன் சந்தித்த அனைத்துக் கொடுமைகளையும் வேறொரு விதத்தில் தமிழகத் தமிழனும் சந்திப்பான். அவனது மரத்துப்போன உணர்வுகளை அன்றைய சூழல் மீட்டெடுக்கும்.எந்த உலகமயச்சூழல் ஈழத்தமிழருக்கு நேற்று பெரும் இன்னலை ஏற்படுத்தியதோ, அதே உலகமயச்சூழல் நாளை தமிழ்நாட்டுத் தமிழனின் உணர்வுகளை தட்டியெழுப்பும். ஆட்சியாளர்களின் அடுக்குமொழி வசனங்களும், அவர்கள் ஊட்டி வளர்க்கும் ஆபாச கலைகளும் தங்களை ஏமாற்றுவதற்கே என்பதை தமிழ்நாட்டுத் தமிழன் உணரும் காலம் வரும்.அப்போது ஆதிக்கச்சக்திகள் எழுதும் வரலாற்றுப் பக்கங்கள் மாற்றி எழுதப்படும். ஒரு இனத்தின் வாழ்க்கையையோ, இறுதிப்போரையோ மற்றோர் இனம் தீர்மானிக்கமுடியாது என்பது உணரப்படும். முள்ளிவாய்க்காலில் நடந்தது இறுதிப்போர் என்ற சொல்லாடலை தமிழர்கள் மறுபரிசீலனை செய்வார்கள். முள்ளிவாய்க்கால்தான் இறுதிப்போரா? இல்லை, அது வேறொரு அத்தியாயத்தின் தொடக்கமா? என்பதை நாளைய ஈழத்தமிழர்கள் தீர்மானிப்பார்கள்.
தனி ஈழத்திற்கான தேவைகள் இருக்கும்வரை ஈழப்போர் தொடரவே செய்யும் என்பதை சிங்கள அரசும், உலக நாடுகளும் புரிந்து கொள்ளும். போரின் களம் மாறலாம், காலம் மாறலாம், போர் ஆயுதங்கள் – போர் முறைகள் மாறலாம் – ஆனால் போர் தொடர்ந்து நடைபெறும் என்பதை உலகம் உணரும். இந்தப் போரை தொடர்ந்து நடத்த ஈழத்தமிழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள், தமிழர்களின் உரிமைகள் குறித்து கரிசனையுடன் செயல்படுவதற்கு சன்டே லீடர் இதழ் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க போன்ற மனசாட்சியுள்ள சிங்களர்களும் கருத்துப்போராளிகளாக பிறந்து கொண்டே இருப்பார்கள்.
காலமாற்றத்தில் தமிழகத் தமிழனும் சினிமா, அரசியல் பித்தம் தெளிந்து, சுயநினைவு அடைந்து ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமல்ல: ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்குமான விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு நல்குவான்.
ஆதவன் பெப்ரவரி இதழுக்காக எழுதியவர் ஆர் சுந்தரராஜன்
Source: http://www.puthinamnews.com/?p=5669#more-5669
Subscribe to:
Post Comments (Atom)
ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal
Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
No comments:
Post a Comment