Monday, July 20, 2009

கறுப்பு ஜூலை




இலங்கையின் வரலாற்றில் கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்பட்ட இனக் கலவரம் நடந்து இருபத்தாறு ஆண்டுகளாகின்ற போதிலும் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி மூட்டப்பட்ட தீ இன்னும் அணையவில்லை. தமிழர்களின் துயரம் தொடர்கிறது. இனப்பிரச்சினையும் தீரவில்லை. அந்த இனக் கலவரத்தினால் அகதியான பல தமிழ் மக்கள் இன்றுவரை அகதிகளாகவே வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி முகாம்கள் தொடர்கின்றன. சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்த போதிலும் தமிழினப் பிரச்சினை தீரவில்லை. தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையும் மங்குகின்றது. பிரச்சினையும் போராட்டம் புதிய வடிவம் எடுக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தையும் , தொடர்ச்சியாக கலவரங்களினாலும் போரினாலும் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.





இவ்வாறு ஜூலை கலவரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் செங்கொடிச் சங்கப் பொதுச் செயலாளர் ஏ. ஓ. இராமையா தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அகதிகள் நிலையில் தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டுக்குப் பின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் குறிப்பாக இந்தியாவில் தமிழ் மக்களுக்கான அநுதாபம் அலை மோதியது. ஓங்கி இருந்தது. சிங்கள மக்கள் மத்தியிலும் அநுதாப அலை வீசியது. ஆனால் தற்போது இந்நிலை மாறி வருகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் அநுதாப அலை மங்கி வருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் மக்களே காரணமென்ற பேரினவாத சக்திகளின் பெரும் பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சவால்கள் விட்டு பின் சரணாகதிப் பாதையில் செல்லும் பல தமிழ்த் தலைமைகளும் இப்பிரசாரத்திற்கு ஒத்து ஊதுகின்றன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சிங்களப் பேனவாத சக்திகளால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகின்றனர். ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் மக்கள் வீறு கொண்டு எழுவர் என்பது வரலாற்று நியதி என்ற போதிலும் தற்போது அகதிகளின் பிரச்சினையே விஷ்வரூபமெடுத்துள்ளது.


1983 ஆம் ஆண்டு அகதிகளானவர்களிலிருந்து தற்போது அகதி முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் திறந்தவெளி சிறைச்சாலைகளிலும், சிறைக் கூடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பிரச்சினையே பிரதானமானது. பலஸ்தீன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் அகதி முகாம்களில் வாழும் நிலைக்கே தற்போது தமிழ் அகதிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.


ஆகவே அகதிகளின் அவலக் குரலுக்கு ஏனைய தமிழ் மக்களும் அமைப்புகளும் செவிசாய்க்க வேண்டும். 1981, 1983 ஆம் ஆண்டு இனக் கலவரங்கள் 1981ஆம் ஆண்டு இரத்தினபுரி மாவட்டத்திலும் 1983ஆம் ஆண்டு தலைநகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களை நேரடியாக காணும் சந்தர்ப்பம் எனக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் எனது தோழர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது.


இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அகதிகளாகச் சென்றனர். அகதிகளாக அகதி முகாம்களிலும் வெளியிலும் வாழ்கின்றனர். அதிகமான மக்கள் அகதி முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் திறந்த வெளி சிறைச்சாலைகளிலும் சிறைகூடங்களிலும் அவல வாழ்வு நடத்துவார்களென 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்திற்கு பின் எதிர்பார்க்கவில்லை. இலட்சக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்து உற்றார் உடைமைகளை இழந்து ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வாழும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை.





முன்பு யூத மக்களைப் போன்று தற்போது பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கைத் தமிழ் மக்களில் கணிசமானோர் அகதிகளாகக் காலங்கழிக்கின்றனர். எவ்வளவு காலத்திற்கு இந்த அகதி வாழ்வு தொடரும். சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது அங்கு வாழும் இலங்கை தமிழ் அகதிகள் சிலர் தாங்கள் வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தை வெளியிட்டனர். ஆகவே இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் அகதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் பற்றியும் தமிழ் அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் அக்கறை செலுத்துவது அவசியம்.


இலங்கையில் தமிழினப் பிரச்சினை இல்லை என பேரினவாத சக்திகள் பிரசாரம் செய்யும் போது நாடாளுமன்ற தமிழ்த் தலைமைகளும் ஏனைய தமிழ் அமைப்புகளும் இப்பிரச்சினை பற்றி போதிய அக்கறை செலுத்தாதிருப்பது சந்தர்ப்பவாதமாகும். சரணாகதி கொள்கையாகும். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தை நினைவு கூரும் போது அகதிகளின் புனர்வாழ்வு பற்றி அக்கறை எடுத்து தோழமைச் சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...