மூடி மறைக்கப்படும் தொடரும் வன்னிப் பெரும் துயர்


தேர்தல் திருவிழாக்களில் அதிகம் பாதிக்கப்பட்டது வன்னி மக்கள்தான். அதுவும் தமிழ் அரசியல்வாதிகளால் தேர்தலுக்காக நன்றாக பயன்படுத்தப்பட்டார்கள் வன்னி மக்கள் அதாவது, வன்னி மக்களின் துயரம் அவலம் சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு நன்றாகப் பயன்பட்டன. முள்ளிவாய்க்கால் எங்கே இருக்கிறது என்றே தெரியாதவர்கள், அது எப்படி இருந்தது என்று அறியாதவர்கள் எல்லாம் வன்னித் துயரத்தை சில்லறை விலைக்கு விற்றார்கள். இதுவும் வன்னி மக்களுக்கு செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய துரோகமே.

ஆனால், வன்னி மக்களோ வன்னிப் போரின்போது சந்தித்த அவலங்களுக்கு நிகரான அவலங்களையும் துயரங்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். 2006இல் சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததையடுத்து இந்தத் தொடர் கதை ஆரம்பமாகியது.
முதலில் வன்னிக்குள் போரின் போது சந்தித்த பேரவலம். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தங்களுக்குள்ளேயே நொந்தும் வெந்தும் வாழவேண்டிய நிர்ப்பந்தம். இறுதிப்போரின் அத்தனை வலியும், அத்தனை பெரிய வலிமையான நெருக்கடிகளும் அவர்களின் தலையில் இறங்கியது.

பின்னர் முகாம் வாழ்க்கை அவலம். அதற்குப் பிறகு இப்போது மீளக்குடியமர்வில் தீராத பிரச்சினைகளும் முடியாத அவலங்களும் தாங்கவே முடியாத துயரங்களும். போர்க்களத்திலிருந்து பாதுகாப்பான பகுதி ஒன்றிற்கு வெளியேறுவதற்காக வன்னி மக்கள் பட்டபாடு சாதாரணமானதல்ல.

யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறினால் போதும் என்ற நிலை அப்போது அவர்களிடம் இருந்தது. ஏனென்றால் அந்த நெருக்கடியில் இருந்து விடுபட்டால் போதும் என்ற உணர்வே அப்போது இருந்தது.

அதைப்போலவே முகாம் வாழ்க்கை அவலத்திலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக அவர்கள் பெரும் பாடுபட்டார்கள். பல இழுபறிகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு அவர்கள் அனுப்பப்பட்டபோது உண்மையில் மகிழ்ந்தார்கள். என்னதான் இருந்தாலும் சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டால் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் எதிராகவே அங்கே நிலைமைகள் உள்ளன.

மீள்குடியேற்றம் என்பது அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதை அப்படியே தொடர்ந்தும் அவலங்களுடன் பேணுவதாகவே இருக்கிறது. சொந்த ஊரில், சொந்த வீட்டில் அகதிகளாகவே, எதற்கும் வழியற்றவர்களாகவே இந்த மக்கள் இருக்கின்றார்கள்.

போரில் முற்றாக அழிந்தும் சிதைந்தும் போயுள்ள வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் என்பது அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். போரில் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் இதுவே நடைறை. இலங்கையிலும் போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் அப்படியே மேற்கொள்ளப்படும் எனச் சொல்லப்பட்டது.

முகாமிலிருந்து மக்களை மீள்குடியேற்றத்திற்கு அனுமதிப்பதில் அரசாங்கம் எடுத்துக் கொண்ட காலதாமதம் இந்த அடிப்படை கட்டுமானங்களை சீர்படுத்துவதற்காகவே என்று கூறப்பட்டது. ஆனால், போர் முடிந்து ஏறக்குறைய ஓராண்டு நெருங்குகின்றபோதிலும் அங்கே எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. வன்னிப் பகுதியை மூடியே அரசாங்கம் வைத்திருக்கிறது.

