பொதுத் தேர்தல் திருவிழாவில் நாடு மூழ்கியுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறும் வாக்கெடுப்போடு அந்த பிராக்கு முடிந்துவிட்டது.’அதேநேரம் திருவிழாக் காலக் கடைகள் போல வேட்பாளர்களும் காணாமல் போய்விடுவார்கள்.வெற்றிபெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களின் தேர்தல் பற்றிய விமர்சனங்களும் ஒரு சில நாட்கள் வைரவர் உற்சவம் போல தேர்தல் திருவிழாவை ஞாபகப்படுத்தும்.அவ்வளவுதான். அதன் பின்னர் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்ற ஏக்கம் எங்களை உருக்குலைக்கும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசாத யாழ். மாவட்ட வேட்பாளர்கள் எவருமே இல்லை என்று கூறுமளவிற்கு இப்போது நிலைமை உள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் எவரும் இனப்பிரச்சினை பற்றி பேசமாட்டார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.
அப்படியானால் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும்? இந்தக் கேள்விக்கு ஆரோக்கியமான பதில் எதுவும் இல்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு எதனையும் முன்வைக்கும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரியவில்லை.இப்போது தமிழ் மக்கள் பலமற்றவர்களாகி விட்டனர். நாடும் உலகமும் எங்களை அப்படியாக்கிவிட்டது என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். உயர்ந்த இடத்தில் இருக்கும் போது இருக்கக் கூடிய கெளரவமும், மதிப்பும் ஆட்களில் வருகையும் ஆதரவும் தனித்துவமானவை. அந்த உயர்வில் இருந்து விழுந்து விட்டால் மதித்தவர்களே மிதிப்பார்கள். அடிக்கடி தரிசிக்க வந்தவர்கள் ஏளனமாகச் சிரிப்பார்கள்.

கூட இருந்து தத்தம் தேவைகளை நிறைவு செய்தவர்களே எதிர்மறையாக விமர்சிப்பார்கள். இது மறம் தாண்டவமாடும் மண்ணில் நடக்கக் கூடியவைதான். இதில் இன்னும் வேதனை நொந்துபோயிலுள்ள தமிழ் மக்களைச் சுண்டியும் சுரண்டியும் பார்க்கும் செயலாகும்.
ஆம், இலங்கை ஆட்சிக் கலாசாரத்தின் அநாகரிகமான குடியேற்றங்கள், கெளதம புத்தபிரானுக்கு அரசடியில் இடம்பிடித்து பிறசமயங்களை நிந்திக்கும் அநீதிகள், தமிழ் மக்களின் பூர்வீக இடங்களில் புகுந்து வியாபாரம் செய்யும் துணிச்சல்கள், எல்லாமே எல்லை மீறப்போகின்றன.

என்ன செய்வது! எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிபோல ஈழத்தமிழர்கள் வருத்தத்தை அனுபவிக்கின்றனர். நாங்கள் நோயை மாற்றுவோம் என்று கொக்கரிகின்றனர். இந்தக் கொக்கரிப்பும் எதிர்வரும் 7 ஆம் திகதிவரையும் தான்.அதன் பின்னர் எங்களைத் தேற்றுவார் யார்உளர்?
– வலம்புரி ஆசிரியர் தலையங்கம்
Source: http://www.meenakam.com/
No comments:
Post a Comment