விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த காலப் போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் 19ம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.
ஆண்டுதோறும் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அரசாங்கம் காலிமுகத் திடலில் பாரிய இராணுவ அணிவகுப்பையும் கொண்டாட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிலும் அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
போரில் பெற்ற வெற்றியை நினைவுபடுத்தி விழாக்களைக் கொண்டாடுவதில் தான் அரசாங்கத்தின் கவனம் இருக்கிறதேயன்றி அந்த வெற்றியை நிரந்தரமான அமைதியாக நிலைநாட்டிக் கொள்வதில் கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
அதாவது நிலையான அமைதிக்கு அவசியமான பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை.
இதற்கான அழுத்தங்கள் சர்வதேச அளவில் கொடுக்கப்பட்டாலும், புதிய புதிய வடிவங்களில் இலங்கையில் சிங்கள - பௌத்த பேரினவாதம் தான் மேலோங்கி வருகிறது.
போரின் போது எல்லா நாடுகளினதும் கவனம் இலங்கை மீது எவ்வாறு குவிந்திருந்ததோ அதுபோன்றே தற்போது முக்கியமான பல நாடுகளினது புலனாய்வுப் பிரிவுகள் மோதுகின்ற களமாகவும் இலங்கை மாறியுள்ளது.
காரணம், இலங்கையில் நிலவுகின்ற தற்போதைய சூழல், தமது நாடுகளினது நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் முக்கியமான பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய குழப்பமான நிலையற்ற சூழல் என்பது கிட்டத்தட்ட ஒரு குழம்பிய குட்டையைப் போன்றது.
இலங்கையின் மீது அக்கறை கொண்ட நாடுகளும், இலங்கையின் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள முனையும் நாடுகளும் நாடுகளும், அந்தக் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முனைகின்றன.
இலங்கை அரசாங்கம் பலமுறை வெளிநாட்டுச் சக்திகள் குறித்து எச்சரித்துள்ளது.
மிக அண்மையில் கூட உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதால் சிக்கல்கள் அதிகமாவதாக கூறியுள்ளது.
தனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பலமுறை கூறியுள்ளார்.
சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பிரிவினையை அமெரிக்கா தோற்றுவித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச மேதினக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இப்படியாக அரசாங்கத்துக்கு எதிரான வெளிநாடுகளின் இரகசியச் செயற்பாடுகள் குறித்து, அவ்வப்போது அரசாங்கத் தரப்பே தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இவையெல்லாம் வெறும் கற்பனைகள் என்றோ, சிங்கள மக்கள் மத்தியில் தமக்கு அனுதாபம் தேடிக் கொள்வதற்கான உத்தி என்றோ முற்றிலும் புறமொதுக்கி விட முடியாது. இதற்குள் சில உண்மைகள் இருக்கின்றன என்பது ஆச்சரியமானது.
ஆனால் அதற்கு அரசாங்கத் தரப்பு கூறுவதெல்லாம்சரியென்றோ, ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாடுகள் அல்லது அவற்றின் புலனாய்வு அமைப்புகள் சதி செய்யவில்லை என்றோ அடித்துக் கூறமுடியாது.
ஏனென்றால் இலங்கையின் அமைவிடச் சூழலும்இங்குள்ள அரசியல் பாதுகாப்புச் சூழலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மிகவும் வசதியானது.
இலங்கை பல்வேறு நாடுகளினதும்கவனத்தைப் பெறுகின்ற கேந்திரமான ஒரு இடமாகவும் பல்வேறு நாடுகளினது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளத்தக்க இடமாகவும் இருப்பதால், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளினது கவனம் இலங்கை மீது குவியும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக, இலங்கையில் அண்மையில் எழுந்துள்'ள பொதுபலசேனா என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதம்,? பல்வேறு நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது.
திடீரெனத் தோன்றிய இந்தப் பொதுபலசேனா யுகத்துக்கு பலமான பின்னணி ஒன்று இருப்பதற்கான வாய்ப்புகளை எவராலும் நிராகரிக்க முடியாது.
மஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.
இன்னொரு பக்கத்தில் பொதுபலசேனாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விவகாரத்தில் அமெரிக்கா அக்கறை கொள்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுவாக அமெரிக்கா முஸ்லிம்களுக்கு விரோதமான நாடாகவே முஸ்லிம்களால் பார்க்கப்படுகிறது.
ஆனால் பொதுபலசேனா விடயத்தில் முஸ்லிம்களுக்காக அமெரிக்கா குரல் கொடுக்கிறது.
இன்னொரு பக்கத்தில் இலங்கை இஸ்லாமியத் தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதான சந்தேகம் அமெரிக்காவுக்கு இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் உரையாற்றிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் சாமுவெல் ஜே லொக்லியர், தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் செயற்பாடுகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு இதற்கு முன்னரும் பலமுறை வந்ததுண்டு.
இந்தியாவின் புனேயில் நகரிலுள்ள ஜோ்மன் பேக்கரியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெய்க் என்பவர் தனக்கு கொழும்பில் தான் குண்டு பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
அவர் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சோ்ந்தவர்.
இதைவிட ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், வெளிநாட்டைச் சோ்ந்த அல்கொய்தா தலைவர் ஒருவரை அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் இலங்கை அரசாங்கம் கைது செய்து ஒப்படைத்தது.
புத்தளத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்ட அந்த அல்கொய்தா தலைவர், பின்னர் புதுடில்லியில் இருந்துவந்த சிஐஏ முக்கியஸ்தர் ஒருவரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டார். அந்த வெளிநாட்டு அல்கொய்தா தீவிரவாதியை ஏற்றிச் செல்வதற்காகவே அமெரிக்காவின் சிறப்பு விமானம் கட்டுநாயக்க வந்திருந்தது.
இதுபற்றிய குறிப்புகள் அண்மையில் அமெரிக்க மனித உரிமை அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்டமை நினைவிருக்கலாம். மிக அண்மையில் பொஸ்டனில் குண்டுவெடித்த போதும், அமெரிக்க ஊடகங்கள் சிலவற்றில் இலங்கை பங்களாதேஷ் வழியாகவே ஈரானுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக செய்தி வெளியிட்டன.
ஆனால் அதனை அமெரிக்காவோ, இலங்கையோ அதிகாரபூர்வமாக மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.
இத்தகைய சூழலில் முஸ்லிம்கள் மீதான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையில் வேரூன்றுவதற்குக் காரணமாகிவிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை கொள்ளக் கூடும்.
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது அது சார்ந்த ஆயுத நடவடிக்கைகள் மோற்றம் பெறுவது தெற்காசியாவின் அமைதிக்கே ஆபத்தானது.
இதனால் அமெரிக்காவின் சிஐஏ போன்ற புலனாய்வு முகவர் அமைப்புகளின் கவனம் இலங்கை மீது குவிந்திருக்கும் என்பதை ஆச்சரியமான செய்தியாக கருத முடியாது.
இது மட்டுமன்றி இலங்கையில் அமெரிக்க நலன்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணிக்கவும் தவறாது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை அதற்கு மிகவும் அவசியமானதொரு நாடு.
இலங்கையில் உள்ள அரசாங்கத்தை அமெரிக்கா எந்தளவுக்கு விமர்சித்தாலும் அதற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இலங்கை அரசுக்கு எதிராக அது செயற்படாது.
இங்கு அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வேறு வேறு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு என்பது நிலையானது. அதனுடன் அமெரிக்காவுக்கு முரண்பாடுகள் இல்லை. அரசாங்கம் என்பது ஆட்சியாளர்களைக் குறிக்கிறது.
இங்கு ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் அமெரிக்கா ஒத்துப் போகவில்லை.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அதற்கு முரண்பாடுகள் உள்ளன.
அதனால்தான் தனது ஆட்சியை அரசாங்கத்தைக் கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாக அவர் அடிக்கடி புலம்புவதுண்டு.
தனது எல்லைகளுக்கு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு இலங்கை விவகாரம் செல்வதை தடுப்பதற்காக அமெரிக்கா தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்காவுக்கு சந்தேகத்தையும் கவலையையும் அளிக்கும் வகையிலான சீனாவின் தலையீடுகள் இலங்கையில் அதிகரித்துள்ளதால் எப்போதும் தனது நலனை உறுதிப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா கவனத்துடன் செயற்படும்.
அடுத்து இலங்கை விவகாரத்தில் உற்றுநோக்கும் ஒரு தரப்பாக உள்ளது இந்தியா.
இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ எனப்படும் ஆய்வு பகுப்பாய்வு பிரிவு, இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யத் தொடங்கி பல தசாப்தங்களாகி விட்டன.
பல்வேறு சந்தர்ப்பங்களில் றோவின் தவறான முடிவுகள், செயற்பாடுகள், நடவடிக்கைகளால் இலங்கையில் சிக்கல்கள் வலுத்தது என்பதும் உண்மையே.
இத்தகைய குற்றச்சாட்டை இருதரப்புகளுமே கூறுகின்றன.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் தொடங்கி அவர்களை வீழ்த்தியது வரையிலான செயற்பாடுகளில் றோவுக்கும் பங்கு இருந்தது.
இப்போதும் கூட றோவின் கவனம் இலங்கை மீது அதிகமாகவே உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது.
இதற்கு உதாரணமாக அண்மையில் தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திருப்பதிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி அரை மணிநேரம் சந்தித்துப் பேசியிருந்தார்.
அவர் என்ன பேசினார், எதற்காக சந்தித்தாார என்பதெல்லாம் வெறும் ஊகத் தகவல்களாகவே வெளியாகின.
அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதம் இல்லை.
எனினும் ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒருவர் இன்னொரு நாட்டின் தலைவரை சந்திப்பது வழக்கமானது அல்ல, அரிதானது.
அந்த மரபை மீறி நடந்த இந்தச் சந்திப்பு இலங்கை மீதுள்ள றோவின் கவனத்தையும் கரிசனையையும் வெளிப்படுத்தியது.
இன்னொரு பக்கத்தில் சீனாவிடம் இருந்தும் பாகிஸ்தானிடம் இருந்தும் தனது நாட்டைமப் பாதுகாக்க வேண்டிய தேவை றோவுக்கு உள்ளது என்பதையும் கவனத்தில் கொளன்ள வேண்டும்.
ஏனென்றால் இந்த இரண்டு நாடுகளினதும் இந்திய நலனுக்கு விரோதமான புலனாய்வுச் செயற்பாடுகள் இலங்கையில் அதிகளவில் இடம்பெறுவதாக இந்தியா நம்புகிறது.
இந்தியாவுக்குத் தனது உளவாளிகளை ஊடுருவ வைக்கும் தளமடாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இலங்கையைப் பயன்படுத்தி வருவதாக ஏற்கனவே இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகளில் ஒன்றையடுத்து பாகிஸ்தான் தூதரகத்தில் செயற்பட்ட ஒலு ஐஎஸ்ஐ அதிகாரி சில மாதங்களுக்கு முன்னர் திருப்பி அழைக்கப்பட்டார்.
தற்போது கொழும்பில் பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் குவாசிம் குரேசி விவகாரத்திலும் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
சீனா விவகாரத்தில் இந்தியாவின் கலக்கம் இன்னும் விரிவானது.
சீனா தனது புலனாய்வு முகவரமைப்புகளை எந்தளவுக்கு இலங்கையில் ஈடுபடுத்தியுள்ளது என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.
எனினும் பல்வேறு திட்டங்களில் பணியாற்றுவதற்காக பெருமளவு சீனர்கள் இலங்கையில் நிலைகொண்டுள்ள சூழலில் சீனப் புலனாய்வு முகவர்களால் தாராளமாகவே கிடைக்கவும் கூடும்.
அதேவேளை பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இலங்கை மீது சீனா செலுத்தி வரும் ஆதிக்கம் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைக் கண்காணிக்கும் ஒரு மையமாக இலங்கையை சீனா பயன்படுத்துவதாக ஒரு சந்தேகம் உள்ளது.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சீனாவின் முதன்மையான வெளியகப் புலனாய்வு அமைப்பான அரச பாதுகாப்பு அமைச்சின் உதவி அமைச்சர் சோயு குய்ங் கடந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்க மேற்கொண்டிருந்'த பயணம் அமைந்தது.
இலங்கையை தனது தளமாக்கிக் கொள்வதற்கும், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் தலையீடுகளை உடைப்பதற்கும், சீனா தனது புலனாதய்வு அமைப்புகளை இங்கு வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாறு முக்கியமான புலனாய்வு அமைப்புகளினது கவனம் இலங்கை மீது குவிந்துள்ள இந்தச் சூழல் ஆரோக்கியமானதொன்றாக இருக்க முடியாது.
இவை தவிர வேறு நாடுகளினது புலனாய்வு அமைப்புகளினது செயற்பாடுகளும் தாராளமாகவே இலங்கையில் இடம்பெறலாம்.
ஏனென்றால் இலங்கையுடன் தொடர்புடைய நாடுகளின் செயற்பாடுகளை கண்காணிக்க இன்னும் பல நாடுகள் முயற்சிக்கலாம்.
எவ்வாறாயினும் நிரந்தர அமைதி ஒன்றுக்கான வழியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில் பல்வேறு நாடுகளினதும் புலனாய்வு அமைப்புகளது கவனத்தை ஈர்க்கும் களமாக இலங்கை மாறியுள்ளமை ஒரு ஆபத்தான அறிகுறியே.
ஏனென்றால் புலனாய்வு அமைப்புகள் எல்லாமே தமது நாட்டின் நலன்களை குறிவைத்தே செயற்படுபவை.
தமது நலன்களுக்காக இலங்கைத் தீவின் நலன்களைப் பலியிடுவதற்கு எந்த நாடுமே தயங்காது.
இந்த யதார்த்தம் அமெரிக்காவுக்கும் பொருந்தும், சீனாவுக்கும் பொருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும்.
இது இலங்கைக்கும் தெரியும்.
சுபத்ரா
No comments:
Post a Comment