மீள்குடியேற்றப் பகுதிகளில் மிதிவெடி இன்னும் முற்றாக அகற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட வளவுகளில் மிதிவெடி அபாய அறிவிப்பு நாடாக்களும் பெயர் பலகைகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. வீதிகள் பற்றை மூடி குச்சொழுங்கைகளாக, ஒற்றையடிப் பாதைகளாக மாறிவிட்டன. இந்தப் பாதைகளில் சனங்களும் பாம்புகளும் ஒன்றாகவே திரிவதை நீங்கள் பார்க்கலாம்.
பகலில் சனங்கள் அதிகம் என்றால் இரவில் பாம்புகள் அதிகம்.

மின்சாரம் இல்லை. குடிநீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. தண்ணீர் பிரச்சினை ஆகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல கிணறுகள் இடிந்து பாழாகிவிட்டன. மிஞ்சிய கிணறுகளை இறைத்துப் பாவிக்க வசதியில்லை. ஒரு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பெறுவதற்கே சிரமப்படுகின்றார்கள் மக்கள்.

இராணுவத்தினர் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்கின்றார்கள். அரச அதிகாகளின் ஏற்பாட்டில் செய்யப்படும் குடிநீர் விநியோகம் சீரில்லாமலே இருக்கிறது.

காய்ந்து எரிக்கும் கடுமையான வெய்யிலில், புதர்மண்டிய வீதிகளில் தண்ணீருக்காக அலையும் சனங்களைப் பார்க்கலாம். சில கிராமங்களில் இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நீர் இறைக்கும் இயந்திரங்களையும், நீர் கொள்கலன்களையும் வழங்கி வருகின்றார்கள். ஆனாலும் இது போதாது.

வீடுகளுக்குப் பதில் குடிசைகள், கொட்டில்கள், தறப்பாள் கூடாரங்கள்தான் அநேகமாக அங்கே உள்ளன. கொளுத்தும் வெய்யிலில் இந்த சிறிய அமைப்புகளுக்குள் மக்கள் கிடந்து வதைபடுகின்றார்கள்.
எவருக்கும் சீரான தொழில் இல்லை. முறையான வருமானம் இல்லை. கொடுக்கப்படுகின்ற நிவாரணத்திலும் சீரின்மையே நிலவுகிறது. சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட நிவாரணத்தின்போது பல கூட்டுறவுக் கடைகளில் அரிசி வழங்கப்படவில்லை.

ஒரு சைக்கிளுக்குக்கூட வழியில்லாமலேயே பல குடும்பங்கள் இருக்கின்றன. பாடசாலைகளில் படிக்கின்ற சில பிள்ளைகளுக்கு மட்டும் சைக்கிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றவர்களுக்கே இந்தச் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்றவர்கள் எல்லாம் நடந்துதான் திகிறார்கள். பலர் போர் காலத்தில் காயப்பட்டவர்கள். கை, கால்களை இழந்தவர்கள். இவர்களும் தங்களுடைய தேவைகளுக்காக நடந்துதான் செல்கிறார்கள்.

இடிந்துபோன பாடசாலைகளில் சீரில்லாத கூரைகளின் கீழே பிள்ளைகள் படிக்கிறார்கள்.
முன்னர் இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கே பிள்ளைகள் படிக்கின்றார்கள். வெளி இடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியைகள் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களே கற்பிக்கின்றார்கள். ஏதோ சாட்டுக்குத்தான் பள்ளிக்கூடங்கள் இயங்குவதைப்போல் இருக்கிறது. ஓரளவுக்கு சீராக நடப்பது பஸ் போக்குவரத்து மட்டும்தான்.

பாதிக்கப்பட்ட மக்களின் எந்த விபரங்களும் இதுவரை திரட்டப்பட்டவில்லை. சொத்து இழப்புக்கள், உயிர் இழப்புகள், அங்கவீனம் பற்றிய விபரங்கள் எதுவுமே சேகரிக்கப்படவில்லை.
அதனால், இழப்பீடுகள், உதவிகள் போன்ற எதுவுமே வழங்கப்படவுமில்லை. அதற்கான ஆயத்தங்கள்கூட நடைபெறுவதாகவும் இல்லை.

மீள்குடியேறியவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதாக இருந்தால் இந்த மக்கள் தங்கள் கிராமங்களில் நாற்பது நாள் வேலை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளைத் துப்பரவு செய்தல், காணிகளைச் சீராக்குதல், வயல்களை பயிர்ச்செய்கைக்கு ஏற்றமாதிரி ஒழுங்குபடுத்தல் போன்ற முக்கியமான வேலைகளையே அவர்களால் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. எதற்கும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணமாகும். வருமானம் இல்லாத நிலையில் இருக்கும்போது அவர்களால் எதையுமே திட்டமிட முடியவில்லை. அதனால், எதையும் செய்யவும் முடியவில்லை.

பொதுவாக மக்கள் வாழக்கூடிய நிலையில் இந்த மீள்குடியேற்றம் நடைபெறவேயில்லை.
இந்த மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள், தேவைகள் பற்றி அரச அதிகாரிகள் தொடக்கம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கம், சர்வதேச சமூகம், புலம்பெயர் மக்கள் என எந்தத் தரப்பிற்கும் உரிய அக்கறையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அரசாங்கத்தால் மீள்குடியேற்றத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்ய முடியாது. அரச இயந்திரம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இந்த அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்துவிடவும் இயலாது. உண்மையில் அரசாங்கம் திறந்த மனதுடன் வெளித் தரப்புகளை இணைத்தே இந்த ஏற்பாடுகளை செய்ய முடியும்.

ஆனால், அதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அரசாங்கத்தின் இந்தத் தயக்கத்தை அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் போக்கவேண்டும். அரசுக்கு இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக அழுத்தத்தையோ அல்லது இணக்கத்தையோ ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த மக்களின் அவலத்தையும் துயரத்தையும் வைத்து அரசியல் நடத்தும் போக்கு சில கட்சிகளிடம் நிலவுகிறது. இது மிக மோசமான கவலைக்குரிய ஒரு விசயம்.

அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே இப்போது முக்கியமானது. இதுதான் வன்னி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடியது. ஓர் இயல்புச் சூழலை உருவாக்குவதாயின் அதற்காக அரசாங்கம் மட்டும் முயற்சித்தல் போதாது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள், மக்களின் பிரதிநிதிகள் எனச் சகல தரப்பினன் பங்களிப்பும் கடுமையான உழைப்பும் அவசியம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக அதிகம் அதிகம் துயரங்களைச் சுமந்தவர்கள் வன்னி மக்கள். இந்த உரிமைப் போராட்டத்திற்காக தங்கள் வாழ்வில் அதிகூடிய தியாகங்களைச் செய்தவர்கள் இந்தச் சனங்கள்.

ஆனால், இன்று முகாம்களிலும் காடாகிய தங்கள் கிராமங்களிலும் ஒரு நாள் பொழுதைக் கழிப்பதற்கே மிகவும் கஷ்டப்படும் வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றுள்ளார்கள் இவர்கள். ஒரு மீள்குடியேறிய குடும்பத்தின் நிலை என்பது வன்னி முழுவதின் முடிவுறாத துயரமாகவே நீண்டு கொண்டு இருக்கிறது. சனங்கள் தங்கள் கவலைகளை முறையிடுவதற்கு வழியில்லை.
அவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அரசாங்கம் தொடக்கம் தமிழ் அரசியல் கட்சிகள் வரையில் வன்னி மக்களை வைத்து, அவர்களின் துயரங்களை வைத்து தமது இலாபங்களை தத்தம் பாணியில் நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, கண்டாவளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, பாண்டியன்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, வவுனியா வடக்கு ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிவுகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இந்த அகதிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அகதிகளாகவே இருக்கப்போகிறார்கள் என்று யாருக்குத் தெரியும். வன்னி துயரக் காடாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தீராத கவலைக்குரிய விடயம்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire