ஸ்பெக்ட்ரம் ஊழல் : நெல்லுக்குப் பாய்ந்தது தெரிகிறது புல்லுக்குப் பாய்ந்தது…?

 Written by புதிய ஜனநாயகம்


இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும்,

பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் மக்கள் பணம் ரூ. 60,000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.


1991ஆம் ஆண்டிலேயே உலக வங்கி தொலைபேசித் துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டுமென இந்தியாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அப்போதிருந்த நரசிம்ம ராவ் அரசும் இதைச் சிரமேற்கொண்டு அமல்படுத்தியது. எல்லா பகாசுரக் கம்பெனிகளும் களத்தில் குதித்து, அரசிடமிருந்த தொலைபேசித் துறையின் வளத்தை ஊழல் உதவியுடன் முழுங்க ஆரம்பித்தன. அப்பொது தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் சி.பி.ஐ கட்டுக்கட்டாய்ப் பல கோடி பணத்தைக் கைப்பற்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.


பின்னர் வந்த வாஜ்பாய் அரசில் தகவல் தொடர்புத் துறை அசுரவேகத்தில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஊழலும் அதே வேகத்தில் கொடிகட்டிப் பறந்தது. அரசுக்குக் கட்டவேண்டிய லைசென்சு பணத்தை எல்லா நிறுவனங்களும் கட்டாமல் பட்டை நாமம் போட்டன. இதில் சில ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டது. பா.ஜ.க. அரசும் தனியார் நிறுவனங்களின் இந்தக் கட்டண ஏய்ப்பை அங்கீகரித்து உத்தரவிட்டது. அரசுத் தொலைபேசித் துறையை ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கென்றே ""ட்ராய்'' என்ற தொலைபேசித் துறை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு எல்லா புகார் மற்றும் வழக்குகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகிறது.


அப்போது தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் இந்த நிறுவனங்களின் தரகராக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொடுத்தார். இந்தச் சூழலில்தான் ரிலையன்சு நிறுவனம் பல மோசடிகளை அரங்கேற்றியது. வில்போன் எனப்படும் வட்டார தொலைபேசி லைசென்சு எடுத்திருந்த அம்பானி அதற்கு மாறாக செல்பேசி சேவையை வழங்கினார். இதில் சில ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதும் ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அந்த அபராதத் தொகை பல மடங்கு குறைக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி ரிலையன்சு செய்த பச்சையான மோசடியிலும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மாநகரங்களில் உரிமை அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தனியார் நிறுவனங்கள் புறந்தள்ளின.


இந்தச் சூழலில்தான் மன்மோகன்சிங் அரசின் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்க்க வேண்டும். முதலில் அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 1990க்கு முன்பு நமது தொலைபேசிகள் எல்லாம் கம்பி வழியாக செயல்பட்டன. நாடு முழுக்க கம்பி வலைப்பின்னல் போடப்பட்டு, இந்த தொலைபேசி சேவை இயங்கியது. பின்னர் செல்பேசி வந்ததும் இந்த கம்பிவழி தேவைப்படவில்லை. இதன்படி மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றை வரிசையில் அனுப்பப்பட்டு, செல்பேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ செயல்படும் விதத்தைப் போலத்தான் இதுவும். அதனால்தான் செல்பேசிகளில் எஃப்.எம். வானொலி சேவை கிடைக்கிறது. இந்த அலைக்கற்றைகள் உலகமெங்கும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுப் பல நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது, பல வானொலி நிலையங்களுக்குப் பல்வேறு அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு ஒப்பானது.


செல்பேசியைப் பொருத்தவரை இந்த அலைக்கற்றைகளின் வசதி வருடத்திற்கு வருடம் மேம்பட்டு வருகிறது. அதாவது, முதலாவது தலைமுறை அலைக்கற்றை 2001ஆம் ஆண்டில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அதைவிட வேகமாகவும் வசதிகள் கொண்ட அலைக்கற்றைகள் இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் கொண்டு வரப்படுகிறது. இனி வருங்காலத்தில் செயல்பாட்டுக்கு வரும் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பது இணையம் பயன்படுத்துவது உட்பட பல வசதிகளைக் கொண்டிருக்கும். எனவே, இந்த அலைக்கற்றைகளின் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வது என்பது இயற்கையை விற்பது போல என்று கூடக் கூறலாம். இதை வைத்து அந்த நிறுவனங்கள் பல சேவைகளை வாடிக்கையாளருக்கு அளித்து பல்லாயிரம் கோடி ரூபாயைத் திரட்டுகின்றன என்பதுதான் முக்கியம்.


இப்போது சென்ற ஆண்டு இறுதியில் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விதத்தைப் பார்ப்போம். 2001ஆம் ஆண்டில் முதல் தலைமுறை அலைக்கற்றை விற்கப்பட்டது. அப்போது அதை வாங்கிய நிறுவனங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பெறும் வர்த்தக ஆதாயத்தில் அரசுக்குப் பங்கு தர, வருவாய்க்கேற்ற பங்கு என்ற முறையில் விற்கப்பட்டன. அப்போதே விற்பனைத் தொகை மிகவும் குறைவு என்பதோடு, பின் வந்த ஆண்டுகளில் அந்த உரிமையை வாங்கிய நிறுவனங்கள் அந்த தொகையைக் கூடக் கட்டாமல் ஏமாற்றி வந்தன. அரசும், அதிகார வர்க்கமும் இந்த ஏமாற்றுதலை அங்கீகரித்தன.


ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையை விற்கிறார்கள். இப்போதாவது அரசு இதை நல்ல விலைக்கு விற்றதா என்றால் இல்லை. 2001ஆம் ஆண்டில் என்ன விலைக்கு விற்றார்களோ அதே அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார்கள். அதுவும் பகிரங்கமாக ஏலம் விட்டு இதைச் செய்யவில்லை. முதலில் எந்த நிறுவனங்கள் வருகிறதோ அவைகளுக்கு ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரூ.60,000 கோடிக்கு விற்கவேண்டிய சரக்கு வெறும் ரூ.3000 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்கள் ஊழல் உதவியுடன் இதைச் சாதித்திருக்கின்றன. காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளின் ஆசீர்வாதத்தோடு இந்தத் திருப்பணியை மைய அமைச்சர் ராஜா செய்து முடித்திருக்கிறார்.


ஒரு தொகை என்ற அளவில் இதுவரை நாடு கண்ட ஊழலில் இதுதான் மிகப் பெரியது என்று சொல்லலாம். இத்துடன் ஒப்பிடும்போது போபார்ஸ், ஃபேர்பாக்ஸ் போன்ற ஊழல்களெல்லாம் வெறும் தூசிதான். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று பொதுவில் நாடு பெரிய அளவுக்கு அதிர்ச்சியடையவில்லை. எதிர்க்கட்சிகள் கூட ஒரு சடங்குக்குப் பேசிவிட்டு முடித்துக் கொண்டன. பா.ஜ.க.விற்கு இதைக் கண்டிப்பதற்கு தார்மீக தகுதியில்லை என்பதாலோ என்னவோ, ஒரு கடமைக்கு மட்டும் பேசியது. இத்தனைக்கும் மேல் மன்மோகன் சிங் அரசு இந்த ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.


ஸ்வான், யூனிடெக் என்ற இரு கம்பெனிகளும் உண்மையில் ""உப்புமா'' கம்பெனிகள்தான். இந்த கம்பெனிகள் எதுவும் தொலைத்தொடர்புத் துறையில் எந்தவிதமான அனுபவமோ, ஆட்பலமோ, ஏன் கட்டிடமோ, கருவிகளோ இல்லாத ""டுபாக்கூர்'' நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருக்கும் பினாமி நிறுவனங்கள் கருணாநிதி குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் இரண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்கியபிறகு, தங்களதுப் பாதிப் பங்குகளைப் பல மடங்கு அதிகமான விலையில் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவை ஸ்பெக்ட்ரம் உரிமையை மலிவு விலைக்கு வாங்கியிருப்பதால், இவற்றின் மதிப்பு பின்னாளில் பல மடங்கு ஏறியிருக்கும் என்பதுதான்.


மேலும் பல தொலைபேசித் தனியார் நிறுவன்ஙகள் எதுவும் இந்த ஊழலைக் குறித்து பெரிய அளவுக்கு புகார் எதுவும் கிளப்பவில்லை. இது டெண்டர் எடுப்பதற்கு முதலாளிகள் திருட்டுத்தனமாக சிண்டிகேட் அமைப்பதைப் போன்றது. இதன்படி இரண்டு உப்புமா கம்பெனிகளைத் தவிட்டு ரேட்டுக்கு எடுக்க வைத்து, பின்னர் அதை மாற்றிக் கொள்வது என்ற உடன்படிக்கைபடி இது நடந்திருக்கிறது. இப்படி இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் கனகச்சிதமாக அரங்கேறியிருக்கிறது. அதனால்தான் அமைச்சர் ராஜா இந்த முறைகேடு சட்டப்படி நடந்திருப்பதாக திரும்பத் திரும்ப ஓதி வருகிறார். சட்டப்படிதான் இந்திய மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகத்தான் நாமும் கூறுகிறோம்.


தொலை தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவியில் இருந்தபொழுதே, ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அவருக்குப் பின்னர் அத்துறையின் அமைச்சரான ராஜா குற்றஞ்சாட்டினார். அப்போது மாறன் சகோதரர்கள், கருணாநிதியுடன் தகராறில் இருந்தனர். இதன் நீட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மாறன்களது சன் டி.வி.யும் தினகரன் நாளேடும் அதிரடியாக ரூ. 60,000 கோடி ஊழல் குறித்து அம்பலப்படுத்தி வந்தன. இதில் முக்கியமாக அமைச்சர் ராஜாவைக் குறி வைத்தே செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ராஜாவும் மாறன்களது ஊடகங்கள் தேவையில்லாமல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதாகப் பேசி வந்தார். இதற்கிடையில் கருணாநிதி, மாறன் சகோதரர்களது துரோகத்தைக் கவிதையாய், கடிதமாய் முரசொலியில் எழுதி வந்தார். அதற்குப் பதிலடியாய் கலாநிதி மாறனது கடிதம் தாத்தாவோடு நடந்த பாகப்பிரிவினை குறித்து பல விசயங்களை அம்பலப்படுத்தியதோடு, அக்கடிதம் பகிரங்கமாக பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.


இரண்டு கோடீசுவரக் குடும்பங்களும் தங்களது சொத்துக்களை வைத்துத் தகராறு நடத்த தொடங்கிய இந்த நேரத்தில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வந்ததும் அதில் கருணாநிதியின் பின்னணி இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு என்ன மாயம் நடந்ததோ, இரு குடும்பங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டு போட்டோவோடு ஊடகங்களுக்கு குடும்பத் தகராறு முடிந்துபோன செய்தியைக் கொடுத்தன. இதை யோசித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்பத்தினர் அடித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விசயம் வெளியே வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் பெயரில் மாறன்களுக்குப் பல சலுகைகள் கொடுக்கப்பட்டுப் பூசி மெழுகியிருக்கிறார்கள். அதன் பிறகு மாறன்களது ஊடகங்கள் இந்த ஊழலைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்கின்றன. திருமங்கலத்தில் ஸ்பெக்ட்ரம் பணம்தான் தண்ணியாய்ச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் கறி விருந்தே நடத்தியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதை ஊகிக்க முடியும்.


இந்தக் காலத்தில்தான் கனிமொழிக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு, இந்த ஊழல் பணம் அதில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் நம்மிடம் ஆதரமில்லை என்றாலும், அடித்த கொள்ளைப் பணம் இவர்களிடம்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கருணாநிதி குடும்பத்தினர் அடைந்த ஆதாயம் காங்கிரசு அரசின் ஆசீர்வாதத்தோடுதான் நடந்திருக்க வேண்டுமென்பதிலும், அதில் ஒரு பங்கு காங்கிரசுக்கும் சென்றிருக்கலாம் எனவும் உறுதியாகக் கூற முடியும்.


60,000 கோடி ரூபாயைக் கமுக்கமாக அடித்துவிட்டு இந்த ஊழல் பெருச்சாளிகள் கவுரவமாக உலா வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒரு ரூபாய்க்கு பேசும் ஒரு உள்ளூர் அழைப்புக்குப் பயன்படும் செல்பேசி சேவையில் இத்தகைய ஊழலும் கொள்ளையும் கலந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். செல்பேசி சேவை மலிவாகக் கிடைக்கிறது என்று மூடநம்பிக்கை நிறைந்திருக்கும் நாட்டில்தான், இந்த மலைமுழுங்கி மகாதேவன்களது சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது.


· இளநம்பி
Source: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4977:2009-02-09-20-51-47&catid=278:2009&Itemid=27

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire