சசிகலா திடீர் பரபரப்பு அறிக்கை : முழுவிவரம்

Source:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=7346

சென்னை: திருமதி வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது உறவினர்கள் தமது பெயரை பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுப்பட்டதாகவும், ஜெயலலிதா வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் இதுகுறித்த பல விவரங்கள் தனக்கு தெரிய வந்ததாவும் விளக்கம் அளித்துள்ளார். சசிகலாவின் அறிக்கை விவரங்கள் பின்வருமாறு,

திருமதி வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கையின் முழுவிவரம் : 

கடந்த மூன்று மாத காலமாக பல தரப்பட்ட பத்திரிக்கைகளில் என்னை பற்றி பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 

1984 ஆம் ஆண்டு முதன் முதலாக அக்காவை (முதலமைச்சர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இரவு பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின்  பணிச் சுமையை ஓரளவிற்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்று தான் விரும்பினேனே தவிர வேறு எந்த விதமான எண்ணங்களும் எனக்கில்லை.

போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்கு தான் எனக்கு தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை. 

24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர்  மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர் தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்கு தெரியவந்தன.

கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்கு தெரிய வந்தது.

என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுப்பட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்த போது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவையெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பது தான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவிற்கு துரோகம் நினைத்ததில்லை.

என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு, அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாவதவர்கள் தான்.

இவ்வாறு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவிற்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. 

என்னை பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ, எனக்குத் துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன். இவ்வாறு சசிகலா வெளியிட்ட திடீர் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire