அந்தமான் நிகோபார் தீவுகள் தனி நாடா? நாணயங்கள் கண்டு ஆய்வாளர்கள் திகைப்பு
- வி.நாதன்
சர்வதேச நாணயவியலாளர்களை ஏமாற்றுவதற்காக அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரில், நாணயங்களைத் தயாரித்து மோசடி பேர்வழிகள் சிலர் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் வகையிலான இந்த மோசடி வேலையில் ஈடுபட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய நாணயவியலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதி. இதுவரை இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயங்களே இங்கு புழக்கத்தில் உள்ளன.
ஆனால், இப்போது, "அந்தமான் நிகோபார் தீவுகள்' என்ற பெயரில் புதிய வகை நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தத் தீவுகளின் பெயரில் சமீபத்தில் வெளியாகியுள்ள, இரட்டை உலோகங்களில் செய்யப்பட்ட இரண்டு நாணயங்கள் உட்பட ஏழு வகை நாணயங்களைக் கண்டு, நாணயவியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்ளனர்.
தெற்காசிய நாணயங்கள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான், இவற்றை நாணயவியல் ஆய்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மோசடி வேலைகளில் ஈடுபடும் சிலரே இந்த வேலையைச் செய்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இந்த நாணயங்களுக்கான படிவ அச்சுக்களை தயார் செய்வதற்கான லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்துள்ளனர். இதன் மூலம் நாணயம் தயாரித்து, உலக முழுவதும் உள்ள நாணயவியல் ஆய்வாளர்களை ஏமாற்ற முற்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த வகை நாணயங்கள் 10 ஆயிரம் "செட்கள்' தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆன்-லைன் ஏல நிறுவனத்தில், இந்த வகை நாணயம் ஒன்றின் மதிப்பு 29.50 டாலர். 10 ஆயிரம் நாணயங்களின் மதிப்பு, 1 கோடியே 34 லட்சத்து 51 ஆயிரத்து 999 மற்றும் 55 பைசா).
இந்த நாணயங்களின் தலைப்பக்கத்தில் அந்தமான் நிகோபார் தீவுகள் என்ற பெயரும், கொடியுடன் கூடிய சிங்கமும், ஆண்டைக் குறிக்கும் வகையில் 2011ம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயங்களின் மறு பக்கத்தில், அதாவது 20 ரூபாய் முகமதிப்பு கொண்ட நாணயத்தில், நத்தை வகை சார்ந்த ஒரு வகை மீனின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயத்தில் கடல் விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது. ஐந்து ரூபாய் நாணயத்தில் காட்டுப் பன்றியின் படமும், 2 ரூபாய் நாணயத்தில் தென்னம்பூவின் படமும், 1 ரூபாய் நாணயத்தில் பல்லியின் படமும் பொறிக்கப்பட்டுள்ளது. 50 பைசா நாணயத்தில் மீன்கொத்திப் பறவையின் படமும், 25 பைசா நாணயத்தில் பட்டாம்பூச்சிகளின் படமும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தில் ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் இந்தி மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது போன்ற நாணயங்களை வாங்குவது, நாணயவியலாளர்களின் தனிப்பட்ட உரிமை. இருந்தாலும், ஒரு அபாயகரமான போக்கு, நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் செயல். அதனால், சட்ட விரோதமாக இது போன்ற நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டவர்கள் மீது, மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாணயவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
Post a Comment