Friday, January 20, 2012

வரலாற்றுத் துரோகங்கள் மூலம் தமிழீழ மண்ணில் மீண்டும் ஒரு போர்க்களத்தை உருவாக்காதீர்கள்!

"வரலாற்றுத் துரோகங்கள் மூலம் தமிழீழ மண்ணில் மீண்டும் ஒரு போர்க்களத்தை உருவாக்காதீர்கள்!"


Source:http://www.pathivu.com/news/19775/57//d,article_full.aspx

சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. 

தரவே மாட்டேன் என்ற அடம்பிடித்தலுடன் மகிந்த ராஜதானிகளது இறுக்கத்தைக் கலைத்து, அவற்றைப் பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன் தமிழீழத்திற்கு மாற்றீடாக மாகாணசபையை ஏற்றுக்கொள்ளும் திட்டத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்வதாகவே புலப்படுகின்றது. அதாவது, கடந்த மூப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட பரிபூரண சிங்கள மேலாதிக்கம் கொண்ட மாகாணசபையினை ஏற்றுக்கொள்வதனூடாக தமிழீழ மக்களது தமிழீழ இலட்சியத்தையும், அதற்கான விடுதலைப் புலிகளது அர்ப்பணிப்புக்களையும், உயிர்த் தியாகங்களையும் அதனுள் புதைத்துவிடும் வகையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லைக் கோடுகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. 

தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்களின்படியும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின்படியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி உச்ச இலக்கு பொலிஸ், காணி உரிமைகள் கொண்ட மாகாணசபை மட்டுமே. அந்த உச்ச இலக்குடன், அவற்றைத் தரமாட்டோம் என்கின்ற சிங்கள தேசியவாதத்துடன் சில விட்டுக்கொடுப்பு சமரசங்களும் ஏற்படலாம். இது, நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் அழுகின்றேன் என்பதற்கு ஒப்பான இழுபறி மட்டுமே. இப்போது இதையும் விட்டுவிட்டால், எப்போதும் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற சப்பைக்கட்டுக்குள் தமிழீழ மக்களது அவலங்கள் புதைக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணைகளும் நீர்த்துப் போய்விடும். 

முள்ளிவாய்க்காலின் பின்னர், விடுதலைப் புலிகளின் பின்னே அணிவகுத்து நின்ற புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஜனநாயக முறைமைப் போராட்டத்தினூடாகத் தமிழீழ மக்களுக்கான நீதிக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள். அந்த நீதி தமிழீழ மக்களுக்கு மறுக்கப்படுமானால், அவர்களது கோபம் நிச்சயம் இன்னொரு போர்க் களத்தைப் பிரசவிக்கும். அதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைக்கான கோரிக்கைகள் தமிழீழ மண்ணில் உருவாக்கப்போகின்றது

சிங்களப் படைகளது கொடூரங்களையும், தமிழினப் படுகொலைகளையும், பாலியல் கொடூரங்களையும் பார்த்து வளர்ந்துவரும் இன்னொரு சந்ததியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைக்காக மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடும் கட்டாயத்தைக் கையளிக்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய இலக்கு அதனையே எமக்கு உணர்த்துகின்றது. 

தமிழீழ விடுதலைப் போரும், அதற்கான காரணங்களும் முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்துவிட்டதான சிங்கள தேசத்தின் கற்பிதமும், இதற்குமேல் எதையும் கேட்க முடியாது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காய்ந்துபோன சிந்தனைகளும் ஈழத் தமிழர்கள் அமைதி வழிக்குத் திரும்புவதற்குப் போதுமானதாக அமையாது. இலங்கைத் தீவில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் தமிழீழ மக்களுக்கான நியாயங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களது கௌரவம் மீள் நிறுத்தப்பட வேண்டும். அவர்களது அச்சங்கள் அகற்றப்பட வேண்டும். அது மட்டுமே இலங்கைத் தீவை இன்னொரு அழிவிலிருந்து மீட்கும்.

சிங்கள தேசியவாதத்தைத் திருப்திப்படுத்தும்விதமான எந்தத் தீர்வும் தமிழ் மக்களது சிந்தனையில் மாற்றங்களை உருவாக்காது. அக்கினியாய் கொதிக்கும் அவர்கள் மனங்களில் அமைதியை உருவாக்காது. இப்போது வேண்டுமானால், 10 தமிழர்களுக்கு ஒரு சிங்களப் படையினைவைத்துப் போலியான அமைதித் தோற்றத்தை உருவாக்க முடியும். அது எத்தனை காலத்திற்குத் தாக்குப் பிடிக்கப் போகின்றது?
முதலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை நம்ப வேண்டும். எதிரியின் பிரமாண்டம் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ மக்களது விடுதலைக்கான போர்க் களம் ஒன்று இலங்கைத் தீவுக்கு வெளியே எரிமலைக் கொதிப்புடன் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பலத்தையும், அனைத்துலக தளத்தில் அதன் காத்திரமான வகிபாகத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முத்துக்குமாரன் மூட்டிய தீ இப்போதும் அனல் குறையாமல் தாய்த் தமிழகத்தைப் பற்றிப் படர்ந்து வருகின்றது. செங்கொடியின் ஈகமும், சிங்களத் தமிழன் நடேசன் மீதான தமிழ்த் தேசியவாதிகளின் தாக்குதலும் சாதாரணமான சம்பவங்கள் அல்ல. தமிழக மக்களின் கோபம் ஆட்சியை மாற்றியதுடன் அடங்கிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஈழத்து மக்களது பாதிச் சொந்தங்கள் புலத்தில் வேரூன்றி நிற்பதும் தமிழீழ விடுதலைக்கான பெரும் பலம் என்பதைப் பொய்யாக்கிவிட முடியாது. சிங்கள தேசத்தால் தொட முடியாத ஒன்று திரண்ட தமிழ்த் தேசிய சக்தி இப்போதும் சீறிப் பாயத் தயாராகவே உள்ளது. முள்ளிவாய்க்காலின் பெருந்துயர் வழங்கிய சோர்விலிருந்தும், தடுமாற்றங்களிலிருந்தும் விடுபட்டு வரும் புலம்பெயர் தமிழ்த் தேசிய தளங்களது பேரெழுச்சி சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பெரும் பீதியைக் கிளப்புவதை அண்மைய கொழும்புச் செய்திகள் உணர்த்துகின்றன. 

அதற்கும் மேலாக, தமிழீழ விடுதலைக்காக எந்த விலையைச் செலுத்தவும் தயாரான தமிழர்கள் உலகம் முழுவதும் காத்திருக்கின்றார்கள். இதற்குப் பின்னரும் எதற்காக அடிபணிதல் அரசியல்? வரலாற்றுத் துரோகங்கள் மூலம் தமிழீழ மண்ணில் மீண்டும் ஒரு போர்க்களத்தை உருவாக்காதீர்கள்!
- இசைப்பிரியா

No comments:

Post a Comment

Kids enjoying evening in village